Thursday 5 January 2012

சிந்தனைச் சிற்பி

மாமேதைகள் பிறந்த கிரேக்க நாடு! அங்கே மஞ்சு சூழ் மலைப் புறத்தில் ஒரு சிற்றூர்! அங்கிருந்து கூட்டங் கூட்டமாக வந்து கொண்டிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் பேசிக் கொள்கிறார்கள்.
 
“ஆஹா! என்ன மேதா விலாசம்! வாய் திறந்தால் போதும் சத்தான சிந்தனைகளை வாரித் தெளிக்கிறார்! முத்தான கருத்துக்களை கொட்டிக் கொடுக்கிறார்!”
 
யார் இந்தப் புகழ்ச்சிக்குரிய சிந்தனைச் சிற்பி? மக்களின் சிந்தை கவர்ந்து மிதிப்பைப் பெற்ற மாமேதை! எல்லோரும் அவரை டயாஜெனிஸ் என்று அழைக்கிறார்கள். 
 
 அவர் குடியிருந்த குடிசை வீட்டிற்கே சென்று பார்க்கிறார்கள்.  உரையாடி மகிழ்ந்துவிட்டுத் திரும்புகிறார்கள்.
 
காட்டுத் தீ போல் இந்தச் செய்தி நாட்டைப் பற்றிக் கொள்கிறது. நாடாளும் நாயகனின் காதுகளிலும் விழுகிறது.
 
“அந்த மேதையை நான் பார்க்க வேண்டும்! அழைத்து வாருங்கள் அரசவைக்கு!” என்று ஆணை பிறக்கிறது.  ஆர்பாட்டத்தோடு அணிவகுத்துப் புறப்படுகின்றனர் ஐம்பது வீரர்கள்.
 
ஆணையைப் பிறப்பித்தவன் அலெக்ஸாண்டர்! ஆட்பெரும் படை கொண்டு அவனியையே நடுங்க வைத்த மாசிடோனியாவின் மாவீரன்! ஈராயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரக்கணக்கான மறவர்களைக் கொண்ட மாபெரும் சைனியத்தை உருவாக்கிய பெரும் தீரன்! ஏறு நடையும் எழிலும் கொண்டு விளங்கிய ஏதென்ஸ் நகராட்சியைத் திக்குமுக்காடச் செய்தவன்! இந்தியாவின் ஜீலம் நதிவரை வந்து தன் வீரத்தின் முத்திரையைச் சூரத்தனமாகப் பதித்துச் சென்ற சண்டப் பிரசண்டன்! ஆம்! அவன் தான் ஆணையைப் பிறப்பித்தான்!
 
ஆர்பாட்டத்தோடு சென்ற வீரர்கள் விரைவிலேயே அடக்கத்தோடு திரும்பினர்.
 
“எங்கே அந்த மேதை?” அலெக்சாண்டர் கேட்டான்.
 
“சென்று தான் தரிசிக்க வேண்டும்!” பதிலுறுத்தினர் வீரர்கள்.
 
இதைக் கேட்டதுதான் தாமதம்! பொங்கிய கோபத்தை அங்கத்தில் அடக்கிக் கொண்டு புயல் போலப் புறப்பட்டான் அலெக்சாண்டர்!
 
வீர நடை போட்டு அவன் தூர வரும்போதே, தத்துவ மேதையைத் தரிசிக்கத் திரண்டிருந்த மக்கள் திகிலுடன் விலகி நின்றனர்.
 
இரத்தச் சிவப்பான கிரணங்களை வாரி இறைத்துக் கொண்டு பள்ளியறை நாடிப் பகலவன் மேற்றிசை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த நேரத்தில், “ஏதாகுமோ! என்ன நடக்குமோ!” என்று மக்கள் கிலி கொண்டு நிற்க, புலி போல நின்றான் அலெக்ஸாண்டர்!
 
அங்கு ஒரு புறத்தில் ஓர் ஓலைக் குடிசை! அதன் தாழ்வாரத்தில் பழுத்த பழமாக ஒரு கிழம்! தலையிலும் தாடைகளிலும் வெள்ளிக் கம்பி போன்ற ரோமங்களின் திரட்சி! கவர்ச்சி மிக்க செழிப்பான முகம்! கடல் போலப் பரந்து விரிந்த நெற்றி! கழுகின் அலகு போல் நீண்ட மூக்கு! தடித்த உதடுகள்! துடிக்கும் புருவங்கள்! கனச் சிவப்பில் தீட்சண்யமான கண்கள்! ஆனால், பொழிந்து கொண்டிருப்பதோ கனிவு மழை!
 
“நான் தான் அலெக்சாண்டர்!” கம்பீரமான குரல் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது!
 
“ஓ.. அப்படியா?” தாடிக்காரக் கிழத்தின் தடிப்பான உதடுகளிலிருந்து நயமான நாதசுர மிழற்றல்!
 
“நானிலம் நடுங்கப் படை நடத்திக் கொண்டிருப்பவன் நான்! அகிலத்தையே என் அடி தொட்டுக் கிடக்க வைக்கும் ஆற்றல் மிகு சக்கரவர்த்தி நான்!” அலெக்ஸாண்டர் மேலும் கர்ஜித்தான்!
 
