Tuesday 29 November 2011

சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்!

சிறந்த அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆல்ஃபிரட் ஹிச்காக், திறமையான இயக்குநருங்கூட. பார்ப்பவர்களை நொடிக்கு நொடி திகிலுக்குள் மூழ்க வைக்கும் சஸ்பென்ஸ் படங்கள் எடுப்பதில் வல்லவர். அவரைப் பாராட்டிப் பெரிய ஓட்டல் ஒன்றில் விருந்து வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. செல்வச் செழிப்பு மிக்க வணிகப் பெருமக்கள் பலரும் வந்திருந்தார்கள்.
ஹிச்காக் அருகில் அமர்ந்திருந்த செல்வந்தர் திடீரென்று, “உங்கள் படங்களில் மயிர்க்கூச்செறியும் சஸ்பென்ஸ் நிரம்பியிருப்பது உண்மைதான். அவை உங்கள் கை வண்ணம் தான் என்று நான் நம்ப வேண்டுமானால், இப்போதே சஸ்பென்ஸ் திரில் சொல்லுங்கள்” என்றார்.
இதைக் கேட்ட ஹிச்காக், “நான் ஒன்றும் அவ்வளவு பெரிய கெட்டிக்காரன் இல்லை. உடனே உங்களை சஸ்பென்ஸில் ஆழ்த்தும் ஆற்றல் என்னிடம் கிடையாது. இருந்தாலும் என் நண்பர் மார்ட்டின் என்பவருக்கு ஏற்பட்ட ஒரு சுவையான அநுபவத்தைக் கூற விரும்புகிறேன்” என்றவாறு கீழ்கண்ட நிகழ்ச்சியை விவரித்தார்.
பாரிஸ் நகரில் செலவழிக்க பிரெஞ்சுப் பணம் தேவையாக இருந்தது. அதனால் தன் மனைவியை ஓட்டல் அறையிலேயே பத்திரமாய் இருக்கும்படிச் சொல்லிவிட்டு, தன்னிடமிருந்த டாலர் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு, அந்நியச் செலவாணி மாற்றித் தரும் வங்கி ஒன்றுக்குப் போய், பிரெஞ்சுப் பணம் மாற்றிக் கொண்டார். இந்த அலைச்சலில் கொஞ்சம் அசதி ஏற்பட்டதால் தலைவலி தோன்றவே, ஆஸ்பிரின் மாத்திரை போட்டுக் காபி சாப்பிடலாம் என்று எதிரில் இருந்த சிற்றுண்டி விடுதியில் நுழைந்து, காபிக்கு ஆர்டர் செய்தார்.
அப்போது கிண்கிணிக் குரலில் சிரிப்பொலி கேட்கவே, தலை நிமிர்ந்து பார்த்தார் மார்ட்டின். அருகில் மயக்கும் பேரழகுடன் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, “என்ன உதவி தங்களுக்கு நான் செய்யக் கூடும்,” என்று ஆடவர்க்கே உரிய ஒயிலோடு ஆங்கிலத்தில் கேட்டார். ஆனால் அந்தப் பெண் ஒன்றும் பேசாமல், முத்துப் பற்கள் தெரிய முகத்தில் ஒரு மோகனப் புன்னகையைத் தவழவிட்டவளாய், கையகலக் காகிதத் துண்டு ஒன்றை டேபிளில் வைத்துவிட்டு, உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விட்டாள்.
காகிதத் துண்டை எடுத்துப் பார்த்த மார்ட்டினுக்கு ஒன்றும் புரியவில்லை. பிரெஞ்சு மொழியில் ஏதோ எழுதியிருந்தது. ‘அடடா..! பிரெஞ்சுக் கற்றுக் கொள்ளாதது எவ்வளவு தப்பு” என்று மனத்திற்குள்ளாகவே எண்ணிக் கொண்டிருந்த போது, சர்வர் காபியைக் கொண்டு வந்து வைத்தான். ஆவலை அடக்க முடியாத மார்ட்டின், அந்தக் காகிதத் துண்டை சர்வரிடம் கொடுத்து, வாசித்துக் காட்டும்படியாய்க் கேட்டார்.
அதைப் படித்த சர்வருக்கு முகமெல்லாம் ‘குப்’பென்று ரத்தம் பாய்ந்து சிவப்பானது. ‘என்ன?’ என்றார் மார்ட்டின். பதில் பேசாத சர்வர் பற்களை நரநரவென்று கடித்தவாறு, முஷ்டி பிடித்த தன் வலக்கரத்தை டேபிளில் ஓங்கிக் குத்திவிட்டு, அவ்விடத்தைவிட்டு அகன்றான். ஒன்றும் புரியாத மார்ட்டின், சர்வர் கீழே போட்டுச் சென்ற காகிதத் துண்டை எடுத்துக் கொண்டு, காபியில் ஆஸ்பிரின் மாத்திரையைக் கலந்து சாப்பிட்டபின், டேபிளில் அதற்குரிய சில்லரையை வைத்துவிட்டு எழுந்தார்.
சிற்றுண்டி விடுதியின் கேஷ் கவுண்டரைக் கடந்தபோது, அந்தக் காகிதத் துண்டை கேஷியரிடம் கொடுத்து படித்துச் சொல்லும்படி பவ்யமாக கேட்டுக் கொண்டார் மார்ட்டின். அதைப் படித்த கேஷியர், கோபம் கொப்பளிக்க, பிரெஞ்சு மொழியில் ஏதோ கத்தினார். உடனே பயில்வான்கள் போன்ற இரண்டு பணியாளர்கள் அங்கே வந்து, மார்ட்டினின் கோட்டைப் பற்றி இழுத்து, வெளியிலே தள்ள, வீதியில் வந்து குப்புற விழுந்தார்.
