Sunday 11 December 2011

கெடுவான் கேடு நினைப்பான்

வசந்தபுரி மகாராணி நோய்ப் படுக்கையில் துவண்டு கிடக்க, இளவரசன் விக்கிரமன் கண்ணீர் சிந்தியவாறு அருகில் இருக்க, மதிவாணர், முத்துராசர் ஆகிய இரண்டு அமைச்சர்களும் கைபிசைந்தவாறு நின்றார்கள்!
“மதியூக மந்திரிகளே! இனி நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லை. பத்து வயதே நிரம்பப் பெற்ற என் மைந்தன் விக்கிரமனை உங்களிடம் ஒப்படைத்துச் செல்லுகிறேன். நீங்கள் தான் அவனுக்குப் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்” என்று மகாராணி கண்ணை மூட, அதற்கான இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்பு, நல்ல நாள் ஒன்று பார்த்து இளவரசன் விக்கிரமனுக்கு முடிசூட்டு விழா நடத்தி, இரண்டு அமைச்சர்களும் அவனுக்கு உறுதுணையாக இருந்து இராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்கள்.
இரண்டு அமைச்சர்களில் மதிவாணர் நல்லொழுக்கம் நிரம்பப் பெற்ற திறமைசாலி. அறிவும் ஆற்றலும் எங்கிருந்தாலும் அதற்கு மதிப்புக் கொடுத்து பெருமைப்படுத்தும் பண்பினர். முத்துராசரின் அறிவாற்றலைக் கண்டு முன்பு வசந்தபுரி அரசனாயிருந்த மகேந்திர பூபதிக்குப் பரிந்துரை செய்து, அதன்பின் மகாராணி காலத்தில், அவர் உதவி அமைச்சர் பதவிக்கே உயர்வதற்குக் காரணமாக இருந்தவர் மதிவாணர்தான்.
ஆனாலும் உதவி அமைச்சர் முத்துராசருக்கு மதிவாணர் மேல் ஒருவிதக் காழ்ப்புணர்ச்சி இருந்தது. மதிவாணர் இருக்கும்வரை, சூரியனிடமிருந்து ஒளி பெறும் சந்திரனைப் போலத்தான் இருக்க முடியுமே தவிர, தானே சூரியனாகப் பிரகாசிக்க முடியாது என்ற சுயநல உணர்வு அவரது இதயத்தை வாட்டிக் கொண்டே இருந்தது. இதற்கு ஒரு வழி செய்ய முடியாதா என்று பல நாளாக ஏங்கிக் கொண்டிருந்தார் முத்துராசர்.
ஒரு நாள் இளவரசனும் முத்துராசரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, “அமைச்சரே! என் அன்னையார் இப்போது சொர்க்கத்தில் சுகமாக இருப்பார்களல்லவா?” என்றான் இளவரசன்.
“இளவரசே! மகாராணியார் இருப்பது சொர்க்கமா? நரகமா? என்பதை நிச்சயமாக எப்படிச் சொல்ல முடியும்? இப்படி இருந்தாலும் இருக்கலாம். அப்படி இருந்தாலும் இருக்கலாம்” என்று சந்தேகத்திற்குரிய ஒரு பதிலைக் கொடுத்தார் முத்துராசர்.
துணிக்குற்ற இளவரசன், “என் அன்னையார் எங்கிருக்கிறார்கள் என்று எனக்கு உடனே தெரிந்தாக வேண்டும். அதற்கு என்ன வழி?” என்றான்.
“யாராவது ஒருவரை சொர்க்கத்திற்கு அனுப்பித்தான் பார்த்து வரச் சொல்ல வேண்டும்” என்றார் முத்துராசர்.
“யாரை அனுப்பலாம்?” என்றான் இளவரசன்.
சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த முத்துராசர், “இதற்குத் தகுதியானவர் எனக்குத் தெரிந்த வரையில் மதிவாணர் ஒருவர் தான்!” என்று விநயமாகப் பதில் சொன்னார்.