“ஓஹோ!” புதிராகக் காட்சி தந்த கிழத்தின் வாயிலிருந்து புளகிக்கச் செய்யும் புல்லாங்குழல் நாதம்!
 
“என்னைப் போல் ஒரு வீரன் இந்த மண்ணுலகில் தோன்றியதில்லை! தோன்றப் போவதுமில்லை! ஆம்! என்னை ஈன்றெடுத்த அன்னை மட்டுமல்ல!
 
அந்த ஆண்டவனே நினைத்தாலும் இன்னொரு அலெக்ஸாண்டரை உருவாக்க முடியாது! அப்படிப்பட்ட புகழுக்கு உரியவன் நான்!” ஆக்கிரோஷத்தோடு நெருங்கினான் அலெக்ஸாண்டர்!
 
“ஓஹோஹோ!” என்று கிண்கிணிக் குரல் கொடுத்த அந்தக் கிழம், தன் முகத்தில் ஒரு சாந்தப் புன்னகையைத் தவழவிட்டது!
 
அந்தப் புன்னகைக்குத் தான் என்ன சக்தி! அலெக்ஸாண்டரின் ஆர்ப்பரிப்பு அடங்கிவிட்டதே! தணலாகப் புறப்பட்டு வந்தவன் இப்போது புனலாக மாறிவிட்டானே! காந்தக் கண்களின் கவர்ச்சியில் கட்டுப்பட்டு, இரும்புத் துண்டாகவல்லவா நிற்கிறான்!
 
“தங்களைக் காணத்தான் வந்துள்ளேன். தத்துவ மேதையே! வைரங்கள்!  வைடூரியங்கள்! வண்ணமிகு ரத்தினங்கள்! கண்ணைப் பறித்திடும் கடல் நீலக் கோமேதகங்கள்! கத்தும் கடல் கொடுக்கும் முத்துச் சுடர் மணிகள்! இத்தனை செல்வங்களையும் நான் குன்று போல் குவித்துள்ளேன்! வேண்டியதைக் கேளுங்கள்! காணிக்கையாக்கச் சித்தமாய் இருக்கிறேன்!” என்று அலெக்ஸாண்டரின் கர்ஜனைக் குரலில் கனிவு மிகுதியும் கலந்திருந்தது!
 
தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த கிழம் காதைக் கொஞ்சம் திருப்பி, அதில் உள்ளங்கையை அமர்த்தி, “என்ன?” என்று ஓர் எதிர் கேள்வி எழுப்பிற்று!
“தங்களுக்கு என்ன வேண்டும்?” உரக்கக் கூவினான் அலெக்ஸாண்டர்!
“எனக்குச் சூரிய வெளிச்சம் வேண்டும்! மறைக்காமல் கொஞ்சம் தள்ளி நின்றால், அதுவே போதும்!”
 
கிழத்திடமிருந்து வந்த பதிலைக் கேட்டு வாயடைத்துப் போனான் அலெக்ஸாண்டர்! “மண்ணுலகமே வேண்டும்” என்று அவன் உலகை வலம் வருகிறான்!
 
ஆனால், இந்தக் கிழத்திற்குச் சூரிய வெளிச்சம் போதுமாமே! ஆம்! சூரியன் இல்லாவிட்டால் இந்த உலகம் ஏது?
 
அகங்காரத்தோடு வந்த அலெக்ஸாண்டர் அடக்கத்தோடு மண்டியிட்டான்!
 

எப்படி இருக்கும்?

அந்தப் படம் லண்டன் மாநகரில் ஆயிரமாவது நாளாக ஓடிக் கொண்டிருந்தது.  அதைச் சிறப்பிக்கும் வகையில் அந்தக் கொட்டகையில் பெரிய விழா ஏற்பாடு செய்திருந்தார்கள்.  படத்தின் கதாநாயகி நேரிலே மேடையில் தோன்றுகிறாள் என்பதால், ஒரு பவுண்ட் டிக்கெட் ஐம்பது பவுண்டுக்குக்கூட, கள்ளமார்க்கெட்டில் கிடைக்கவில்லை.  கொட்டகை முழுதும் கூட்டம் பொங்கி வழிந்தது.

இந்த விழாவில் இன்னொரு சிறப்பு.  அகில உலக மேதை பெர்னாட்ஷா தலைமை தாங்குகிறார்.  அவர்தான் அந்தப் படத்திற்கு கதை அமைத்து உரையாடல்களை எழுதியிருந்தார்.

நடிகை மேடைக்கு வந்ததும் ஜனங்களின் கண்களெல்லாம் அவளை மொய்க்க ஆரம்பித்தன.  ஆனால், அவளுடைய கண்களோ மேடையில்  இருந்த ஷா அவர்களின்மேல் நிலைபெற்று நின்றுவிட்டன.

அமைதியான உருவம்! பரட்டைத் தலை! ஒழுங்கற்ற தாடி! முகமெல்லாம் வயோதிகத்தின் ரேகைகள்! இல்லை.. இல்லை.. அறிவு முதிர்ச்சியின் அடையாளங்கள்! அவரைப் பற்றி அவள் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால், இன்று தான் நேருக்கு நேர் பார்க்கிறாள்.