‘இது என்ன விபரீதம்?’ என்று எண்ணமிட்டவராய், கோட்டில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டிவிட்டவாறு, வீதியில் நடக்க ஆரம்பித்தார். ‘டாண் டாண்’ என்று மாதா கோவில் மணியோசை கேட்டது. கைத்தடி ஊன்றியவாறு எதிரில் பாதிரியார் வந்து கொண்டிருந்தார். ‘இவர் தான் இதற்குச் சரியான ஆள்’ என்று முடிவு செய்த மார்ட்டின், அந்தப் பாதிரியாரை அணுகி, ‘இதைப் படித்துக் காட்டுங்களேன்’ என்று காகிதத் துண்டைக் கொடுத்தார். அதைப் படித்துப் பார்;த்த பாதிரியார், உடம்பெல்லாம் பதற, ‘கர்த்தரே காப்பாற்றும்’ என்று முணுமுணுத்தவாறு, மார்பில் சிலுவைக் குறியிட்டு, கைத்தடியை நழுவ விட்டதால், கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டார்.
மார்ட்டினுக்கு முகம் பேயறைந்தாற்போல் ஆகிவிட்டது. இனிமேல் முயன்றால் பேராபத்தாய் முடியும் என்று எண்ணியவாறு, நேரே தன் மனைவியை விட்டு வந்திருந்த ஓட்டலுக்குப் போனார். அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. மனைவிக்கு பிரெஞ்சு மொழி தெரியும். உயிரையே தன் மேல் வைத்திருக்கும் மனைவி, தவறாக ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டாள் என்று முடிவு செய்தவராய், நடந்ததையெல்லாம் விளக்கிக் கூறி, காகிதத் துண்டை அவளிடம் கொடுத்து, ‘அப்படி அதில் என்ன தான் எழுதியிருக்கிறது?’ என்று கேட்டார்.
அவளும் அதைப் படித்துப் பார்த்தாள். அவ்வளவுதான்! முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது! ஒன்றுமே பேசாத அவள், நேரே வக்கிலைத் தேடிச் சென்று, தன் கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கோரி, கோர்ட்டில் வழக்கு தொடுத்துவிட்டாள்.
பயணம் வந்த இடத்தில் இப்படி ஒரு பயங்கரம் நேர்ந்ததே என்று தலையைப் பிய்த்துக் கொண்டார் மார்ட்டின். ‘உயிருக்குயிரான மனைவியே விவாகரத்துக் கோரி வழக்குத் தொடுத்துவிட்ட பிறகு இனி வாழ்வில் என்ன இருக்கிறது. உயிரை விட வேண்டியதுதான்’ என்று முடிவுக்கு வந்தவராய், பாதுகாப்புக்காகப் பெட்டியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து, நெற்றிப் பொட்டில் வைத்து, விசையை அழுத்தப் போனார். பளிச் என்று ஓர் எண்ணம். ‘சாவது தான் சாகப் போகிறோம். இவ்வளவுக்கும் காரணமான அந்த காகிதத் துண்டில் என்னதான் எழுதியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் நிம்மதியுடன் சாகலாம்’ என்ற நினைப்பில், அதை எடுத்துக் கொண்டு ஓர் இராணுவ அதிகாரியின் வீட்டுக்குப் போனார்.
“என்ன விஷயம்?” என்று அந்த இராணுவ அதிகாரி கேட்க, அதற்கு மார்ட்டின், நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறி, “முதலில் இந்தத் துப்பாக்கியைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று தான் கொண்டு போன கைத்துப்பாக்கியை அவரிடம் கொடுத்துவிட்டு, “நான் தரப் போகும் காகிதத் துண்டில் ஏதோ மர்மச் செய்தி அடங்கி இருக்கிறது. அதை நீங்கள் எனக்குத் தயவு செய்து படித்துக் காட்ட வேண்டும். மற்றவர்களுக்கு வந்தது போல் உங்களுக்கும் கோபம் வந்தால், அந்தத் துப்பாக்கியால் என்னைச் சுட்டுவிடுங்கள். ஆனால் அதற்கு முன்பு, காகிதத் துண்டில் எழுதியுள்ள விஷயம் என்ன என்பதை மட்டும் எனக்குச் சொல்லிவிட வேண்டும்” என்றார்.
இதைக் கேட்ட இராணுவ அதிகாரி, “முதலில் அந்தக் காகிதத் துண்டை எடுங்கள்” என்றார்.
மார்ட்டின் அதை எடுக்கக் கோட்டுப் பாக்கெட்டில் கையை விட்டார். திகீரென்றது. காரணம். அந்தக் காகிதத் துண்டைக் காணவில்லை.
இந்தக் கட்டத்தில் ஹிச்காக்கின் உதவியாளர் அவரிடம் வந்து காதில் ஏதோ மெதுவாகச் சொல்லவே, “அப்படியா?” என்றவாறு சோபாவைவிட்டு எழுந்தார்.
ஆனால், கதை கேட்டுக் கொண்டிருந்த செல்வந்தர், “முடிவைச் சொல்லிவிட்டுப் போங்கள்! அந்தக் காகிதத் துண்டில் அப்படி என்னதான் எழுதியிருந்தது?” என்று ஆவல் மிகுந்தவராய்க் கேட்டார்.
“மாலை ஐந்து மணிக்கு என் வீட்டுக்கு வாருங்கள். சொல்கிறேன்” என்றவாறு ஹிச்காக் போயே போய்விட்டார்.
மாலை வரை செல்வந்தர் தலையைப் பியத்துக் கொண்டார். ஆவலை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சரியாக ஐந்து மணிக்கு ஹிச்காக்கின் வீட்டிற்குச் சென்று “இனியும் என்னால் தாங்க முடியாது. சொல்லுங்கள் அந்த மர்மச் செய்தியை!” என்றார்.
அதைத் தெரிந்து கொள்ள உங்களைவிட எனக்கும் ஆவல் தான். ஆனால், மார்ட்டின் என்ன தேடியும் அந்தக் காகிதத் துண்டு கிடைக்கவேயில்லையே!” என்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் ஹிச்காக்.