“எப்படி அனுப்புவது?” என்று சந்தேகம் கேட்டான் இளவரசன்.
“மகாராணியாரின் உடலை எவ்விதம் சிதையில் வைத்துத் தீயிட்டு அனுப்பினோமோ, அதே போல் தான் மதிவாணரையம் அனுப்ப வேண்டும்” என்ற சந்தேகம் தீர்த்தார் முத்துராசர்.
உடனே மதிவாணரை வரவழைத்தான் விக்கிரமன். விவரம் எல்லாம் சொல்லி, அவர் தான் அந்தக் காரியத்தைச் செய்து உதவ வேண்டும் என்று முதலில் வேண்டுகோள் விடுத்துக் கடைசியில் உத்தரவில் முடித்தான்.
முத்துராசரின் வஞ்சக எண்ணத்தைப் புரிந்து கொண்ட மதிவாணர், புன்முறுவல் மாறாத முகத்தினராய், “நாளையே ஏற்பாடுகள் நடக்கட்டும்” என்ற பதிலளித்தார்.
அன்று இரவே இரகசியமாக நம்பகமான ஐம்பது பணியாளர்களை அழைத்து, இடுகாட்டில் இருந்து பக்கத்தில் இருந்த பாழடைந்த மண்டபம் வரைக்கும் சுரங்கம் தோண்டுகிற வேலையைச் செய்து முடித்தார் மதிவாணர்.
அடுத்த நாள், மாலையும் கழுத்துமாய் மதிவாணர் ஊர்வலமாய் இடுகாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமைச்சர் சொர்க்க லோகம் போகும் காட்சியைக் காண ஊரே திரண்டுவிட்டது.
இடுகாட்டில் சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டுச் சிதை தயாராக இருந்தது. அமைச்சரின் முன்னேற்பாட்டின் படி, மையப் பகுதியில் சுரங்கப் பாதைக்கு இடம்விட்டு, வெளிப்பார்வைக்கு அது தெரியாத படி சுற்றிலும் சிதை அடுக்கப்பட்டிருந்தது. ஊர்வலம் வந்ததும் சிதைக்குத் தீ வைக்கப்பட்டது. மரப்பலகைகளால் அமைந்திருந்த மேடையின் மீது ஏறி, கொழுந்துவிட்டு எரியும் சிதையின் நடுவில் குதித்தார் மதிவாணர். கூடியிருந்த அனைவரும் “வாழ்க மதிவாணர்!” என்று வானதிரக் குரல் எழுப்பினர்.
காரியம் கன கச்சிதமாக முடிந்தது என்பதில் முத்துராசருக்கு முழுத் திருப்தி. இனிமேல் அவருக்குப் போட்டியாக யாரும் இல்லை. அவர் வைத்தது தான் சட்டம்.
சிதையின் நடுவில் குதித்த மதிவாணர், சுரங்கப் பாதை வழியாக, பாழடைந்த மண்டபத்தை அடைந்து, இருட்டும் வரை அங்கேயே ஒளிந்து கொண்டிருந்து, பின்பு, தனது மாளிகையை அடைந்து, அங்கேயே இரகசியமாக யாருக்கும் தெரியாமல் பொறுமையாகக் காலங்கழித்தார்.
இப்போது அமைச்சர் முத்துராசரின் புகழ் கொடி கட்டிப் பறந்தது. இளவரசன் அடிக்கடி, “மதிவாணர் சொர்க்கத்திலிருந்து எப்போது திரும்புவார்?” என்ற கேள்வியைக் கேட்க, “சொர்க்கம் போய் வருவது சாமானியமா? சமயத்தில் ஆண்டுக் கணக்கில் கூட ஆகலாம்!” என்று முத்துராசர் தந்திரமாய்ப் பதிலளித்து வந்தார்.
ஆறு மாதங்கள் கழிந்த பின்பு ஒரு நாள் காலை மதிவாணர் திடீரென்று மாளிகையைவிட்டுக் கிளம்பி, நீண்டு வளர்ந்த தாடியும் பரட்டைத் தலையுமாக, இளவரசன் முன் வந்து நின்றார்.
