Thursday 5 January 2012

சிந்தனைச் சிற்பி

மாமேதைகள் பிறந்த கிரேக்க நாடு! அங்கே மஞ்சு சூழ் மலைப் புறத்தில் ஒரு சிற்றூர்! அங்கிருந்து கூட்டங் கூட்டமாக வந்து கொண்டிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் பேசிக் கொள்கிறார்கள்.
 
“ஆஹா! என்ன மேதா விலாசம்! வாய் திறந்தால் போதும் சத்தான சிந்தனைகளை வாரித் தெளிக்கிறார்! முத்தான கருத்துக்களை கொட்டிக் கொடுக்கிறார்!”
 
யார் இந்தப் புகழ்ச்சிக்குரிய சிந்தனைச் சிற்பி? மக்களின் சிந்தை கவர்ந்து மிதிப்பைப் பெற்ற மாமேதை! எல்லோரும் அவரை டயாஜெனிஸ் என்று அழைக்கிறார்கள். 
 
 அவர் குடியிருந்த குடிசை வீட்டிற்கே சென்று பார்க்கிறார்கள்.  உரையாடி மகிழ்ந்துவிட்டுத் திரும்புகிறார்கள்.
 
காட்டுத் தீ போல் இந்தச் செய்தி நாட்டைப் பற்றிக் கொள்கிறது. நாடாளும் நாயகனின் காதுகளிலும் விழுகிறது.
 
“அந்த மேதையை நான் பார்க்க வேண்டும்! அழைத்து வாருங்கள் அரசவைக்கு!” என்று ஆணை பிறக்கிறது.  ஆர்பாட்டத்தோடு அணிவகுத்துப் புறப்படுகின்றனர் ஐம்பது வீரர்கள்.
 
ஆணையைப் பிறப்பித்தவன் அலெக்ஸாண்டர்! ஆட்பெரும் படை கொண்டு அவனியையே நடுங்க வைத்த மாசிடோனியாவின் மாவீரன்! ஈராயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரக்கணக்கான மறவர்களைக் கொண்ட மாபெரும் சைனியத்தை உருவாக்கிய பெரும் தீரன்! ஏறு நடையும் எழிலும் கொண்டு விளங்கிய ஏதென்ஸ் நகராட்சியைத் திக்குமுக்காடச் செய்தவன்! இந்தியாவின் ஜீலம் நதிவரை வந்து தன் வீரத்தின் முத்திரையைச் சூரத்தனமாகப் பதித்துச் சென்ற சண்டப் பிரசண்டன்! ஆம்! அவன் தான் ஆணையைப் பிறப்பித்தான்!
 
ஆர்பாட்டத்தோடு சென்ற வீரர்கள் விரைவிலேயே அடக்கத்தோடு திரும்பினர்.
 
“எங்கே அந்த மேதை?” அலெக்சாண்டர் கேட்டான்.
 
“சென்று தான் தரிசிக்க வேண்டும்!” பதிலுறுத்தினர் வீரர்கள்.
 
இதைக் கேட்டதுதான் தாமதம்! பொங்கிய கோபத்தை அங்கத்தில் அடக்கிக் கொண்டு புயல் போலப் புறப்பட்டான் அலெக்சாண்டர்!
 
வீர நடை போட்டு அவன் தூர வரும்போதே, தத்துவ மேதையைத் தரிசிக்கத் திரண்டிருந்த மக்கள் திகிலுடன் விலகி நின்றனர்.
 
இரத்தச் சிவப்பான கிரணங்களை வாரி இறைத்துக் கொண்டு பள்ளியறை நாடிப் பகலவன் மேற்றிசை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த நேரத்தில், “ஏதாகுமோ! என்ன நடக்குமோ!” என்று மக்கள் கிலி கொண்டு நிற்க, புலி போல நின்றான் அலெக்ஸாண்டர்!
 
அங்கு ஒரு புறத்தில் ஓர் ஓலைக் குடிசை! அதன் தாழ்வாரத்தில் பழுத்த பழமாக ஒரு கிழம்! தலையிலும் தாடைகளிலும் வெள்ளிக் கம்பி போன்ற ரோமங்களின் திரட்சி! கவர்ச்சி மிக்க செழிப்பான முகம்! கடல் போலப் பரந்து விரிந்த நெற்றி! கழுகின் அலகு போல் நீண்ட மூக்கு! தடித்த உதடுகள்! துடிக்கும் புருவங்கள்! கனச் சிவப்பில் தீட்சண்யமான கண்கள்! ஆனால், பொழிந்து கொண்டிருப்பதோ கனிவு மழை!
 