நடிகையைப்பற்றி இப்போது சில வார்த்தைகள் சொல்லித்தான் ஆக வேண்டும். அவளது அழகிய கவர்ச்சிப் படங்களைப் போடாத செய்தித்தாள்களே இல்லை.  கருப்பு வெள்ளைப் படத்திலேயே அவள் உருவம் அதியற்புதமாக இருக்கும். வண்ணப்படங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?

கழுத்தை ஒட்டினாற் போல் ‘பாப்’ செய்து விடப்பட்ட இயற்கையான கிரே கலர் கூந்தல்! பளப்பளப்பான சிறிய நெற்றி! கூர்மையான புருவங்கள்! நீலநிறம் பாய்ந்த பூனைக் கண்கள்! அளவான – ஆனால் அழகான மூக்கு! ரம்மியமான ரோஸ் கன்னங்கள்! இரத்தச் சிவப்பில் மென்பஞ்சு அதரங்கள்! லில்லிப் பற்கள்! சங்குக் கழுத்து! தெங்கின் கவர்ச்சி! வெண்டைக்காய் போன்ற பிஞ்சு விரல்கள்! கைப்பிடியில் அடங்கும்  “மெய்யோ” எனும் இடை! ஐந்தரை அடி உயரத்திற்கு அழகுருவம் கொடுக்கும் வாழைத்தண்டுக் கால்கள்! வளர்த்துவானேன்! அகில உலகிலுமுள்ள இளைஞர் பட்டாளமே இவளுக்கு விசிறிகள்!

இந்த நடிகையைக் பேட்டி காணும்போது நிருபர்கள் தவறாமல் ஒரு கேள்வி கேட்பார்கள்.

“எப்போது திருமணம்?” - இது தான் அந்தக் கேள்வி.

உடனே அவள் தன் உதவியாளரிடம் ஒரு கடிதக் கத்தையைக் கொண்டு வந்து போடச் சொல்லுவாள்.

“பார்த்தீர்களா! இவையெல்லாம் இன்று எனக்கு வந்த கடிதங்கள்! ஆயிரத்துக்குத் மேலிருக்கும்! எல்லாரும் என்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்கள்! நான் யாரைச் செய்து கொள்ளுவது?” என்று ஓர் எதிர்க் கேள்வி போடுவாள்.

“யாரைத் திருமணம் செய்வது?” என்ற பிரச்சினை அப்புறம் இருக்கட்டும். உங்களுக்காக எத்தனையோ குபேரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்! ‘எப்போது திருமணம்?’ என்பதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்!” என்று நிருபர்கள் மடக்குவார்கள்.

“எப்போது? யாரை?”  என்ற இரண்டையும் ஒன்றாக்குங்கள்! என் எண்ணம்போல் எப்போது மாப்பிள்ளை கிடைக்கிறாரோ, அப்போதே திருமணந்தான்! ‘எண்ணம் போல் என்றால் என்ன?’ என்று என்னை விளக்கம் கேட்காதீர்கள்! அது பரம ரகசியம்!” என்று மடங்காமல் பதில் சொல்லுவாள் அவள்.

மேலும் துளைக்க முடியாத நிருபர்கள், “உங்களைத் திருமணம் செய்து கொள்ளுகிறவர் அதிர்ஷ்டசாலியாகத் தான் இருக்க வேண்டும்” என்பார்கள்.

உடனே அவள், “அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் அறிவாளியாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்!” என்பாள்.  இதைக் கேட்ட நிருபர்கள், “பார்த்தீர்களா! உங்களை அறியாமலே உங்கள் எண்ணத்தைச் சொல்லிவிட்டீர்கள்! நீங்கள் ஒரு சிறந்த அறிவாளியைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்!” என்று சொல்லிச் சிரிப்பார்கள்.

இப்படிப் பேட்டிகளில் உருவகமான அத்தகைய அறிவாளியைத் தான் அன்று அந்த நடிகை மேடையில் சந்தித்துக் கொண்டாள்.  ஷா அவர்களை அவள் தலைமை உரையையும் மிகக் கவனத்தோடு கேட்டு வெகுவாக ரசித்தாள்.

ஷா அவர்கள் பேசும் போது, “ஒரு படத்தின் வெற்றி பல அம்சங்களைப் பொறுத்திருக்கிறது. கதாசிரியன் எந்த நோக்குடன் பாத்திரங்களைப் படைக்கிறானோ – அந்நோக்கு நிறைவு செய்யப்பட வேண்டும்” என்பது அதில் முக்கியமான அம்சமாகும்.  “வாய் பேசுவதைவிட கதாநாயகியின் வனப்பான உடல்  தான் அதிகம் பேச வேண்டும்” என்று இக்கதையின் நாயகியைக் கற்பனை செய்தேன். அதை இந்தக் கதாநாயகி சிறப்புற நிறைவேற்றி இருக்கிறார். படத்தில் மட்டுமல்ல.  இதோ - இங்கே அமர்ந்திருக்கும் அவர் வாய் பேசாமலே வனப்புமிக்க உடலால் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்!” என்றதுமே கூடியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

இதன்பின் அவள் எழுந்து நின்றாள்.  அவ்வளவுதான் கையொலி கொட்டகையைப் பிளந்தது. ஷா அவர்கள் பேசிய பின்புதான் கை தட்டினார்கள்.  ஆனால் அவள் .. எழுந்து நின்றதுமே கை தட்டுகிறார்கள்.  ஷா அவர்கள் சொன்னது உண்மைதான்.  அவள் அழகுருவம் பேசிவிட்டது.

