Sunday 30 October 2011

எது உயர்ந்தது?

அது ஒரு நூறு அடுக்கு மாடிக் கட்டிடம். அந்த நகரத்தில் மட்டுமல்லாமல், அந்த நாட்டிலேயே அது தான் உயர்ந்த கட்டிடம். கட்டிடக் கலைக்கே பெருமையும் புகழும் தேடித் தரத்தக்க அவ்வளவு அழகான கட்டிடம்!
வந்தவரைப் பிரமிக்க வைக்கும் வரவேற்பு அறை! வழவழக்கும் மொஸைய்க் தரை! வடிவழகு மிளிர தலைக்கு மேல் ஆறடி உயரத்திலிருக்கும் விதானம். அறைக்கு அறை அழகாகப் பொருத்தப்பட்டிருக்கும் வாயிற் கதவுகள்! சுவரே தெரியாமல் அதன் மேல் பதிக்கப் பெற்று, சுத்தமாக ‘வார்னிஷ்’ செய்யப்பட்டுப் பளபளத்துக் கொண்டிருந்த நூக்கமரச் சுவர்ப்பலகைகள். பார்வைக்கும் ரம்மியமாய் அமைக்கப்பட்டிருந்த பலகணிகள்! இன்னும் கண்ணில் தட்டுப்படும் எதுவாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலுமே அந்த நாட்டின் கலாச்சாரம் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது!
இந்தக் கட்டிடம் கட்டி முடிந்து இப்போது திறப்பு விழா சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது. அந்த நாட்டின் அதிபர் அதைத் திறந்து வைப்பதற்கு வேண்டிய தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பல நாட்டுத் தூதுவர்களும் வந்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டுத் தூதர், ரஷிய நாட்டுத் தூதர் இருவருமே முன் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் திறப்புவிழாக் கூட்டத்தில் சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்ற இருந்தார்கள்.
பாண்டு வாத்தியங்களின் வரவேற்பு முழங்குகிறது. அதிபர் வந்துவிட்டார். இதோ! தங்கத் தாம்பாளத்தில் வைத்திருந்த வெள்ளிக் கத்தரிக்கோலை எடுத்து, வாயிற்புறத்தை மறித்துக் கட்டப் பெற்றிருந்த வெளிர் நீலப்பட்டு ‘ரிப்பனை’க் கத்திரிக்கிறார்! புகைப்படக்காரர்கள் தங்கள் காமிராக்களைக் ‘கிளிக் கிளிக்’ என்று தட்ட, அவற்றில் பொருத்தப்பட்டிருந்த சக்தி வாய்ந்த விளக்குகள் ‘பளிச் பளிச்’ என்று ஒளியை உமிழ்கின்றன. இன்னொரு புறத்தில் சினிமா, மற்றும் தொலைக்காட்சிக் காமிராக்கள் இயங்குகின்றன!
அதிபர் அடுத்த நிகழ்ச்சியைத் தொடர, அருகிலிருந்த ஒரு பட்டனைத் தட்டுகிறார். உடனே பொன் மஞ்சள் நிறப் பட்டுத் துணி மெதுவாக நகர, இன்னாரால் இன்ன தேதியில் இக்கட்டிடம் திறந்து வைக்கப் பெற்றது என்ற விவரங்களுடன் சுவற்றில் பதிக்கப் பெற்றிருந்த பால் போன்ற வெள்ளைச் சலவைக்கல் பளிச்சிடுகிறது. பிறகு அதிபர் திறப்புரை நிகழ்த்தினார்.
“உலகமே வியக்கத்தக்க ஒரு பெரும் சாதனையை நாம் செய்திருக்கிறோம். இக்கட்டிடத்தை உருவாக்கியிருப்பது நம் நாட்டுப் பொறியியல் வல்லுநர்கள் மட்டுமன்று. அமெரிக்கப் பொறியியல் வல்லுநர்களும் ரஷியப் பொறியியல் வல்லுநர்களும் இதில் பங்கு கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய நாள் முதலாய் திறப்பு விழா நடைபெறுகிற இன்று வரையும் இவர்கள் எந்தவிதப் பிணக்கும் இன்றி ஒற்றுமையாய் இருந்திருக்கிறார்கள். ‘இது தான் நாம் சாதித்திருக்கும் பெரும் சாதனை’ என்றால் யாரும் மறுக்க மாட்டீர்கள். அது மட்டுமின்றி வானளாவ உயர்ந்து நிற்கும் இந்தக் கட்டிடம் நம் அந்தஸ்தையும் உலக அரங்கில் உயர்த்தி இருக்கிறது. நூறாவது மாடியில் நின்று கொண்டு கீழே பார்த்தால் மனிதர்களெல்லாம் ஏதோ சிறு எறும்புகளைப் போல் தோன்றுவார்கள். மேலே இருந்து ஐஸ் கட்டியைப் போட்டால், கீழே விழும்போது அது தண்ணீராக மாறி இருக்கும்! அவ்வளவு உயர்ந்த கட்டிடம் இது! இதை நம் கண்ணைப் போல் கட்டிக்காக்க நாம் ஒவ்வொருவரும் இந்நன்னாளில் கங்கணம் கட்டிக் கொள்வோமாக!”
ஆதிபரின் உணர்ச்சிமிக்க பேச்சைக கேட்ட அவையோர் மகிழ்ச்சியோடு கரகோஷம் செய்தார்கள். இதன் பிறகு ரஷியத் தூதர் சிறப்புச் சொற்பொழிவைத் தொடங்கினார்.
இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான பொருளுதவியிலும் தொழில் நுணுக்க உதவியிலும் பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற்காக எங்கள் நாடு மிகவும் பெருமைப்படுகிறது. அதிபரவர்கள் தங்கள் பேச்சில் ‘கட்டிடத்தின் உச்சியிலிருந்து ஐஸ் கட்டியைப் போட்டால் கீழே விழும்போது அது தண்ணீராக மாறி இருக்கும்’ என்று சொல்லி, ‘இது எவ்வளவு உயர்ந்த கட்டிடம்’ என்று வியந்தார். ஆனால், இதை விட உயர்ந்த கட்டிடம் எங்கள் மாஸ்கோவில் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து பிறந்த குழந்தையைப் போட்டால் அது கீழே விழும்போது கிழவனாக மாறி இருக்கும்!” என்றதுமே அவையோரின் கரவொலி பீரங்கி முழக்கம் போலிருந்தது.
பிறகு அமெரிக்கத் தூதர் சிறப்புச் சொற்பொழிவைத் தொடங்கினார்.
“மதிப்பிற்குரிய ரஷியத் தூதவரவர்கள் மாஸ்கோவிலுள்ள கட்டிடத்திலிருந்து பிறந்த குழந்தையைத் தூக்கிப் போட்டால் அது கீழே விழும்போது கிழவனாக இருக்கும் என்றார். இதில் என்ன அதிசயம் இருக்கிறது! எங்கள் வாஷிங்டனில் ஒரு கட்டிடம் இருக்கிறது. அதன் உச்சியிலிருந்து ஒரு குரங்கைப் போட்டால், கீழே விழும்போது அது மனிதனாக இருக்கும்!”
அவ்வளவு தான்! அவையோரின் கரவொலி அணுகுண்டு வெடித்தது போலிருந்தது!