“நான் தான் அலெக்சாண்டர்!” கம்பீரமான குரல் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது!
 
“ஓ.. அப்படியா?” தாடிக்காரக் கிழத்தின் தடிப்பான உதடுகளிலிருந்து நயமான நாதசுர மிழற்றல்!
 
“நானிலம் நடுங்கப் படை நடத்திக் கொண்டிருப்பவன் நான்! அகிலத்தையே என் அடி தொட்டுக் கிடக்க வைக்கும் ஆற்றல் மிகு சக்கரவர்த்தி நான்!” அலெக்ஸாண்டர் மேலும் கர்ஜித்தான்!
 
“ஓஹோ!” புதிராகக் காட்சி தந்த கிழத்தின் வாயிலிருந்து புளகிக்கச் செய்யும் புல்லாங்குழல் நாதம்!
 
“என்னைப் போல் ஒரு வீரன் இந்த மண்ணுலகில் தோன்றியதில்லை! தோன்றப் போவதுமில்லை! ஆம்! என்னை ஈன்றெடுத்த அன்னை மட்டுமல்ல!
 
அந்த ஆண்டவனே நினைத்தாலும் இன்னொரு அலெக்ஸாண்டரை உருவாக்க முடியாது! அப்படிப்பட்ட புகழுக்கு உரியவன் நான்!” ஆக்கிரோஷத்தோடு நெருங்கினான் அலெக்ஸாண்டர்!
 
“ஓஹோஹோ!” என்று கிண்கிணிக் குரல் கொடுத்த அந்தக் கிழம், தன் முகத்தில் ஒரு சாந்தப் புன்னகையைத் தவழவிட்டது!
 
அந்தப் புன்னகைக்குத் தான் என்ன சக்தி! அலெக்ஸாண்டரின் ஆர்ப்பரிப்பு அடங்கிவிட்டதே! தணலாகப் புறப்பட்டு வந்தவன் இப்போது புனலாக மாறிவிட்டானே! காந்தக் கண்களின் கவர்ச்சியில் கட்டுப்பட்டு, இரும்புத் துண்டாகவல்லவா நிற்கிறான்!
 
“தங்களைக் காணத்தான் வந்துள்ளேன். தத்துவ மேதையே! வைரங்கள்!  வைடூரியங்கள்! வண்ணமிகு ரத்தினங்கள்! கண்ணைப் பறித்திடும் கடல் நீலக் கோமேதகங்கள்! கத்தும் கடல் கொடுக்கும் முத்துச் சுடர் மணிகள்! இத்தனை செல்வங்களையும் நான் குன்று போல் குவித்துள்ளேன்! வேண்டியதைக் கேளுங்கள்! காணிக்கையாக்கச் சித்தமாய் இருக்கிறேன்!” என்று அலெக்ஸாண்டரின் கர்ஜனைக் குரலில் கனிவு மிகுதியும் கலந்திருந்தது!
 
தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த கிழம் காதைக் கொஞ்சம் திருப்பி, அதில் உள்ளங்கையை அமர்த்தி, “என்ன?” என்று ஓர் எதிர் கேள்வி எழுப்பிற்று!
“தங்களுக்கு என்ன வேண்டும்?” உரக்கக் கூவினான் அலெக்ஸாண்டர்!
“எனக்குச் சூரிய வெளிச்சம் வேண்டும்! மறைக்காமல் கொஞ்சம் தள்ளி நின்றால், அதுவே போதும்!”
 
கிழத்திடமிருந்து வந்த பதிலைக் கேட்டு வாயடைத்துப் போனான் அலெக்ஸாண்டர்! “மண்ணுலகமே வேண்டும்” என்று அவன் உலகை வலம் வருகிறான்!
 
ஆனால், இந்தக் கிழத்திற்குச் சூரிய வெளிச்சம் போதுமாமே! ஆம்! சூரியன் இல்லாவிட்டால் இந்த உலகம் ஏது?
 
அகங்காரத்தோடு வந்த அலெக்ஸாண்டர் அடக்கத்தோடு மண்டியிட்டான்!
 