பிரகாசமான புன்னகை ஒன்றை வீசிய அவள் ‘நன்றி’ என்ற அளவோடு பேச்சை முடித்துக் கொண்டாள்.  மறுபடியும் ரசிகர்கள் கைதட்டல்.

பிறகு பட அதிபர் நன்றி கூற ஆரம்பித்தார். அப்போது அருகில் அமர்ந்திருந்த ஷா அவர்களிடம் நடிகை பேச்சுக் கொடுத்தாள்.

“நான் உங்களைக் காதலிக்கிறேன்!” என்றாள் அவள்.

“அப்படியா?” என்றார் அவர்.

“ஆமாம்! ஓர் அறிவாளியைக் கணவராக அடைய வேண்டும் என்பதே என் விருப்பம்!” - இது அவள்.

“எப்படி உனக்கு அந்த விருப்பம் வந்தது?” - இது அவர்.

“என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்து ஒரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும்?” – அவள் குழைந்தாள்.

“அற்புதமாகத் தான் இருக்கும்! ஆனால் உன்னுடைய அறிவும் என்னுடைய அழகும் சேர்ந்து குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது?”

இதைக் கேட்ட நடிகை ‘களுக்’ என்று சிரித்து விட்டாள்!

http://puthu.thinnai.com/?p=7378

Sunday 11 December 2011

கெடுவான் கேடு நினைப்பான்

வசந்தபுரி மகாராணி நோய்ப் படுக்கையில் துவண்டு கிடக்க, இளவரசன் விக்கிரமன் கண்ணீர் சிந்தியவாறு அருகில் இருக்க, மதிவாணர், முத்துராசர் ஆகிய இரண்டு அமைச்சர்களும் கைபிசைந்தவாறு நின்றார்கள்!
“மதியூக மந்திரிகளே! இனி நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லை. பத்து வயதே நிரம்பப் பெற்ற என் மைந்தன் விக்கிரமனை உங்களிடம் ஒப்படைத்துச் செல்லுகிறேன். நீங்கள் தான் அவனுக்குப் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்” என்று மகாராணி கண்ணை மூட, அதற்கான இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்பு, நல்ல நாள் ஒன்று பார்த்து இளவரசன் விக்கிரமனுக்கு முடிசூட்டு விழா நடத்தி, இரண்டு அமைச்சர்களும் அவனுக்கு உறுதுணையாக இருந்து இராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்கள்.
இரண்டு அமைச்சர்களில் மதிவாணர் நல்லொழுக்கம் நிரம்பப் பெற்ற திறமைசாலி. அறிவும் ஆற்றலும் எங்கிருந்தாலும் அதற்கு மதிப்புக் கொடுத்து பெருமைப்படுத்தும் பண்பினர். முத்துராசரின் அறிவாற்றலைக் கண்டு முன்பு வசந்தபுரி அரசனாயிருந்த மகேந்திர பூபதிக்குப் பரிந்துரை செய்து, அதன்பின் மகாராணி காலத்தில், அவர் உதவி அமைச்சர் பதவிக்கே உயர்வதற்குக் காரணமாக இருந்தவர் மதிவாணர்தான்.
ஆனாலும் உதவி அமைச்சர் முத்துராசருக்கு மதிவாணர் மேல் ஒருவிதக் காழ்ப்புணர்ச்சி இருந்தது. மதிவாணர் இருக்கும்வரை, சூரியனிடமிருந்து ஒளி பெறும் சந்திரனைப் போலத்தான் இருக்க முடியுமே தவிர, தானே சூரியனாகப் பிரகாசிக்க முடியாது என்ற சுயநல உணர்வு அவரது இதயத்தை வாட்டிக் கொண்டே இருந்தது. இதற்கு ஒரு வழி செய்ய முடியாதா என்று பல நாளாக ஏங்கிக் கொண்டிருந்தார் முத்துராசர்.
ஒரு நாள் இளவரசனும் முத்துராசரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, “அமைச்சரே! என் அன்னையார் இப்போது சொர்க்கத்தில் சுகமாக இருப்பார்களல்லவா?” என்றான் இளவரசன்.