Tuesday 25 October 2011

சாத்துக்குடிப் பழம்


“அதோ இருக்கே கூடை! அதிலிருந்து ஆளுக்கு ஒரு பழம் கிடைச்சாத் தேவலை!”
“கிடைச்சாத் தேவலைதான்! ஆனா கிடைக்கிறாப்பலேத் தெரியலையே! கூடையைத்தான் ஐயா பக்கத்திலையே வச்சிருக்காரே!”
“பக்கத்திலே இல்லாமே தூரத்திலே வச்சிருந்தா மட்டும் நமக்குக் கிடைச்சிடுமா என்ன? ஐயாவாப் பார்த்துக் கொடுத்தாத்தானே சாப்பிட முடியும்?”
மேற்கண்ட கசமுசாப் பேச்சு நடந்து கொண்டிருந்த போது கணீரென்று ஒரு குரல் குறுக்கிட்டது.
“என்ன? என்ன பேச்சு?”
“ஒண்ணுமில்லேய்யா! பசிக்கிற மாதிரி இருந்தது!” கசமுசாக்காரர்களில் ஒருவர் தைரியமாகவே சொல்லிவிட்டார்.
“பழக் கூடை பக்கத்திலே இருந்தா ஏன் பசிக்காது! பசியாம் பசி.. வெங்காயம்! புறப்படுறப்பத்தானே பிரியாணி சாப்பிட்டது! அதுக்குள்ளே பசியிh? பசிக்கிறதிருக்கட்டும். இப்பப் பழம் சாப்பிட்டா உடம்புக்கு என்ன ஆகிறது! மழைக் காலத்திலே சளி பிடிச்சிக்காது! வாயை மூடிட்டு சும்மா வரணும்! எல்லாம் ஈரோடு போய்ப் பார்த்துக்கலாம்!”
அதிகாரக் குரல் கசமுசாக்காரர்களை “கப்சிப்” என்று அடக்கிவிட்டது.
அதிகாரக் குரலுக்குரியவர் பெரியார் ஈ.வெ.ரா. கசமுசாகாரர்கள் அவருடன் பயணம் செய்த இரண்டு கழகச் செயல் வீரர்கள்.
தமிழகத்தின் சழுதாயக் கழனியில் பகுத்தறிவு என்னும் நாற்று நட்டு, அது நன்கு செழித்து வளரக் காரணமானவர் பெரியார். அநாவசியச் செலவென்றால் அவருக்கு அறவே பிடிக்காது. சிக்கனம் அவர் உடன் பிறப்பு. பெரிய காலரும் பெரிய கைப் பட்டியும் வைத்த நான்கு சட்டைகள் தைக்கக்கூடிய துணியில், அதையே சின்னக் காலரும் சின்னக் கைப்பட்டியும் வைத்துத் தைத்தால் ஐந்து சட்டை தைக்கலாமே என்று எண்ணக்கூடியவர். அன்பளிப்பாக ஒரு ரூபாய் கிடைத்தாலும் சரி.. வாய் நிறைய ‘நன்றி’ என்று மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்வார். அவரிடமிருந்து ஒரு காசு பெயர்வதும் இமயமலை பெயர்வதும் ஒன்றுதான்.
பகுத்தறிவுப் பிரச்சாரம் பரபரப்பாகப் பரவிக் கொண்டிருந்த காலம் அது. பெரியார் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஈரோடு வழியாகச் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நேரம். இரண்டு கழகச் செயல் வீரர்கள் அவருடன் துணையாக வந்து கொண்டிருந்தார்கள்.
கோயம்பத்தூரிலிருந்து தனி வண்டியில் புறப்படும் போது கழகத் தோழர்கள் சென்னை போகிறவரை எல்லாருக்கும் பயன்படட்டுமே என்ற எண்ணத்தில் நான்கு டஜன் சாத்துக்குடிப் பழங்களை ஒரு கூடையில் போட்டுப் பெரியாரிடம் கொடுத்திருந்தார்கள். அதில் ஏதாவது பழம் கிடைத்தால் பரவாயில்லையே என்றுதான் அவருடன் பயணம் செய்த கழகச் செயல்வீரர்கள் ஜாடைமாடையாகப் பேசிக் கொண்டு வந்தார்கள். ஆனால், பெரியாரவர்கள் அசைந்து கொடுத்த பாடில்லை.