எப்படி இருக்கும்?

அந்தப் படம் லண்டன் மாநகரில் ஆயிரமாவது நாளாக ஓடிக் கொண்டிருந்தது.  அதைச் சிறப்பிக்கும் வகையில் அந்தக் கொட்டகையில் பெரிய விழா ஏற்பாடு செய்திருந்தார்கள்.  படத்தின் கதாநாயகி நேரிலே மேடையில் தோன்றுகிறாள் என்பதால், ஒரு பவுண்ட் டிக்கெட் ஐம்பது பவுண்டுக்குக்கூட, கள்ளமார்க்கெட்டில் கிடைக்கவில்லை.  கொட்டகை முழுதும் கூட்டம் பொங்கி வழிந்தது.

இந்த விழாவில் இன்னொரு சிறப்பு.  அகில உலக மேதை பெர்னாட்ஷா தலைமை தாங்குகிறார்.  அவர்தான் அந்தப் படத்திற்கு கதை அமைத்து உரையாடல்களை எழுதியிருந்தார்.

நடிகை மேடைக்கு வந்ததும் ஜனங்களின் கண்களெல்லாம் அவளை மொய்க்க ஆரம்பித்தன.  ஆனால், அவளுடைய கண்களோ மேடையில்  இருந்த ஷா அவர்களின்மேல் நிலைபெற்று நின்றுவிட்டன.

அமைதியான உருவம்! பரட்டைத் தலை! ஒழுங்கற்ற தாடி! முகமெல்லாம் வயோதிகத்தின் ரேகைகள்! இல்லை.. இல்லை.. அறிவு முதிர்ச்சியின் அடையாளங்கள்! அவரைப் பற்றி அவள் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால், இன்று தான் நேருக்கு நேர் பார்க்கிறாள்.

நடிகையைப்பற்றி இப்போது சில வார்த்தைகள் சொல்லித்தான் ஆக வேண்டும். அவளது அழகிய கவர்ச்சிப் படங்களைப் போடாத செய்தித்தாள்களே இல்லை.  கருப்பு வெள்ளைப் படத்திலேயே அவள் உருவம் அதியற்புதமாக இருக்கும். வண்ணப்படங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?

கழுத்தை ஒட்டினாற் போல் ‘பாப்’ செய்து விடப்பட்ட இயற்கையான கிரே கலர் கூந்தல்! பளப்பளப்பான சிறிய நெற்றி! கூர்மையான புருவங்கள்! நீலநிறம் பாய்ந்த பூனைக் கண்கள்! அளவான – ஆனால் அழகான மூக்கு! ரம்மியமான ரோஸ் கன்னங்கள்! இரத்தச் சிவப்பில் மென்பஞ்சு அதரங்கள்! லில்லிப் பற்கள்! சங்குக் கழுத்து! தெங்கின் கவர்ச்சி! வெண்டைக்காய் போன்ற பிஞ்சு விரல்கள்! கைப்பிடியில் அடங்கும்  “மெய்யோ” எனும் இடை! ஐந்தரை அடி உயரத்திற்கு அழகுருவம் கொடுக்கும் வாழைத்தண்டுக் கால்கள்! வளர்த்துவானேன்! அகில உலகிலுமுள்ள இளைஞர் பட்டாளமே இவளுக்கு விசிறிகள்!

இந்த நடிகையைக் பேட்டி காணும்போது நிருபர்கள் தவறாமல் ஒரு கேள்வி கேட்பார்கள்.

“எப்போது திருமணம்?” - இது தான் அந்தக் கேள்வி.

உடனே அவள் தன் உதவியாளரிடம் ஒரு கடிதக் கத்தையைக் கொண்டு வந்து போடச் சொல்லுவாள்.

“பார்த்தீர்களா! இவையெல்லாம் இன்று எனக்கு வந்த கடிதங்கள்! ஆயிரத்துக்குத் மேலிருக்கும்! எல்லாரும் என்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்கள்! நான் யாரைச் செய்து கொள்ளுவது?” என்று ஓர் எதிர்க் கேள்வி போடுவாள்.

“யாரைத் திருமணம் செய்வது?” என்ற பிரச்சினை அப்புறம் இருக்கட்டும். உங்களுக்காக எத்தனையோ குபேரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்! ‘எப்போது திருமணம்?’ என்பதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்!” என்று நிருபர்கள் மடக்குவார்கள்.