Wednesday 23 November 2011

முள் எடுக்கும் முள்

கோதையாறு நீர்த் தேக்கத்துக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கிராமம். இது குமரி மாவட்டத்தில் கேரள நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ளது. அங்கு, சின்னச்சாமி ஒரு பெரிய புள்ளி! நிறைய ரப்பர் எஸ்டேட்! வயது அறுபதுக்கு மேல் ஆனாலும் உடம்பில் ஒரு மினுமினுப்பு! சம்சாரம் தவறிப்போய் நாலைந்து வருஷமிருக்கும்! ஒரே மகன். டாக்டருக்குப் படித்துவிட்டு உள்ளுரிலேயே வேலை பார்க்கிறான்.
சின்னச்சாமியின் ரப்பர் எஸ்டேட்டுக்குப் பக்கத்தில் ஒரு காணி நிலம். அதில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள்! அத்துடன் சின்ன வாழைத் தோட்டம்! இது பெரியசாமி என்ற கிழவனுக்குச் சொந்தமாக இருந்தது. சின்னசாமி கூட அடிக்கடி, “ஐநூறு ஏக்கர் ரப்பர் எஸ்டேட் இருந்து என்ன பிரயோஜனம்! எனக்குப் பெயர் சின்னசாமிதான்! ஆனால், நீதான் பெரியசாமியாக இருக்கிறாய்!” என்று பெயர்ப்பொருத்தத்தைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லுவார்.
பெரியசாமி குடிசை வீட்டில் திடீரென்று ஒரு நாள் அதிசயம். நீலவானத்துப் பூரண சந்திரன் ‘கலகல’வென்று சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது.
ஆம்! பதினாறு வயது பருவ மங்கை! மணிக்கட்டு எலும்பு எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கமுடியாத அளவு மொழுமொழுவென்ற சதைப்பிடிப்பு! பளபளக்கும் பொன்மேனியில் மலையாளத்து மினுமினுப்பு! பார்த்துவிட்டால் போதும், பார்வையை வேறு பக்கம் திருப்பவே மனம் வராது! அப்படி ஒரு கவர்ச்சி!
அவளுக்குப் பெயர் கோதையம்மை. பெரியசாமியின் மகள் வயிற்றுப் பேத்தி. தக்கலைக்குப் பக்கத்து கிராமத்தில் தாயிழந்த பெண்ணாக, தந்தையின் ஓடுகாலிதனத்தைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த இவளைப் பெரியசாமிக் கிழவன் தன்னுடைனேயே இருக்கும்படி அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.
சின்னசாமியின் கண் ஒரு நாள் கோதையம்மையின் மேல் விழுந்துவிட்டது. அவ்வளவுதான்! தேகம் முழுவதும் ஒரு சிலிர்ப்பு உணர்ச்சி! உடம்பின் அத்தனை நரம்புகளிலும் முறுக்கேறிய மதமதப்பு!
அடுத்த நாள் பெரியசாமியின் குடிசை வீட்டுக்கு வெற்றிலைப் பாக்குப் பழத் தட்டுடன் சின்னசாமி விஜயம் செய்தார்.
“என்ன விஷயம்” என்று கேட்டான் பெரியசாமிக்கிழவன். பரிசம் போட வந்திருப்பதாக, சின்னசாமியிடமிருந்து பதில் வந்தது.
பெரியசாமிக் கிழவனுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. சின்னசாமியின் மகனோ டாக்டர். அவன் பேத்திக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா?
“உங்க மகனைக் கட்டிக்க என் பேத்தி கொடுத்து வச்சிருக்கணும்!” என்றான் பெரியசாமிக் கிழவன் தழுதழுத்தக் குரலில்.
சின்னசாமி சிடுசிடுத்தார். “மகனுக்குப் பெண் பார்க்கல்லே கிழவா! எனக்குத்தான் பார்க்கிறேன்! உன் பேத்தியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றார் ஓங்காரக் குரலில்.
முதலில் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் தவித்த பெரியசாமிக் கிழவனுக்கு இப்போது வாயும் ஓடவில்லை. சிலையாக நின்றான். ஆனால், கதவுப் பக்கத்தில் மறைந்து நின்ற கோதையம்மை ‘களுக்’ என்று சிரித்தாள்.
“பாத்தியா! பெண்ணுக்குச் சம்மதம்!” என்றார் சின்னசாமி.