ஈரோட்டுக்கு வந்தபோது பேருந்து நிலையத்திற்கருகில் வண்டியை நிறுத்தச் சொன்னார் பெரியார். “சரி.. இப்போது பழம் கிடைக்கப் போகிறது. ஆளுக்கு இரண்டு மூன்றாவது கொடுப்பார்!” என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள் கழகச் செயல் வீரர்கள்.
ஆனால், பெரியார் அவர்கள் பையிலிருந்து நாலணாவை (25 காசுகள்) எடுத்துக் கொடுத்தார்.
“ஆளுக்கு ஒரு டீ சாப்பிடுங்க! டிரைவர்.. நீயுங்கூடத்தான்! மூணு டீக்கு மூணு அணாப் போக, சொச்சம் ஒரணாவைத் திரும்பக் கொண்டு வரணும்!”
பெரியார் அவர்கள் போட்ட உத்தரவு செயல் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாவம்.. அவர்கள் என்ன எதிர்த்தா பேச முடியும்? ஏமாற்றத்தோடு டிரைவரையும் அழைத்துக் கொண்டு டீக்கடைக்குப் போனார்கள்.
அப்போது, “சாத்துக்குடிப் பழேம்.. சாத்துக்குடிப் பழேம்..” என்று இனிமையாக ராகம் விட்டுக் கூவிக் கொண்டு, அழகாக அடுக்கப்பட்ட சாத்துக்குடிப் பழங்களுடன் கூடிய அகன்ற கூடையைத் தலையில் சுமந்து வந்த பழக்காரன், “ஐயாவுக்கு சாத்துக்குடி வேணுங்களா?” என்று பெரியாரிடத்தில் பிரியமாகக் கேட்டான்.
“டஜன் என்ன விலை?” என்றார் பெரியார்.
“ஒண்ணரை ரூபாய்!” என்றான் பழக்காரன்.
“நாலணா குறைத்து ஒண்ணே கால் ரூபாய்க்குத் தர முடியுமா?” பேரம் பேசினார் பெரியார்.
“மற்றவர்களானால் டஜன் ரெண்டு ரூபா தான். ஐயாவானதாலே வாங்கின விலையான ஒண்ணரை ரூபாய்க்குத் தர்றேன்” என்றான் பழக்காரன்.
“ஒண்ணே காலுக்கு மேல் வேண்டாம்” என்றார் பெரியார்.
“டஜன் ஒண்ணே காலுக்குக் கிடைச்சா நானே வாங்கிக்குவேன்” என்று பழக்காரன் ஒரு போடு போட்டான்.
“அப்படியா?” என்ற பெரியார் பக்கத்திலிருந்ம பழக்கூடையை எடுத்துப் பழக்காரனிடம் கொடுத்தார்.
“இதோ பார்.. இதிலே நாலு டஜன் பழம் இருக்கு.. ஒண்ணேகால் ரூபாய்க்குக் கணக்குப் போட்டு, நாலு டஜனுக்கு அஞ்சி ரூபா எடு..” என்று ஒரு பெரும்போடு போட்டார் பெரியார்.
அசந்து போன பழக்காரன் பெரியார் அவர்கள் மேல் பிரியமுள்ளவனாகையால், கையில் பணமில்லாவிட்டாலும் இங்குமங்கும் ஓடி ஐந்து ரூபாயைச் சேர்த்துக் கொண்டு வந்து கொடுத்தான்.
டீ சாப்பிட்டு விட்டுத் திரும்பிய செயல் வீரர்கள் இதைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள். பெரியார் மறக்காமல் மூன்று டீக்கு மூன்றணா போக மீதம் ஓரணாவைத் திரும்ப வாங்கிக் கொண்டார்.
இதன் பிறகு செயல் வீரர்கள் சென்னை போய்ச் சேரும் வரைக்கும் பச்சைத் தண்ணீருக்குக் கூட வாய் திறந்து பேசவில்லை!
http://puthu.thinnai.com/?p=5315