“எப்போது? யாரை?”  என்ற இரண்டையும் ஒன்றாக்குங்கள்! என் எண்ணம்போல் எப்போது மாப்பிள்ளை கிடைக்கிறாரோ, அப்போதே திருமணந்தான்! ‘எண்ணம் போல் என்றால் என்ன?’ என்று என்னை விளக்கம் கேட்காதீர்கள்! அது பரம ரகசியம்!” என்று மடங்காமல் பதில் சொல்லுவாள் அவள்.

மேலும் துளைக்க முடியாத நிருபர்கள், “உங்களைத் திருமணம் செய்து கொள்ளுகிறவர் அதிர்ஷ்டசாலியாகத் தான் இருக்க வேண்டும்” என்பார்கள்.

உடனே அவள், “அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் அறிவாளியாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்!” என்பாள்.  இதைக் கேட்ட நிருபர்கள், “பார்த்தீர்களா! உங்களை அறியாமலே உங்கள் எண்ணத்தைச் சொல்லிவிட்டீர்கள்! நீங்கள் ஒரு சிறந்த அறிவாளியைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்!” என்று சொல்லிச் சிரிப்பார்கள்.

இப்படிப் பேட்டிகளில் உருவகமான அத்தகைய அறிவாளியைத் தான் அன்று அந்த நடிகை மேடையில் சந்தித்துக் கொண்டாள்.  ஷா அவர்களை அவள் தலைமை உரையையும் மிகக் கவனத்தோடு கேட்டு வெகுவாக ரசித்தாள்.

ஷா அவர்கள் பேசும் போது, “ஒரு படத்தின் வெற்றி பல அம்சங்களைப் பொறுத்திருக்கிறது. கதாசிரியன் எந்த நோக்குடன் பாத்திரங்களைப் படைக்கிறானோ – அந்நோக்கு நிறைவு செய்யப்பட வேண்டும்” என்பது அதில் முக்கியமான அம்சமாகும்.  “வாய் பேசுவதைவிட கதாநாயகியின் வனப்பான உடல்  தான் அதிகம் பேச வேண்டும்” என்று இக்கதையின் நாயகியைக் கற்பனை செய்தேன். அதை இந்தக் கதாநாயகி சிறப்புற நிறைவேற்றி இருக்கிறார். படத்தில் மட்டுமல்ல.  இதோ - இங்கே அமர்ந்திருக்கும் அவர் வாய் பேசாமலே வனப்புமிக்க உடலால் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்!” என்றதுமே கூடியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

இதன்பின் அவள் எழுந்து நின்றாள்.  அவ்வளவுதான் கையொலி கொட்டகையைப் பிளந்தது. ஷா அவர்கள் பேசிய பின்புதான் கை தட்டினார்கள்.  ஆனால் அவள் .. எழுந்து நின்றதுமே கை தட்டுகிறார்கள்.  ஷா அவர்கள் சொன்னது உண்மைதான்.  அவள் அழகுருவம் பேசிவிட்டது.

பிரகாசமான புன்னகை ஒன்றை வீசிய அவள் ‘நன்றி’ என்ற அளவோடு பேச்சை முடித்துக் கொண்டாள்.  மறுபடியும் ரசிகர்கள் கைதட்டல்.

பிறகு பட அதிபர் நன்றி கூற ஆரம்பித்தார். அப்போது அருகில் அமர்ந்திருந்த ஷா அவர்களிடம் நடிகை பேச்சுக் கொடுத்தாள்.

“நான் உங்களைக் காதலிக்கிறேன்!” என்றாள் அவள்.

“அப்படியா?” என்றார் அவர்.

“ஆமாம்! ஓர் அறிவாளியைக் கணவராக அடைய வேண்டும் என்பதே என் விருப்பம்!” - இது அவள்.

“எப்படி உனக்கு அந்த விருப்பம் வந்தது?” - இது அவர்.

“என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்து ஒரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும்?” – அவள் குழைந்தாள்.

“அற்புதமாகத் தான் இருக்கும்! ஆனால் உன்னுடைய அறிவும் என்னுடைய அழகும் சேர்ந்து குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது?”

இதைக் கேட்ட நடிகை ‘களுக்’ என்று சிரித்து விட்டாள்!

http://puthu.thinnai.com/?p=7378