“இளவரசே! மகாராணியார் இருப்பது சொர்க்கமா? நரகமா? என்பதை நிச்சயமாக எப்படிச் சொல்ல முடியும்? இப்படி இருந்தாலும் இருக்கலாம். அப்படி இருந்தாலும் இருக்கலாம்” என்று சந்தேகத்திற்குரிய ஒரு பதிலைக் கொடுத்தார் முத்துராசர்.
துணிக்குற்ற இளவரசன், “என் அன்னையார் எங்கிருக்கிறார்கள் என்று எனக்கு உடனே தெரிந்தாக வேண்டும். அதற்கு என்ன வழி?” என்றான்.
“யாராவது ஒருவரை சொர்க்கத்திற்கு அனுப்பித்தான் பார்த்து வரச் சொல்ல வேண்டும்” என்றார் முத்துராசர்.
“யாரை அனுப்பலாம்?” என்றான் இளவரசன்.
சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த முத்துராசர், “இதற்குத் தகுதியானவர் எனக்குத் தெரிந்த வரையில் மதிவாணர் ஒருவர் தான்!” என்று விநயமாகப் பதில் சொன்னார்.
“எப்படி அனுப்புவது?” என்று சந்தேகம் கேட்டான் இளவரசன்.
“மகாராணியாரின் உடலை எவ்விதம் சிதையில் வைத்துத் தீயிட்டு அனுப்பினோமோ, அதே போல் தான் மதிவாணரையம் அனுப்ப வேண்டும்” என்ற சந்தேகம் தீர்த்தார் முத்துராசர்.
உடனே மதிவாணரை வரவழைத்தான் விக்கிரமன். விவரம் எல்லாம் சொல்லி, அவர் தான் அந்தக் காரியத்தைச் செய்து உதவ வேண்டும் என்று முதலில் வேண்டுகோள் விடுத்துக் கடைசியில் உத்தரவில் முடித்தான்.
முத்துராசரின் வஞ்சக எண்ணத்தைப் புரிந்து கொண்ட மதிவாணர், புன்முறுவல் மாறாத முகத்தினராய், “நாளையே ஏற்பாடுகள் நடக்கட்டும்” என்ற பதிலளித்தார்.
அன்று இரவே இரகசியமாக நம்பகமான ஐம்பது பணியாளர்களை அழைத்து, இடுகாட்டில் இருந்து பக்கத்தில் இருந்த பாழடைந்த மண்டபம் வரைக்கும் சுரங்கம் தோண்டுகிற வேலையைச் செய்து முடித்தார் மதிவாணர்.
அடுத்த நாள், மாலையும் கழுத்துமாய் மதிவாணர் ஊர்வலமாய் இடுகாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமைச்சர் சொர்க்க லோகம் போகும் காட்சியைக் காண ஊரே திரண்டுவிட்டது.
இடுகாட்டில் சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டுச் சிதை தயாராக இருந்தது. அமைச்சரின் முன்னேற்பாட்டின் படி, மையப் பகுதியில் சுரங்கப் பாதைக்கு இடம்விட்டு, வெளிப்பார்வைக்கு அது தெரியாத படி சுற்றிலும் சிதை அடுக்கப்பட்டிருந்தது. ஊர்வலம் வந்ததும் சிதைக்குத் தீ வைக்கப்பட்டது. மரப்பலகைகளால் அமைந்திருந்த மேடையின் மீது ஏறி, கொழுந்துவிட்டு எரியும் சிதையின் நடுவில் குதித்தார் மதிவாணர். கூடியிருந்த அனைவரும் “வாழ்க மதிவாணர்!” என்று வானதிரக் குரல் எழுப்பினர்.
காரியம் கன கச்சிதமாக முடிந்தது என்பதில் முத்துராசருக்கு முழுத் திருப்தி. இனிமேல் அவருக்குப் போட்டியாக யாரும் இல்லை. அவர் வைத்தது தான் சட்டம்.
சிதையின் நடுவில் குதித்த மதிவாணர், சுரங்கப் பாதை வழியாக, பாழடைந்த மண்டபத்தை அடைந்து, இருட்டும் வரை அங்கேயே ஒளிந்து கொண்டிருந்து, பின்பு, தனது மாளிகையை அடைந்து, அங்கேயே இரகசியமாக யாருக்கும் தெரியாமல் பொறுமையாகக் காலங்கழித்தார்.