“ஆமா! உங்களுக்கு மாலை போட காத்திருப்பேன்!” என்று கோதையம்மையின் குரல் கதவுக்குப் பக்கமிருந்து வந்த போது, “ஆஹா! ஆஹா!” என்று பரமானந்தமாகச் சின்னச்சாமி வாயைத் திறக்க, பல் செட்டு பளபளத்தது.
ஆனால், அடுத்து வந்த வார்த்தைகள் சின்னசாமியை அதிர வைத்தன.
“சின்னசாமித் தாத்தா! பச்சை மூங்கியிலே, நாலு பேருக்கு மத்தியிலே நீங்க கடைசி ஊர்வலம் வரபோது, உங்களுக்கு மரியாதை செலுத்தி மாலை போட நான் காத்திருப்பேன்!”
காணி நிலத்தில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரத்தோடிருக்கும் பத்தினிப் பெண்ணைத் தேடி வந்த சின்னச்சாமி அவமானம் தாங்க முடியாமல் கருவிக் கொண்டே வெளியேறினார். சும்மா இருப்பாரா? அடுத்த நாளே ஊர்ப்பஞ்சாயத்தார் முன்னிலையில் வழக்குப் போட்டார். கிழவன் அவமானப்படுத்திவிட்டான் என்றா? அது தான் இல்லை!
ஆறு மாதத்திற்கு முன்பு சின்னச்சாமியிடம் பெரியசாமிக் கிழவன் ஐயாயிரம் ரூபாய் கைமாற்று வாங்கியதை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை! அதைப் பஞ்சாயத்தார் வாங்கிக் கொடுக்க வேண்டும்! இது தான் வழக்கு.
பெரியசாமிக் கிழவன் வெலவெலத்துப் போனான். “பணம் கொடுக்காமலே அபாண்டமாய் இப்படிப் பழி சுமத்தலாமா?” என்று சின்னச்சாமியிடம் பேசிப் பார்த்தான். “நீயும் உன் பேத்தியுமாக என்னை அவமானப்படுத்தியதற்கு பழி வாங்காமல் விட மாட்டேன்! பஞ்சாயத்துக்கு வா! சாட்சியோடு நிரூப்பிக்கிறேன்!” என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டார் சின்னச்சாமி.
சாட்சியோடு நிரூபித்துவிட்டால் பெரியசாமிக் கிழவனின் பாடு அதோகதி தான். வாங்காத பணத்தை அவன் கட்டியாக வேண்டும். இருக்கும் ஒரு காணி நிலத்துக்கும் ஆபத்து வந்துவிடும்.
பஞ்சாயத்தும் கூடியது. சின்னச்சாமியின் சார்பில் இரண்டு பேர் சாட்சி சொன்னார்கள். அதன் சாராம்சம்: “நாங்கள் ஆடி அமாவாசையன்று சின்னச்சாமியின் வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போது பெரியசாமிக் கிழவன் இவரிடத்தில் ஐயாயிரம் ரூபாய் கைமாற்று வாங்கிக் கொண்டு ஐப்பசி மாதத்தில் திருப்பிக் கொடுப்பதாகச் சொல்லிப் போனான்!”
இந்தச் சாட்சிக்குப் பிறகு பஞ்சாயத்தார் பெரியசாமிக் கிழவனை விசாரித்தார்கள். நான் சொல்ல ஒன்றுமில்லையென்று தன் சாட்சியை விசாரிக்கலாமென்றும் அவன் சொன்னான்! அந்தச் சாட்சி சொன்னதாவது: “நானும் ஆடி அமாவாசையன்று சின்னசாமியின் வீட்டுக்குப் போயிருந்தேன். முன் சாட்சிகள் சொன்னது போல் ஐயாயிரம் ரூபாய் கைமாற்றுக் கொடுத்தது உண்மைதான்!”
இதைக் கேட்டதும் சின்னச்சாமிக்கு படுகுஷி! “பார்த்தீர்களா?” என்று தாவிக் குதித்தார். ஆனால், அந்தச் சாட்சி தொடர்ந்து சொன்னான்:
“அதன் பிறகு மூன்று மாதம் கழித்து ஐப்பசி மாத அமாவாசையன்று சின்னச்சாமியின் வீட்டுக்கு நான் போக நேர்ந்தது. அப்போது இந்தப் பெரியசாமிக் கிழவன் அங்கே வந்து கைமாற்று வாங்கிய ஐயாயிரத்தையும் திருப்பிக் கொடுத்ததை நான் பார்த்தேன்!”
இதைக் கேட்ட பஞ்சாயத்தார், “சின்னச்சாமி பொய் வழக்குப் போட்டதற்காக, பெரியசாமிக் கிழவனுக்கு நஷ்ட ஈடு கட்ட வேண்டும்” என்று தீர்ப்புச் சொன்னார்கள்.
வாங்காத கடனைக் கொடுக்காமலேயே அடைத்துவிட்டான் பெரியசாமிக் கிழவன்! முள்ளை முள்ளால் எடுத்துவிட்டான்! இந்த முள்ளெடுக்கும் முள்ளை அவனுக்கு யார் கொடுத்தது?
அவனுடைய துடுக்குப் பேத்தி கோதையம்மைதான்!