மதிவாணரைப் பார்த்ததும் இளவரசனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.
அமைச்சர் முத்துராசரோ, “சிதையில் விழுந்து செத்த மதிவாணர் எப்படி உயிர் பெற்று வந்தார்?” என்று ஒன்றும் விளங்காதவராய், என்ன நடக்கப் போகிறதோ என்று அச்சத்துடன் நின்றார்.
“அம்மா நலமாக இருக்கிறார்களா?” என்று ஆவலை அடக்க முடியாதவனாய் இளவரசன் கேட்க, “மகாராணியார் சொர்க்கத்தில் நலமாக இருக்கிறார்கள். அரசே! இன்னொரு மகிழ்ச்சியான செய்தி! அவர்கள் சொர்க்கத்தில் தனியாக இல்லை. உங்கள் தந்தையாரான மகேந்திர பூபதியுடன் ஆனந்தமாய் இருக்கிறார்கள்” என்று மதிவாணர் தாடியைத் தடவியவாறு பதில் சொன்னார்.
மகிழ்ச்சியடைந்த இளவரசன், “ஆமாம்.. நீங்கள் ஏன் தாடியும் பரட்டைத் தலையுமாக நிற்கிறீர்கள்” என்று வினவினான்.
“சொர்க்கத்தில் சிகை அலங்கரிப்போர் கிடைக்கவில்லை அரசே! அதனால் முடி வளர்ந்துவிட்டது! தங்களைப் பார்க்கும் ஆர்வ மிகுதியால் நேராக இப்படியே வந்து விட்டேன்! அரசர் அனுமதித்தால் மாளிகைக்குச் சென்று முடிகளைந்து வருகிறேன்!” என்றவாறு மதிவாணர் புறப்பட்ட போது, “ஆமாம்.. அம்மா ஏதாவது சொல்லி அனுப்பினார்களா?” என்று இளவரசன் கேட்கவே, “பார்த்தீர்களா முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன்! மகாராணியார் ஒரு சின்னத் தகவலைச் சொல்லி அனுப்பினார்கள். இத்தனை வருஷமாக உங்கள் தந்தையார் மகேந்திர பூபதி, முடி களையாததால் தலை முகமெல்லாம் பயங்கரமாய் முடி மண்டிக்கிடக்கிறது. அது மிகவும் இடைஞ்சலாக இருப்பதால், முடி களைய முடி வெட்டும் கலையில் வல்லவரான முத்துராசரை அனுப்புமாறு உங்களிடம் சொல்லச் சொன்னார்கள்” என்று விநயமாகப் பதிலளித்தார் மதிவாணர்.
அவ்வளவுதான்! முத்துராசர் சொர்க்கம் புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அன்றே செய்யப்பட்டன. அவரிடம் கொடுத்தனுப்ப, கத்தி கத்தரிக்கோல் அனைத்தும் அடங்கிய அழகான பெட்டி ஒன்றும் தயார் செய்யப்பட்டது.
“வேண்டாம் அரசே!” என்று முத்துராசர் எவ்வளவோ புலம்பிப் பார்த்தார்.
“மதிவாணர் தாடியும் பரட்டைத் தலையுமாகத் திரும்பினார்! உங்களுக்கு அந்தக் கவலை இல்லை. கையோடு தான் பெட்டி கொண்டு செல்கிறீர்களே! மறந்து விடாதீர்கள்! எனக்கிருப்பது போல் அழகான கிருதா வைத்து, என் தந்தையாருக்கு நவநாகரிகமாய் முடி களைய வேண்டும்!” என்று இளவரசன் உத்தரவு பிறப்பித்தவனாய், இடுகாட்டில் கொழுந்துவிட்டு எரிந்த சந்தனச் சிதையில், முத்துராசரை அவனே முன் நின்று பிடித்துத் தள்ளினான்.
மதிவாணரைச் சொர்க்கத்திற்கு அனுப்ப நினைத்த முத்துராசர், இப்போது நரகத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

No comments:

Post a Comment