Monday 17 October 2011

ஏன் பிரிந்தாள்?


மலர்த் தோட்டத்தினுள் அந்த மலர்ப் பதுமை மெதுவாக நடந்தாள்! குவளையும் முல்லையும்! கனகாம்பரமும் செண்பகமும்! செவ்வந்தியும் செங்காந்தளும்! நீலோத்பலமும் நாகலிங்கமும்! சம்பங்கியும் ரோஜாவும்! எத்தனை மலர்கள்! தோட்டத்திலுள்ள மலர்களைச் சொல்லவில்லை! இவ்வளவும் வனப்புமிக்க அவள் பொன்னுடலில் பூத்திருக்கின்றன!
தன் மேனியில் இத்தனை மலர்கள் பூத்திருக்க அவளுக்கு இன்னும் ஆசையைப் பாருங்கள்! மங்களகரமான மஞ்சள் நிறங்காட்டும் சூரிய காந்தியைப் பறித்துக் கொண்டு, “நீ என் முகத்திற்கு இணைதானோ?” என்று கிண்கிணிக் குரலில் கேள்வி எழுப்ப, “இணையெப்படி யாகும் இனியவளே!” என்ற பதில் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்;பினாள்! பிடரியில்லாச் சிங்கம் போல் தடந்தோள் இளைஞனொருவன் நிற்கக் கண்டாள்! முதிர்கதிர் தாங்கிய நெற்பயிராய் நாணிய அவள், “ஏன் இயலாது?” என்று குழலிசை மிழற்றினாள்.
“உன் முகமே ஒரு மலர்த் தோட்டம்! பற்பல மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன! இத்தனை மலர்களும் அந்தச் சூரிய காந்தியிடம் இல்லையே!” என்று கம்பீரமாய் கர்ஜித்தான் காளை. நாணிச் சிவந்தாள் நங்கை!
அவள் ஓர் அதிசய அழகி!
அவன் ஓர் அற்புதக் கவிஞன்!
அதிசய அழகும் அற்புதக் கவித்துவமும் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டால் என்ன நடக்கும்? ‘விழியசைக்க நேரமில்லை – வீண்தானே அந்த நேரம்!” என்று இமையாத கண்ணினனாய், இனிப்பான நெஞ்சினனாய் அந்தப் பொற்சிலையின் அழகை அள்ளி அள்ளிப் பருகிக் கொண்டிருந்தான் கவிஞன். இன்பமழையில் நனைந்து நனைந்து திளைத்துக் கொண்டிருந்தாள் ஏந்திழை.
பிறகு…! பிறகென்ன! அவன் அவளைப் பிரியவில்லை! அவள் அவனைப் பிரியவில்லை!
அவன் அவளைக் கவிதையாக்கினான்! அவள் அவன் கவிதைக்குக் கருப்பொருளானாள்!
அவன் அவளைக் கற்சிலைபோல் நிற்கச் சொல்லி அழகு பார்த்தான். நிலத்தில் பதிந்திருந்த நித்திலப் பாதத்தை நகர்த்தச் சொல்லி அழகு பார்த்தான்! கணுக்கால் தழுவி நின்ற மணி குலுங்கும் சிலம்பதனை அசைக்கச் சொல்லி அழகு பார்த்தான்! முன்னே நடந்து வந்து, முழங்குகிற இடை தன்னை நெளிக்கச் சொல்லி அழகு பார்த்தான்! பின்னே அமர்ந்திருந்து, யாழ் நகர்ந்து போவதுபோல் நடக்கச் சொல்லி அழகு பார்த்தான்! சித்திரக் கரங்கள் தன்னை முத்திரைகள் பலகோடி பொழியச் சொல்லி அழகு பார்த்தான்! கற்கண்டு உருவெடுத்த பொற்குன்றுத் தோள்கள் தம்மை உயர்த்தச் சொல்லி அழகு பார்த்தான்! நுங்குக் குளிர்ச்சி பொங்கும் சங்குக் கழுத்தினை வளைக்கச் சொல்லி அழகு பார்த்தான்! மொட்டவிழித்து மலர் குலுங்கும் சிட்டுச் சிமிழ் முகத்தைச் சிரிக்கச் சொல்லி அழகு பார்த்தான்! முழங்கால்வரை தொங்கும் மழை மேகக் கூந்தல் தன்னைப் பரப்பச் சொல்லி அழகு பார்த்தான்!
ஆம்! அந்த இளங்கவிஞன் பார்த்தான், பார்த்தான், பார்த்ததையே திரும்பத் திரும்பப் பார்த்தான்.
பார்த்துவிட்டு என்ன செய்தான்? மழை பொழிந்தான்! கவிதை மழை பொழிந்தான்! ஒரு நாள் பொழிந்து விட்டு மறுநாள் நின்று போகும் சாதாரண மழையாக அது இல்லை. அது அடைமழையாகப் பொழிந்து கொண்டிருந்தது! கவிதை ஆறாகக் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது! அமரகாவியங்கள் பிறந்து கொண்டே இருந்தன! நாடே மகிழ்ந்தது! மக்களெல்லாம் மகிழ்ச்சியெனும் கடலில் திளைத்து ‘கவிதை மன்னன் இவன்’ என்று புகழாரம் சூட்டினார்கள். மேன்மேலும் கவிதை பெற ஆர்வமதைக் காட்டினார்கள்.
நம்பிக்கோ மகிழ்ச்சி! நங்கைக்கோ பெருமை! வல்லி ஒரு நாள் வாய் திறந்து யாழ் வாசித்தாள்!
“ஆருயிர் போன்றவரே! பொற்கவிதை உங்களுக்கு எவ்விதமாய் முகிழ்க்கிறது?”
யாழிசை கேட்ட நம்பி உதட்டுத் தாழ் திறந்து பதில் சொன்னான்! “அமுதாக வந்தவளே! உன்னுடைய அழகு உருவம் என்னுணர்வு எழுப்புகிறது! உணர்வெழுப்பும் மோகமெனும் மேகந்தான் கவிதை மழை பொழிகிறது! இந்த அழகுருவம் உள்ள மட்டும் கவிதை மழை பொழிந்து கொண்டேயிருக்கும்!”
நம்பியின் பதில் கேட்டு நங்கை ஏனோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். அப்படிச் சிந்தனையில் ஆழ்ந்தவள் அடுத்த நாள் நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள். மீளாத நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள்! ஆம்! ஆயிழை நஞ்குண்டு மாய்ந்துவிட்டாள்.
கவிஞன் துடித்தான்! கண்ணீர் வடித்தான்! முடிவில் காரிகை விட்டுச் சென்ற கடிதத்தைப் படித்தான்!
“அமுதாக வந்தவளே!” என்று கனிவாக அழைத்தவரே! உமதுள்ளத்தில் உரு நிறுத்தி உயிர் பிரிந்து செல்லுகின்றேன்! ஏனென்று கேட்பீர்! வயதானால் என்னுடைய அழகுருவம் வாடிப் போகும். அப்போது உம்முடைய கவிதை மழை நின்று போகும்! ஆனால் இப்போது? என்னுடைய அழகு உமது உள்ளக் கோயிலில் நிலைத்திருக்கும். அதனால் காருள்ளவரை நிலைத்திருக்கும் கவிதைகளை உலகில் நீருள்ளவரை பொழிந்து கொண்டே இருப்பீர்! காதலரே! கவிதை மழை பொழியட்டும்! உலக மக்கள் உள்ளமெலாம் வழியட்டும்!”