Sunday 13 November 2011

சிலையில் என்ன இருக்கிறது?

விவேகானந்தருக்கு எங்கே பார்த்தாலும் பரபரப்பான வரவேற்பு? ஏனிந்த வரவேற்பு?

1893-ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரில் நடந்த அனைத்துலக மதப் பேரவையில் கலந்து கொண்டு இந்து மதத்தின் பெருமையை நிலைநாட்டி விட்டு அப்போதுதான் இந்தியாவிற்குத் திரும்பி இருந்தார். அப்படி அவர் அங்கே என்னதான் சாதித்தார்?

ஆரம்பத்தில், பேரவையில் பேச விவேகானந்தருக்கு வாய்ப்பிருக்குமா என்ற சந்தேகம். பிறகு அவருக்கு, சில நமிடங்கள் பேசும் வாயப்புக் கிடைத்தது. “சீமான்களே! சீமாட்டிகளே! என்று எல்லோரும் பேச்சைத் தொடங்க, “;சகோதரிகளே! சகோதரர்களே!” என்று புதுமையாகப் பேச்சைத் தொடக்கி, முதல் வார்த்தையிலேயே கூடியிருந்தவர்களின் உள்ளங்கவர் கள்வரானார்!

அவர் பேசிய கவர்ச்சிமிகு ஆங்கில நடை அனைவரையும் அடிமை கொண்டது. பிறகு நடைபெற்ற ஒவ்வொரு விவாதத்திலும் கலந்து கொள்ள வேண்டும் என்று பேரவையினரால் அவர் விரும்பி அழைக்கப்பட்டார். அந்த விவாதங்களில் இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்களை எல்லாம் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களும் மெச்சும்படியாய் அலசிக் காட்டினார்.

மேலும் இந்துக்களின் பிரம்மம், ஜோராஸ்டர்களின் அஹ_தா மஜ்தா, பௌத்தர்களின் புத்தர், யூதர்களின் ஜெஹோவா, கிருஸ்தவர்களின் பரமண்டலப் பிதா எல்லாம் ஒன்றே என்ற பொதுமைக் கருத்தைப் பாங்குற நிலை நாட்டினார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் பேச்சைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள் பலர் அவரது சீடர்களாகவே மாறிவிட்டார்கள்.

இத்தனைச் சாதனைகளையும் புரிந்து திரும்பியிருக்கும் விவேகானந்தருக்குப் பரபரப்பான வரவேற்பு இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. முப்பத்தி இரண்டே வயதான அந்த இளைஞரைப் பார்த்து ஜனங்களெல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொண்டார்கள். “மங்கிப் போயிருந்த இந்தியாவின் ஆன்மீகப் புகழை மறுபடியும் மணம் பெறச் செய்ய வந்திருக்கும் மகான்!” என்று எல்லோரும் அவரை வாயாரப் புகழ்ந்தார்கள்.