இப்போது அமைச்சர் முத்துராசரின் புகழ் கொடி கட்டிப் பறந்தது. இளவரசன் அடிக்கடி, “மதிவாணர் சொர்க்கத்திலிருந்து எப்போது திரும்புவார்?” என்ற கேள்வியைக் கேட்க, “சொர்க்கம் போய் வருவது சாமானியமா? சமயத்தில் ஆண்டுக் கணக்கில் கூட ஆகலாம்!” என்று முத்துராசர் தந்திரமாய்ப் பதிலளித்து வந்தார்.
ஆறு மாதங்கள் கழிந்த பின்பு ஒரு நாள் காலை மதிவாணர் திடீரென்று மாளிகையைவிட்டுக் கிளம்பி, நீண்டு வளர்ந்த தாடியும் பரட்டைத் தலையுமாக, இளவரசன் முன் வந்து நின்றார்.
மதிவாணரைப் பார்த்ததும் இளவரசனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.
அமைச்சர் முத்துராசரோ, “சிதையில் விழுந்து செத்த மதிவாணர் எப்படி உயிர் பெற்று வந்தார்?” என்று ஒன்றும் விளங்காதவராய், என்ன நடக்கப் போகிறதோ என்று அச்சத்துடன் நின்றார்.
“அம்மா நலமாக இருக்கிறார்களா?” என்று ஆவலை அடக்க முடியாதவனாய் இளவரசன் கேட்க, “மகாராணியார் சொர்க்கத்தில் நலமாக இருக்கிறார்கள். அரசே! இன்னொரு மகிழ்ச்சியான செய்தி! அவர்கள் சொர்க்கத்தில் தனியாக இல்லை. உங்கள் தந்தையாரான மகேந்திர பூபதியுடன் ஆனந்தமாய் இருக்கிறார்கள்” என்று மதிவாணர் தாடியைத் தடவியவாறு பதில் சொன்னார்.
மகிழ்ச்சியடைந்த இளவரசன், “ஆமாம்.. நீங்கள் ஏன் தாடியும் பரட்டைத் தலையுமாக நிற்கிறீர்கள்” என்று வினவினான்.
“சொர்க்கத்தில் சிகை அலங்கரிப்போர் கிடைக்கவில்லை அரசே! அதனால் முடி வளர்ந்துவிட்டது! தங்களைப் பார்க்கும் ஆர்வ மிகுதியால் நேராக இப்படியே வந்து விட்டேன்! அரசர் அனுமதித்தால் மாளிகைக்குச் சென்று முடிகளைந்து வருகிறேன்!” என்றவாறு மதிவாணர் புறப்பட்ட போது, “ஆமாம்.. அம்மா ஏதாவது சொல்லி அனுப்பினார்களா?” என்று இளவரசன் கேட்கவே, “பார்த்தீர்களா முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன்! மகாராணியார் ஒரு சின்னத் தகவலைச் சொல்லி அனுப்பினார்கள். இத்தனை வருஷமாக உங்கள் தந்தையார் மகேந்திர பூபதி, முடி களையாததால் தலை முகமெல்லாம் பயங்கரமாய் முடி மண்டிக்கிடக்கிறது. அது மிகவும் இடைஞ்சலாக இருப்பதால், முடி களைய முடி வெட்டும் கலையில் வல்லவரான முத்துராசரை அனுப்புமாறு உங்களிடம் சொல்லச் சொன்னார்கள்” என்று விநயமாகப் பதிலளித்தார் மதிவாணர்.
அவ்வளவுதான்! முத்துராசர் சொர்க்கம் புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அன்றே செய்யப்பட்டன. அவரிடம் கொடுத்தனுப்ப, கத்தி கத்தரிக்கோல் அனைத்தும் அடங்கிய அழகான பெட்டி ஒன்றும் தயார் செய்யப்பட்டது.
“வேண்டாம் அரசே!” என்று முத்துராசர் எவ்வளவோ புலம்பிப் பார்த்தார்.
“மதிவாணர் தாடியும் பரட்டைத் தலையுமாகத் திரும்பினார்! உங்களுக்கு அந்தக் கவலை இல்லை. கையோடு தான் பெட்டி கொண்டு செல்கிறீர்களே! மறந்து விடாதீர்கள்! எனக்கிருப்பது போல் அழகான கிருதா வைத்து, என் தந்தையாருக்கு நவநாகரிகமாய் முடி களைய வேண்டும்!” என்று இளவரசன் உத்தரவு பிறப்பித்தவனாய், இடுகாட்டில் கொழுந்துவிட்டு எரிந்த சந்தனச் சிதையில், முத்துராசரை அவனே முன் நின்று பிடித்துத் தள்ளினான்.
மதிவாணரைச் சொர்க்கத்திற்கு அனுப்ப நினைத்த முத்துராசர், இப்போது நரகத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