Monday 10 October 2011

யார் குதிரை?

அது அஸ்தினாபுரத்தை நோக்கிச் செல்லும் இராஜபாட்டை.  நாலு கால் பாய்ச்சலில் ஒரு குதிரை வாயு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ‘டக்டக்’ என்று அதன் குளம்படிச் சத்தம் ஏதோ ஒரு வேக கதியில் இன்னிசை எழுப்பிக்கொண்டிருந்தது.

திடீரென்று குதிரையின் வேகம் தடைபட்டது.  ஓடிய வேகத்தில் கொஞ்ச தூரம் மெதுவாகச் சென்ற குதிரையை அதன்மேல் அமர்ந்திருந்த வீரன், கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி, வந்த வழியில் திரும்பி, குதிரையைக் சிறிது தூரம் நடத்தினான்.

அதோ! அங்கே கிடப்பது யார்? அவனுக்கு என்ன வந்தது? பாய் விரித்து வீட்டிலே படுப்பதற்கு என்ன? அதற்கு வேகாத வெயில் காய்ந்துகொண்டிருக்கும் இந்த இராஜபாட்டைதானா கிடைத்தது? ஏனிங்கே இப்படி விழுந்து கிடக்கிறான்?

வீரன் குதிரையிலிருந்து இறங்கினான். குப்புற விழுந்து கிடந்தவனைப் புரட்டி மூக்கிலே விரல் வைத்துப் பார்த்தான்.  நல்லவேளை, மூச்சு வந்துகொண்டிருந்தது.  தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு குப்பியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை முகத்தில் தெளித்தான்.  சிறிது நேரத்தில் பிரக்ஞை வந்தது.  
“யாரப்பா நீ? என்ன நடந்தது?” என்று கேட்டான் வீரன்.

“என் பெயர் ஆசையப்பன்! உடல் நலமில்லை! வைத்தியரைப் பார்க்கத் தலைநகருக்குப் போய்கொண்டிருந்தேன்.  வெயில் தாங்காமல் மயங்கிக் கீழே விழுந்துவிட்டேன்!” என்று பதில் சொன்னவாறு படுத்துக்கிடந்தவன் மெதுவாக எழுந்தான்.

“ஆசையப்பன்! நல்ல பெயர்தான்!” இவ்விதம் நினைத்துக் கொண்ட வீரன் அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டவனாய், “ஆசையப்பா! நோயாளியான நீ தலைநகர் வரைக்கும் நிச்சயம் நடந்து போக முடியாது! அதனால் நீ குதிரையில் ஏறிக்கொள்! நான் குதிரையை நடத்திக் கொண்டு வருகிறேன்” என்று மிகுந்த கனிவோடு சொன்னான்.

இதைக் கேட்ட ஆசையப்பன் அப்போதுதான் மலர்ந்த தாமரையைப் போல் சிரித்தான்.  அடுத்த கணமே குதிரைமேல் ஏறியமர்ந்து கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டான்.  வீரன் குதிரையை மெதுவாக நடத்தியவாறு பின்னாலேயே நடந்தான்.  சில நாழிகை நேரத்துக்கெல்லாம் தலைநகர் வந்துவிட்டது.

“ஆசையப்பா! இனி நீ இறங்கி வைத்தியர் வீட்டுக்குப் போ! நான் என் வழியே போக வேண்டும்!” என்று உதவி செய்த பெருமை பொங்கச் சொன்னான் வீரன்.
ஆனால், ஆசையப்பனோ குதிரையிலிருந்து இறங்கவில்லை. 

“காது கேட்கவில்லையா, இறங்கப்பா!”, வீரன் இரைந்தான்.

“என் குதிரையிலிருந்து நான் ஏன் இறங்க வேண்டும்?” ஆசையப்பன் பதில் சொன்னான்.  வீரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  குதிரை ஆசையப்பனுடையதாமே?
வீரன் எவ்வளவு சொல்லியும் ஆசையப்பன் குதிரையை விட்டு இறங்கவேயில்லை. இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, பெரிய கூட்டம் கூடிவிட்டது.  அங்கு வந்த ஊர்க்காவல் வீரர்கள் என்ன என்று விசாரித்தார்கள். வழக்கு என்று தெரிந்ததும் இருவரையும் அரசவைக்கு அழைத்துச் சென்றார்கள்.

வழக்கு அரசருக்கு முன்பு வந்தது.

நடந்தவற்றை ஆரம்பம் முதல் விளக்கமாகச் சொல்லித் தன் குதிரையைத் தனக்கு வாங்கித் தர வேண்டுமென்று அரசரிடம் முறையிட்டான் வீரன்.
ஆனால் ஆசையப்பனோ தன் வழக்கை வேறு விதமாகச் சொன்னான். தான் இராஜபாட்டையில் குதிரைச்சவாரி செய்து வந்தபோது, தன்னந்தனியே நடந்துகொண்டிருந்த அந்த வீரன், தன்னை நிறுத்திப் பேச்சுத் துணைக்குக் கூட வருவதாகச் சொல்லி உடன் நடந்து வந்தானென்றும், தலைநகர் வந்ததும் மலைவிழுங்கி மகாதேவன் போல் தன்னைக் குதிரையிலிருந்து இறங்கும்படிக் கேட்டான் என்றும் சொல்லி, குதிரை தன்னுடையது என்ற வாதிட்டான்.
வழக்கைக் கேட்ட அஸ்தினாபுரத்து அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படித் தீர்ப்புச் சொல்லுவது? வழக்குக்குரிய குதிரையை லாயத்தில் கட்டும்படி உத்திரவிட்ட அரசர், அடுத்த நாள் தீர்ப்புக் கூறுவதாகச் சொல்லி, சிந்தனை வயப்பட்டவராய்ச் சபையைவிட்டு எழுந்து போனார்.