மராட்டிய மாநிலத்தில் ஒரு சிற்றரசர். அவர் விவேகானந்தருக்கு அரண்மனையில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தச் சிற்றரசர் உலக நாடுகளெல்லாம் சுற்றி வந்தவராகையால் எல்லாவற்றிலுமே முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டவர். மூடப் பழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகுந்தவர். ஆயிரக்கணக்கான கடவுளர் உருவங்களையெல்லாம் அழித்து ஒழித்துவிட்டு, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கையை நம் இந்து மதத்தில் புகுத்த வேண்டும் என்று மனதார விரும்பியவர். அவர்தான் விவேகானந்தரின் அமெரிக்கப் பயண வெற்றியைக் கருத்தில் கொண்டு அவரைச் சிறப்பிக்க வேண்டும் என்று வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

வரவேற்பு மண்டபம் நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அரசர் அமரும் ஆசனத்திற்குப் பின்புறம் ஆளுயரத்திற்கும் மேலாக சதுரவடிவத்தில் கட்டடம் எழுப்பப்பட்டு, அதன்மேல் அரசரின் இடை அளவான அழகுச்சிலை கம்பீரமாக அமைக்கப் பெற்றிருந்தது. அந்தச் சிலையே உயிர் பெற்று வந்தது போல், கீழே ஆசனத்தில் அரசர் அமர்ந்திருக்க, ஜனக்கூட்டம் மண்டபமெல்லாம் பொங்கி வழிந்தது.

தேனாகப் பொங்கிய விவேகானந்தரின் சொற்பொழிவு முடிந்ததும், மக்கள் கையொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதற்கு நன்றி தெரிவித்து அரசர் பேசும்போது, “சிலை வணக்கம் என்பது நமக்குத் தேவையில்லை. ஆண்டவனை வணங்க நமக்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. கற்சிலையை வணங்குவது பாமரத்தனத்தைத்தான் காட்டும். கேவலம் சிலையில் என்ன இருக்கிறது? என்று பொழிந்துத் தள்ளித் தம் முற்போக்குக் கருத்துக்களை விளக்கிக் கூறினார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு நவ நாகரிகப் பெண்மணி இந்தப் பேச்சைப் பெரிதும் ரசித்துக் கைத்தட்டி மகிழ்ந்தாள்.

அரசரின் பேச்சு முடிந்ததும் அதை ரசித்துக் கைத்தட்டிய நவ நாகரிக நங்கையை விவேகானந்தர் அழைத்தார். “என்ன?” என்றவாறு அவளும் மேடைக்கு வந்து நின்றாள்.

“இதோ இருக்கிறதே அரசரின் கம்பீரமான சிலை! இதன் மேல் கொஞ்சம் எச்சில் உமிழ்வதுதானே?” என்றார் விவேகானந்தர்.

“அபச்சாரம் அபச்சாரம்!” என்றாள் பதறிப் போன நங்கை.

“ஏனிப்படிப் பதற வேண்டும்?” என்றார் விவேகானந்தர்.

“சிலையின் மேல் உமிழ்ந்தால் அரசர் மேல் உமிழ்ந்தது போல்!” என்றாள் நங்கை பரபரப்புடன்.

“கேவலம் சிலையில் என்ன இருக்கிறது?” என்றார் விவேகானந்தர் அமைதியாக.

இதைக் கேட்டதும் அந்த நங்கை தலை குனிந்தாள். அவள் மட்டுமல்ல! அரசருங்கூடத்தான்!