Sunday 4 December 2011

எங்கே போக விருப்பம்?

அமெரிக்காவில் ஒரு முக்கிய நகரம். முச்சந்தியில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. மேடையில் ஒரு பேச்சாளர் முழங்கிக் கொண்டிருந்தார்.
“சீமான்களே! சீமாட்டிகளே! எனக்கு நீங்கள் வாக்களிப்பீர்களேயானால், அது உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொண்டதாகும். நான் சார்ந்திருக்கிற கட்சி அத்தனை செல்வாக்கு வாய்ந்ததாகும்! எங்கள் கட்சி பெருபான்மையாகத் தேர்ந்தெடுக்கப்படுமானால், பிறப்பு முதல் இறப்பு வரை உங்களுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கும். We will give you protection from the cradle to the grave”.
இந்தப் பேச்சைக் கேட்டதும் கூடியிருந்த மக்களிடையே பெருத்த ஆரவாரம்.
அடுத்த நாளும் அதே இடத்தில் பெருங்கூட்டம். மேடையில் ஆறடிக்கு மேல் வளர்ந்த ஒற்றை நாடியான உருவம். வாயிலிருந்து வந்த வார்த்தைகள் ஆணித்தரமாக உதிர்ந்தன. கணீரென்று ஒலித்தன.
“உடன் பிறந்தோரே! ‘உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள்!’ என்று கேட்பதில் பெருமைப்படுகிறேன். நான் சார்ந்திருக்கும் கட்சி ‘மக்கள் பணியே மகேசன் பணி’ என்று பணிபுரியும் கட்சி! என்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் நேற்று இங்கே “பிறப்பு முதல் இறப்பு வரை உங்களுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கும்” என்று சொன்னாராம். எங்கள் கட்சிக்கு நீங்கள் வாக்களித்தால் உங்களுக்குக் கருவறையிலிருந்து கல்லறை வரைக்கும் கவலையில்லை! We will give protection from the womb to the tomb.”
இதைக் கேட்ட மக்களிடையில் எழுந்த ஆரவாரம் அடங்க நீண்ட நேரமாயிற்று.
ஆம்! இரண்டாவதாகப் பேசிய ஒற்றை நாடி உருவந்தான் “மக்களால், மக்களுக்காக, மக்களுடைய ஆட்சி” என்ற புகழ் வாய்ந்த வாக்கியத்தை உலகுக்குத் தந்த ஆபிரகாம் லிங்கன். அவர் செனட் தேர்தலுக்கு நிற்பதால் மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருந்தார். புயல் வேகத் தேர்தல் சுற்றுப்பயணம்! அவர் மட்டுந்தானா? எதிர்க் கட்சி வேட்பாளரும் அப்படியே!
அன்று ஞாயிற்றுக்கிழமை. கிருத்துவ மத வழக்கப்படி எல்லாரும் மாதா கோவில் செல்ல வேண்டும். அங்கே பாதிரியாரின் மதப் பிரசங்கத்திற்குச் செவி சாய்க்க வேண்டும். ஆபிரகாம் லிங்கனும் மாதா கோவிலுக்கு வந்திருந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.
புதிதாக வந்திருந்த இளம் பாதிரியார் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
“ஏசுவானவரை விசுவாசிக்கிறவர்களே! உங்கள் விசுவாசம் வீண் போவதில்லை! நீங்கள் திரும்பவும் விசுவாசிக்கப்படுவீர்கள்! தேவ குமாரன் உங்களுக்காகத்தான் சிலுவையில் மாய்ந்தார்! உங்கள் பாவங்களைப் போக்கி இரட்சிப்பதற்காகத்தான் அவர் மூன்று நாள் கழித்து கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்து வந்தார். இப்போது அந்த தேவகுமாரன் தன் தந்தையான இறைவரோடு சொர்க்கத்தில் உறைகிறார். ஏசுவானவரை நேசித்து நீங்களும் அந்த சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் நேசிப்பதில் குறையிருந்தால் உங்களுக்கு நரகந்தான் கிட்டும். அந்த நகரம் சாத்தானுக்குப் பிரீதியான இடம்! எங்கே.. இப்போது சொல்லுங்கள்! நீங்கள் போக விரும்புவது சொர்க்கமா, நரகமா? சொர்க்கத்திற்குப் போக விரும்புவர்களெல்லாம் கையை உயர்த்துங்கள் பார்க்கலாம்!”
பாதிரியாரின் இந்த வேண்டுகோள் மண்டபத்தில் எதிரொலித்ததும் கூடியிருந்தோர் அனைவரும் கையைத் தூக்கினார்கள். ஆனால், ஆபிரகாம் லிங்கன் மட்டும் கை தூக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
பாதிரியாருக்கு இது ஆச்சரியமாய் இருந்தது. அடுத்த வேண்டுகோளைத் தொடுத்தார்.
“எங்கே..,? நரகத்திற்குப் போக விரும்புகிறவர்கள் கையை உயர்த்துங்கள்!”
மண்டபத்தில் ஒரு கை கூட உயரவில்லை. இப்போதும் ஆப்ரகாம் லிங்கன் முன் போலவே அமர்ந்திருந்தார்.
பாதிரியாருக்கு இப்போது முன்னிலும் பன்மடங்கு ஆச்சரியமாய் இருந்தது. எனவே, பாதிரியார், “மிஸ்டர் லிங்கன்! நீங்கள் சொர்க்கத்திற்குப் போக விரும்பவில்லை! நரகத்திற்கும் போக விரும்பவில்லை! அப்படியானால் வேறு எங்கு தான் போக விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
ஆப்ரகாம் லிங்கனிடமிருந்து கணீரென்று பதில் வந்தது. “நான் செனட்டுக்குப் போக விரும்புகிறேன்!”
ஆம்! தேர்தலில்; வெற்றி பெற்று அவர் செனட்டுக்குத் தான் போனார். பிறகு அமெரிக்காவில் வெள்ளை மாளிகை என்று பெயர் பெற்ற ஜனாதிபதி மாளிகையிலும் குடியேறினார்.

http://puthu.thinnai.com/?p=6582

Tuesday 29 November 2011

சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்!