அடுத்த நாள்! விநோதமான வழக்கின் தீர்ப்பைக் கேட்க ஊர் மக்கள் அனைவருமே அரசவையில் கூடிவிட்டனர்.  அரசர் வந்ததும் தீர்ப்பைச் சொன்னார்.
“ஆசையப்பன் லாயத்திற்குச் சென்று குதிரையை அவிழ்த்துக் கொள்ளலாம்!”

தீர்ப்பைக் கேட்டதும் ஆசையப்பன் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினான். ஏமாற்றத்தோடு வீரனும் பின்னாலேயே சென்றான்.

குதிரை லாயத்திற்குச் சென்ற ஆசையப்பனுக்கு பெரும் அதிர்ச்சி!

அங்கே வரிசை வரிசையாக ஐநூறுக்கும் மேற்பட்ட குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. அதில் எது அவன் முதல் நாள் சவாரி செய்த குதிரை? கண்டுபிடிக்க முடியாமல் விழித்துக் கொண்டு நின்றான்.

ஆனால் வீரன்! தன் குதிரையை அடையாளம் கண்டு கொண்டு, தாடையில் கை வைத்து அன்பாகத் தடவினான்! அது நன்றியுடன் கனைத்தது. அதை அவிழ்த்துக்கொண்டு லாயத்தை விட்டு வெளியே வந்தான் வீரன்.

ஆசையப்பன் குட்டு வெட்ட வெளிச்சமாகிவிட்டது! குதிரை ஏற ஆசைப்பட்டான்! இப்போது கம்பி எண்ணப்போய்விட்டான்!



Wednesday 5 October 2011

பூவும் மீனும் / வாசம் தேடும் தூக்கம்

அவளுக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது! இருக்காதா பின்னே? காலையிருந்து அவளுக்கு எத்தனை உளைச்சல்!

இரண்டு நாளைக்கு முன் இரவோடு இரவாக, கட்டுமரம் ஏறிக் கடலுக்குள் போன கணவன் உதயாதி நாழிகைக்குத் திரும்பிவிடுவான் என்று, கட்டான இடைப்பகுதியில், வலது கையின் செங்காந்தள் மலர் போல் தொங்கும் விரல்கள் ஒய்யாரமாய்ப் பதிந்திருக்க, இடது கையின் ஆலிங்கனத்தைப் பெற்றிருந்த வெற்றுப் பிரம்புக் கூடை. இடையில் இன்னொரு பகுதியைத் தொற்றிக் கொண்டிருக்க, கடற்கரை மணலில் எவ்வளவு நேரந்தான் காத்துக் கொண்டிருப்பது!

கடல்நீரில் குளித்தெழுந்த செங்கதிர்ச் சூரியன், உச்சிக்கு வந்து வெள்ளிப் பாளமாய் உரு மாறிவிட்ட பிறகும் கணவன் திரும்பாமல் போகவே, தெம்போடு நின்றவள் துவண்டு போய் ஒரு மணல் திட்டில் அமர, சூரியன் மேலைத் திசையில் சுழலுகின்ற பொன் தாம்பாளமாய் மாறியிருந்த நேரத்தில், கட்டுமரத்தில் கணவன் வந்து இறங்க, கொண்டு வந்த மீனையெல்லாம் அவள் கூடையில் அள்ளிக் கொட்டிக் கொள்கிறாள்

அங்கிருந்து மூன்று மைல் தூரத்தில் சந்தை! அங்கே போனால் தான் மீனை விற்றுக் காசாக்கி, அரிசி வாங்கிக் கொண்டு வர முடியும்!

சந்தைக்குச் சென்றவள் மீனையெல்லாம் நல்ல விலைக்கு விற்றாகிவிட்டது! அரிசியும் வாங்கியாகிவிட்டது! விரைவில் வீட்டுக்குத் திரும்பி, காத்துக் கொண்டிருக்கும் கணவனுக்குப் பொங்கிப் போட வேண்டும் என்ற எண்ணத்தில் வேக நடை போட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாள்.

அப்போதுதான் அவளுக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. கண்ணை மூடிக் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் போலிருந்தது. சரிதான்! அப்படித் தூங்கிவிட்டால்... கடலுக்குள் சென்று இரண்டு நாளைக்குப் பின் திரும்பியிருக்கும் கணவன் குடிசையில் ஆசையாகக் காத்துக் கொண்டிருப்பானே!

தூக்கக் கிறக்கத்திலும் அவள் கால்கள் நடையைக் கொஞ்சம் எட்டிப் போட்டன! அவளுக்கும் ஆசை இருக்காதா?

அந்த நேரம் பார்த்துத்தானா பாழாய்ப் போன மழை ‘சடசட’வெனக் கொட்ட வேண்டும்? அதற்கென்ன நேரமா காலமா? இடமா தேசமா? மீன்காரியின் அவசரம் அதற்கெங்கே தெரியப் போகிறது?

பாதைக்குப் பக்கத்திலிருந்த குடிசைக்குள் மழைக்காக ஒதுங்கினாள் மீன்காரி. உள்ளே மினுக்கு மினுக்கென்று ஒரு சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ‘கம்’மென்ற மலர் மணம் குடிசை முழுதும் நிரம்பியிருந்தது. ஒரு பக்கத்தில் இரண்டு மூன்று கூடைகள் இருந்தன. எல்லாவற்றிலும் மல்லிகை மலர்கள்.

குடிசைக்குள் தடுத்திருந்த ஒரு சின்ன அறைக்குள்ளிருந்து பூக்காரி வந்தாள். மழைக்காக ஒதுங்கியது பற்றி மீன்காரி சொல்ல, பூக்காரியும் சரியென்று அவளை உட்காரச் சொன்னாள்.