Sunday 6 November 2011

மூன்று தேங்காய்கள்

சந்திரகிரி என்ற ஊரில் திருமேனி என்பவன் தன் மனைவியுடன் எளிய வாழ்க்கை நடத்தி வந்தான். ஏழையாக இருந்தாலும் விருந்தோம்பும் நல்ல பண்பு அவனிடம் இருந்தது. அவன் மனைவி அமிர்தம் விருந்தினர் யார் வந்தாலும், வீட்டில் உள்ளதை இன்முகத்தோடு முதலில் அவர்களுக்குக் கொடுத்து, மிஞ்சியதை உண்ணும் பழக்கமுள்ளவள். இவ்விதம் இவர்கள் கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்து வந்தார்கள்.
ஒரு நாள் வீதி வழியே முனிவர் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்ததும் வணங்கிய திருமேனி, தன் வீட்டிற்கு வந்து உணவு கொள்ள வேண்டும் என்று வேண்டினான். முனிவரும் மகிழ்ச்சியுடன் திருமேனியின் வீட்டிற்கு வந்து உணவு உண்டார். அமிர்தம் முகம் கோணாமல் மிகவும் கவனமாய் உணவு பரிமாறியது முனிவருக்கு மிகவும் மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. அதனால் முனிவர் தன் தோளில் தொங்கவிட்டிருந்த ஒரு பையில் இருந்து மூன்று தேங்காய்களை எடுத்துத் திருமேனியிடம் கொடுத்தார்.
“அப்பனே! இந்தத் தேங்காய்கள் சாதாரணமானவையல்ல! நீ எந்தப் பொருள் வேண்டும் என்று நினைத்து இவற்றை உடைக்கிறாயோ, அந்தப் பொருள் உனக்குக் கிடைக்கும்;. ஆனால், ஒவ்வொரு தேங்காயை உடைக்கும்போதும் ஏதாவது ஒரு வகைப் பொருளைத்தான் நினைத்துக் கொள்ள வேண்டும். பல வகையான பொருள்களை நினைத்துக் கொண்டு உடைத்தால் பலிதமாகாது!” என்று தேங்காய்கள் பற்றிய மகத்துவத்தை விளக்கிவிட்டு முனிவர் போய்விட்டார்.
திருமேனி நீராடி, பூசையும் நிகழ்த்திய பிறகு, தன் மனைவியை நோக்கி, “நீ விரும்பும் பொருளைச் சொல். அதை நினைத்துக் கொண்டு முதல் தேங்காயை உடைக்கிறேன்” என்றான். அதற்கு அமிர்தம், “உங்கள் விருப்பமே என் விருப்பம்” என்றாள்.
எனவே, திருமேனி, ‘ஒரு மாளிகை வேண்டும்” என்று மனத்தில் எண்ணியவனாய், முதல் தேங்காயை உடைத்தான். உடனே அந்தக் குடிசை வீடு, பெரிய மாளிகையாய் மாறிவிட்டது. ‘பொன்னாபரணங்கள் வேண்டும்’ என்று மனத்திற்குள் எண்ணியவனாய், இரண்டாவது தேங்காயை உடைத்தான். உடனே அவன்முன் மூன்று பெட்டிகள் நிறையப் பொன்னாபரணங்கள் தோன்றின. ‘பட்டாடைகள் வேண்டும்’ என்று மனத்திற்குள் நினைத்தவனாய் மூன்றாவது தேங்காயை உடைத்தான். உடனே மூன்று பெட்டிகள் நிறைய தினுசு தினுசாய் பட்டாடைகள் தோன்றின. எல்லாவற்றையும் பார்த்த திருமேனியும் அமிர்தமும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவர்களாய், தான தருமங்கள் செய்து இனிய வாழ்க்கையை மேற்க்கொண்டார்கள்.
திருமேனியின் வீட்டுக்கு எதிரில் பக்கிரி என்பவன் தன் மனைவி பாக்கியம் என்பவளுடன் வாழ்ந்து வந்தான். அவன் எச்சிற் கையால் கூடக் காக்காய் ஓட்ட மாட்டான். மனைவி பாக்கியம் அவனை விடக் கைகாரி. கழுவிய கையால் கூட காக்காய் ஓட்ட மாட்டாள். இவர்கள் இருவரும் உறவினர் வீடுகளுக்குப் போய் விருந்து சாப்பிட்டுவிட்டு வருவார்களே தவிர, யாருக்கும் இதுவரை விருந்து வைத்ததே இல்லை. இவ்விதமான சுயநல வாழ்க்கை இவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
எதிரில் இருந்த குடிசை மாளிகையானதைக் கண்ட பாக்கியம், தன் கணவன் பக்கிரியிடம், திருமேனியைச் சந்தித்து அவன் பணக்காரன் ஆன இரகசியத்தைக் கேட்டு வரும்படி நச்சரித்துக் கொண்டே இருந்தாள். பக்கிரியும் ஒரு நாள் திருமேனியைச் சந்தித்து விவரம் கேட்க, திருமேனியும் முனிவர் வந்தது முதல் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னான். இதைக் கேட்ட பக்கிரி தன் வீட்டுக்குத் திரும்பி, மனைவியிடம் விளக்கவே, உடனே போய் முனிவரைத் தேடிக் கண்டுபிடித்து வரும்படித் தன் கணவனை விரட்டினாள் பாக்கியம்.
வீட்டுக்கு வெளியில் வந்த பக்கிரி ஆச்சரியத்தால் கண்களை மலர்த்திப் பார்த்தான். தொலைவில் முனிவர் வந்து கொண்டிருந்தார். அவரை எதிர்கொண்டழைத்த பக்கிரி தன் வீட்டிற்கு வந்து உணவு உண்ண வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். முனிவரும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து உணவு உண்டார். அரை அரைக் கரண்டியாக பாக்கியம் அமுது படைத்தது முனிவருக்கு எரிச்சல் மூட்டிய போதிலும், அவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. உண்டு முடித்ததும் பாக்கியம் முனிவரைப் பார்த்து, “சாமி! எதிர் வீட்டுத் திருமேனிக்குக் கொடுத்தது போல் எங்களுக்கும் மூன்று தேங்காய்கள் கொடுக்க வேண்டும்” என்று வேண்டவே, முனிவரும் தன் தோளில் தொங்கப் போட்டிருந்த பையிலிருந்து மூன்று தேங்காய்களை எடுத்துக் கொடுத்து, உடைக்கும் போது ஒரே ஒரு வகைப் பொருளை நினைத்தால்தான் பலிதமாகும் என்ற விவரத்தையும் சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனார்.
முனிவர் போனதுதான் தாமதம்! “சேலையாக வர வேண்டு;ம் என்று நினைத்துக் கொண்டு முதல் தேங்காயை உடையுங்கள்” என்று குதிக்க ஆரம்பித்துவிட்டாள் பாக்கியம்.
பக்கிரியும் விட்டபாடில்லை. “அது என்ன சேலையாக வேண்டும் என்கிறது! வேட்டியாக வேண்டும் என்றால் என்ன?” என்றான்.
“இல்லை, சேலை தான் வேண்டும்” என்றாள் பாக்கியம்.
“இல்லை, வேட்டி தான் வேண்டும்” என்றான் பக்கிரி.
“இல்லை, சேலை தான்” – இது பாக்கியம்.
“இல்லை, வேட்டி தான்” – இது பக்கிரி.
“சேலை தான்” – பாக்கியம்.
“வேட்டி தான்” – பக்கிரி.
இந்தச் சண்டையில் எரிச்சல் தாங்க முடியாத பக்கிரி கடைசியில் “எந்த மயிராவது வரட்டும்” என்று முதல் தேங்காயை உடைத்தான்.
அவ்வளவு தான்!
கூந்தலில் எத்தனை வகை! கார்மேகம் போல் கருத்த கூந்தல்! வெண்பஞ்சு போல் நரைத்த கூந்தல்! சுருட்டைக் கூந்தல்! செம்பட்டைக் கூந்தல்! எங்கே பார்த்தாலும் கூந்தலின் வண்ணக் கோலம்! சுவரில் பல தினுசுகளில் கூந்தல் கற்றைகள் தொங்கின! கூரையில், விட்டத்தில், தூணில், ஜன்னலில், கதவில்.. இது மட்டுந்தானா.. பக்கிரிக்கும் பாக்கியத்திற்கும் மூக்கில், உதட்டில், கன்னத்தில், நெற்றியில், கழுத்தில்.. உடம்பெல்லாம் கூந்தற் கற்றைகள்! பார்க்கவே பயங்கரமாயிருந்தது.
“ஓ” என்று அலறிய பாக்கியம், “முதலில் இதையெல்லாம் போகச் செய்யுங்கள்” என்று கணவனைப் பார்த்து ஓலமிட்டாள்.
உடனே பக்கிரி “எல்லா மயிரும் போகட்டும்” என்றவனாய் இரண்டாவது தேங்காயை உடைத்தான்.
அவ்வளவு தான்!
அங்கிங்கெனாதபடி எங்கும் தொங்கிக் கொண்டிருந்த கூந்தற் கற்றைகள் மாயமாய் மறைந்து போயின.
இது என்ன வினோதம்!
பக்கிரியின் தலையில் முடியினைக் காணோம்.
பாக்கியத்தின் தலையிலும் கூந்தலைக் காணோம்.
இரண்டு பேரும் மொட்டைத் தலையாக நின்றார்கள்.
தன் தலையைத் தொட்டுப் பார்த்த பாக்கியம், “ஐயோ!.. புருஷன் இருக்கும்போதே என் தலை மொட்டையாவதா?.. ஏன் குண்டுக் கல்லாட்டம் நிற்கிறீர்கள்! எனக்கு முதலில் கூந்தலை வரச் செய்யுங்கள்!” என்று ‘லபோ லபோ’ என்று கதறினாள்.
உடனே பக்கிரி, “எங்கள் தலைமயிர் மட்டும் வரட்டும்!” என்று மூன்றாவது தேங்காயை உடைத்தான்.
முன்பு போல பக்கிரியின் தலையிலும் பாக்கியத்தின் தலையிலும் முடி வந்தது.
ஆனால், தங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்வதிலேயே மூன்று தேங்காயும் தீர்ந்துவிட்டது என்று அப்போதுதான் பக்கிரிக்கும் பாக்கியத்திற்கும் புரிந்தது. ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே!” என்று தலை தலையாக அடித்துக் கொண்டார்கள். என்ன அடித்துக் கொண்டு என்ன பயன்?
திருமேனிக்கும் அமிர்தத்துக்கும்; அவர்களின் நல்ல உள்ளம் போல் உயர் வாழ்வு கிட்டியது. பக்கிரிக்கும் பாக்கியத்திற்கும் அவர்களின் வறிய உள்ளம் போல், வாழ்விலும் வறுமையே மிஞ்சியது.