துணியில் முடிந்த அரிசிப் பொட்டலத்துடன் பிரம்புக் கூடையை ஒரு புறத்தில் வைத்த மீன்காரிக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. இருந்தாலும் கணவனின் நினைப்பில் சமாளித்தவாறு உட்கார்ந்திருந்தாள்.

மழையோ ‘சோ’வெனப் கொட்டிக்கொண்டிருந்தது. கடற் கணவனைப் பிரிந்த மேகத்திற்கு எத்தனை நாள் ஏக்கமோ? ஆசை தீரப் பொழிந்து கொண்டிருந்தது. நடுநிசியும் ஆகிவிட்டது! இன்னும் நின்றபாடில்லை.

மீன்காரி நினைத்துக் கொண்டாள்: சரி..! கணவன் இதற்குள்ளாக டீக்கடையில் ஏதாவது பொரை பிஸ்கட் வாங்கித் தின்றுவிட்டு, நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பான்! இனிமேல் மழை விட்டாலும் கூட ஒண்டிக் கட்டையாய் ஊருக்குத் திரும்ப முடியாது! அங்கேயே தூங்கிவிட்டுக் காலையில் போகவேண்டியது தான்’- பூக்காரியும் அதை ஆமோதித்தாள்.

பூக்கூடைகளுக்குப் பக்கத்திலேயே இரண்டு பெண்களும் தலை வைத்துப் படுத்துக் கொண்டார்கள். அம்மாடி! மீன்காரிக்கு நிம்மதி! நன்றாகத் தூங்கலாம்! கண்ணை நன்றாக மூடிக்கொண்டாள். முதலில் ஒருக்களித்துப் படுத்தவள் பிறகு புரண்டு படுத்தாள்.

இது என்ன ஆச்சரியம்! கண்கள் தாம் மூடிக்கொண்டிருக்கின்றனவே தவிர, தூக்கம் மட்டும் வரவில்லையே! முனகிக் கொண்டே புரண்டு படுத்தாள்.

“என்ன, புருஷன் நினைப்பு வந்திடுச்சா?” பூக்காரி கேட்டாள்.

“புருஷன் நினைப்புமில்லை ஒண்ணுமில்லே! அதை அப்பவே விட்டுட்டேன்!” மீன்காரி பதில் சொன்னாள்.

“பின்னே ஏன் தூக்கம் வரவில்லை?” பூக்காரி மீண்டும் கேட்டாள்.

“அது தான் எனக்குத் தெரியல்லே” மீன்காரி மறுபடியும் புரண்டாள்.

எவ்வளவு நேரந்தான் இப்படியே நகர்வது! மீன்காரியின் முனகல் பூக்காரிக்கும் இடைஞ்சலாயிருந்தது. மீன்காரியின் எள்ளுப் பூ நாசி ‘சர்’ரென்று சொடுக்குப் போட்டு ஏதோ அடைப்பை அடிக்கடி போக்கிக் கொண்டிருந்தது.

. “சனியன், ஏன் தான் தூக்கம் வரல்லியோ?” என்று வாய்விட்டு வேறு பிதற்ற ஆரம்பித்தாள் மீன்காரி.

திடீரென்று பூக்காரிக்கு ஞானோதயம் ஆனது போலிருந்தது!

எழுந்தாள்! தலைமாட்டிலிருந்த பூக்கூடைகளை, தடுத்திருந்த உள் அறைக்குள் கொண்டு போய் வைத்தாள். பிறகு மீன் கூடையை எடுத்துத் தலை மாட்டுக்குப் பக்கத்தில் வைத்தாள்.

கூடைக்குள்ளிருந்து ‘குப்’பென்று மீன் வாசைன வீசியது. அடுத்த கணம்… மீன்காரி குறட்டைவிட ஆரம்பித்தாள்!




Sunday 2 October 2011

பயனுள்ள பொருள்


மத்திய தரைக் கடலில் நீல வண்ணத்து நீரைக் கிழித்துக் கொண்டு வந்த அந்தக் கப்பல் அலெக்ஸாண்டிரியா துறை முகத்தை வந்தடைந்தது. கப்பலில் ஒரு வெள்ளைக்காரர் வாயில் வந்த படி ஏதோ திட்டிக்கொண்டே வந்தார். அவர் பேச்சில் அடிக்கடி அரை நிர்வாணப் பக்கிரி என்ற வார்த்தை அடிப்பட்டுக கொண்டிருந்தது. அப்பப்ப! அவரது தொனியின் தோரணையில் தான் எவ்வளவு வெறுப்பு மண்டிக் கிடந்தது. யாரைப் பற்றி அவர் அப்படிப் பேசுகிறார்? அதே கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த இந்திய நாட்டுப் பிதா அண்ணல் காந்தி மகானைப் பற்றித்தான் அவர் அப்படி அவதூறு பேசிக் கொண்டு வந்தார்.
1931-ம் ஆண்டு இந்தியச் சுதந்திரம் பற்றிப் பேச்சு வார்த்தைகள் நடத்த வட்டமேஜை மாநாடு கூட்டப் பெற்றது. அதில் கலந்து கொள்ள அண்ணலவர்கள் இங்கிலாந்து சென்றார். இடுப்பில் முழத் துண்டு மட்டுமே உடுத்தியிருந்த அண்ணலவர்களை வெள்ளைக்காரர்கள் எல்லோரும் விநோதமாய்ப் பார்த்தார்கள். உலகப் புகழ் பெற்ற சர்ச்சில் அவரை அரை நிர்வாணப் பக்கிரி என்றார்.
அரசரைச் சந்தித்துப் பேசவேண்டுமென்றால் கண்ணியமான உடுப்போடு தான் வர வேண்டும் என்று பல வெள்ளைக்காரப் பிரமுகர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால், அண்ணலவர்கள், “இந்திய மக்களின் இல்லாமையைப் பிரதிபலிக்கவே இவ்வாடை உடுத்துள்ளேன். அரசரை வேண்டுமானால் பார்க்காமல் திரும்பத் தயார். ஆனால் ஆடையை மாற்றிக் கொள்ள முடியாது” என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார்.
இங்கிலாந்தில் படித்துப் பாரிஸ்டர் பட்டம் பெற்ற அண்ணலவர்கள் கோட்டும் சூட்டுமாக வெள்ளைக்கார பாணியில் அல்லவா காட்சியளிக்க வேண்டும்! ஆனால் ஏன் அரை நிர்வாணப் பக்கிரி ஆனார்?
தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழிலை முடித்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்து அரசியலில் தன்னை அர்பணித்துக் கொண்ட போது, நாடு முழுவதும் சுற்றிய அண்ணலவர்கள் தமிழ் நாட்டுக்கும் வந்தார். மதுரை மாவட்டத்தில் கிராம மக்கள் எப்படி அரைத் துண்டும் அரை வயிற்றுக் கஞ்சியுமாய் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை நேருக்கு நேர் கண்ட போது, “எனக்கு எதற்கு கோட்டும் சூட்டும்? இனிமேல் நானும் இவர்களைப் போலவே காட்சியளிப்பேன்!” என்ற உறுதி பூண்டு அதைச் செயலிலும் காட்டினார். அந்த உறுதியை அரசரைப் பார்ப்பதற்காக மாற்றிக் கொள்ள முடியுமா என்ன?
கடைசியில் அண்ணலவர்கள் அரை நிர்வாணப் பக்கிரியாகவே அரசரைச் சந்தித்துப் பேசினார். ஆனால் பேச்சு வார்த்தைகள் பலன் தரவில்லை. வெள்ளைக்காரர்களுக்கு மிகவும் திருப்தி! இருந்தாலும் அரைத் துண்டோடு அரசரைச் சந்தித்துவிட்டாரே என்று அவர் மேல் கடும் வெறுப்பு.
இதன் பிறகு அண்ணலவர்கள் இந்தியா திரும்பக் கப்பல் ஏறினார். இந்தச் சூழ்நிலையில் தான் முன் சொன்னதுபோல் வெள்ளைக்காரர் அண்ணவலர்களைப் பற்றி அவதூறாகப் பேசிக் கொண்டு வந்தார்.
கப்பல் அலெக்ஸாண்டிரியா விட்டுப் புறப்பட்ட பின்பு ஒரு நாள் அந்த வெள்ளைக்காரர் அண்ணலவர்களை அவரது அறைக்கே சென்று சந்தித்தார். புன்முறுவலோடு வரவேற்புக் கூறிய அண்ணலவர்கள், “வந்த காரியம் என்னவோ?” என்று கேட்க, “ஒன்றுமில்லை! உங்களைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதியுள்ளேன்! அது பற்றி உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளவே வந்துள்ளேன்!” என்றவாறு, அழகாக அடுக்கப்பட்டு ஒரு மூலையில் குண்டூசியால் குத்தப் பெற்றிருந்த காகிதக் கற்றை ஒன்றை அண்ணலவர்களிடம் கொடுத்தார் வெள்ளைக்காரர்.
“நன்றி!” என்றவாறு அதை வாங்கிக் கொண்ட அண்ணலவர்கள் அமைதியாப் படிக்கலுற்றார். அழகான ஆங்கிலக் கவிதைதான். ஆனால்.. வெறுப்பென்னும் நஞ்சை வரிக்கு வரி உருக்கி வார்த்திருந்தார் வெள்ளைக்காரர். கன்னாபின்னாவென்று அண்ணலவர்களுக்குச் சரியான அர்ச்சனை. “பரதேசிப் பக்கிரிக்குப் பயந்தா சூரியனே அஸ்மதிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்துவிடப் போகிறது?” என்பது போன்ற கடுமையான விமர்சனங்கள்.
புன்முறுவல் மாறாத முகத்துடன் அனைத்தையும் படித்து முடித்த அண்ணலவர்கள் முடிவில், “உங்கள் பொன்னான நேரத்தைப் பயன்படுத்தி என்னைப் பற்றி வர்ணித்துள்ளீர்கள்! அதற்காக நன்றி!” என்றார். கோபமான பதிலை எதிர் பாhத்து வந்த வெள்ளைக்காரருக்கு அமைதியான பதிலைக் கேட்க எரிச்சலாக இருந்தது. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, “உங்களுக்குப் பயனுள்ள பகுதி ஏதேனும் இருந்ததா?” என்று கேட்டார்.
“பயனுள்ள பகுதிதானே! ஒன்றே ஒன்று மட்டும் என் கண்ணில் பட்டது!” என்று பதிலளித்தார் அண்ணலவர்கள்.
“அப்படியா? அது என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று ஆவலை அடக்கமுடியாதவராகக் கேட்டார் வெள்ளைக்காரர்.
“ஓ! தாராளமாகத் தெரிந்து கொள்ளலாமே!” என்றவாறு காகிதக் கற்றையின் மூலையில் குத்தப்பெற்றிருந்த குண்டூசியைப் பிரித்து எடுத்து, “இதோ.. இந்தக் குண்டூசி தான் பயனுள்ள பொருள்!” என்று அமைதியாகக் காட்டினார் அண்ணலவர்கள்.
பயனில்லாத காகிதக் கற்றை வெள்ளைக்காரரின் கண் முன்னாலேயே குப்பைத தொட்டிக்குள் சென்றது.

http://puthu.thinnai.com/?p=4680