சிறந்த அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆல்ஃபிரட் ஹிச்காக், திறமையான இயக்குநருங்கூட. பார்ப்பவர்களை நொடிக்கு நொடி திகிலுக்குள் மூழ்க வைக்கும் சஸ்பென்ஸ் படங்கள் எடுப்பதில் வல்லவர். அவரைப் பாராட்டிப் பெரிய ஓட்டல் ஒன்றில் விருந்து வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. செல்வச் செழிப்பு மிக்க வணிகப் பெருமக்கள் பலரும் வந்திருந்தார்கள்.
ஹிச்காக் அருகில் அமர்ந்திருந்த செல்வந்தர் திடீரென்று, “உங்கள் படங்களில் மயிர்க்கூச்செறியும் சஸ்பென்ஸ் நிரம்பியிருப்பது உண்மைதான். அவை உங்கள் கை வண்ணம் தான் என்று நான் நம்ப வேண்டுமானால், இப்போதே சஸ்பென்ஸ் திரில் சொல்லுங்கள்” என்றார்.
இதைக் கேட்ட ஹிச்காக், “நான் ஒன்றும் அவ்வளவு பெரிய கெட்டிக்காரன் இல்லை. உடனே உங்களை சஸ்பென்ஸில் ஆழ்த்தும் ஆற்றல் என்னிடம் கிடையாது. இருந்தாலும் என் நண்பர் மார்ட்டின் என்பவருக்கு ஏற்பட்ட ஒரு சுவையான அநுபவத்தைக் கூற விரும்புகிறேன்” என்றவாறு கீழ்கண்ட நிகழ்ச்சியை விவரித்தார்.
பாரிஸ் நகரில் செலவழிக்க பிரெஞ்சுப் பணம் தேவையாக இருந்தது. அதனால் தன் மனைவியை ஓட்டல் அறையிலேயே பத்திரமாய் இருக்கும்படிச் சொல்லிவிட்டு, தன்னிடமிருந்த டாலர் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு, அந்நியச் செலவாணி மாற்றித் தரும் வங்கி ஒன்றுக்குப் போய், பிரெஞ்சுப் பணம் மாற்றிக் கொண்டார். இந்த அலைச்சலில் கொஞ்சம் அசதி ஏற்பட்டதால் தலைவலி தோன்றவே, ஆஸ்பிரின் மாத்திரை போட்டுக் காபி சாப்பிடலாம் என்று எதிரில் இருந்த சிற்றுண்டி விடுதியில் நுழைந்து, காபிக்கு ஆர்டர் செய்தார்.
அப்போது கிண்கிணிக் குரலில் சிரிப்பொலி கேட்கவே, தலை நிமிர்ந்து பார்த்தார் மார்ட்டின். அருகில் மயக்கும் பேரழகுடன் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, “என்ன உதவி தங்களுக்கு நான் செய்யக் கூடும்,” என்று ஆடவர்க்கே உரிய ஒயிலோடு ஆங்கிலத்தில் கேட்டார். ஆனால் அந்தப் பெண் ஒன்றும் பேசாமல், முத்துப் பற்கள் தெரிய முகத்தில் ஒரு மோகனப் புன்னகையைத் தவழவிட்டவளாய், கையகலக் காகிதத் துண்டு ஒன்றை டேபிளில் வைத்துவிட்டு, உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விட்டாள்.
காகிதத் துண்டை எடுத்துப் பார்த்த மார்ட்டினுக்கு ஒன்றும் புரியவில்லை. பிரெஞ்சு மொழியில் ஏதோ எழுதியிருந்தது. ‘அடடா..! பிரெஞ்சுக் கற்றுக் கொள்ளாதது எவ்வளவு தப்பு” என்று மனத்திற்குள்ளாகவே எண்ணிக் கொண்டிருந்த போது, சர்வர் காபியைக் கொண்டு வந்து வைத்தான். ஆவலை அடக்க முடியாத மார்ட்டின், அந்தக் காகிதத் துண்டை சர்வரிடம் கொடுத்து, வாசித்துக் காட்டும்படியாய்க் கேட்டார்.
அதைப் படித்த சர்வருக்கு முகமெல்லாம் ‘குப்’பென்று ரத்தம் பாய்ந்து சிவப்பானது. ‘என்ன?’ என்றார் மார்ட்டின். பதில் பேசாத சர்வர் பற்களை நரநரவென்று கடித்தவாறு, முஷ்டி பிடித்த தன் வலக்கரத்தை டேபிளில் ஓங்கிக் குத்திவிட்டு, அவ்விடத்தைவிட்டு அகன்றான். ஒன்றும் புரியாத மார்ட்டின், சர்வர் கீழே போட்டுச் சென்ற காகிதத் துண்டை எடுத்துக் கொண்டு, காபியில் ஆஸ்பிரின் மாத்திரையைக் கலந்து சாப்பிட்டபின், டேபிளில் அதற்குரிய சில்லரையை வைத்துவிட்டு எழுந்தார்.
சிற்றுண்டி விடுதியின் கேஷ் கவுண்டரைக் கடந்தபோது, அந்தக் காகிதத் துண்டை கேஷியரிடம் கொடுத்து படித்துச் சொல்லும்படி பவ்யமாக கேட்டுக் கொண்டார் மார்ட்டின். அதைப் படித்த கேஷியர், கோபம் கொப்பளிக்க, பிரெஞ்சு மொழியில் ஏதோ கத்தினார். உடனே பயில்வான்கள் போன்ற இரண்டு பணியாளர்கள் அங்கே வந்து, மார்ட்டினின் கோட்டைப் பற்றி இழுத்து, வெளியிலே தள்ள, வீதியில் வந்து குப்புற விழுந்தார்.
‘இது என்ன விபரீதம்?’ என்று எண்ணமிட்டவராய், கோட்டில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டிவிட்டவாறு, வீதியில் நடக்க ஆரம்பித்தார். ‘டாண் டாண்’ என்று மாதா கோவில் மணியோசை கேட்டது. கைத்தடி ஊன்றியவாறு எதிரில் பாதிரியார் வந்து கொண்டிருந்தார். ‘இவர் தான் இதற்குச் சரியான ஆள்’ என்று முடிவு செய்த மார்ட்டின், அந்தப் பாதிரியாரை அணுகி, ‘இதைப் படித்துக் காட்டுங்களேன்’ என்று காகிதத் துண்டைக் கொடுத்தார். அதைப் படித்துப் பார்;த்த பாதிரியார், உடம்பெல்லாம் பதற, ‘கர்த்தரே காப்பாற்றும்’ என்று முணுமுணுத்தவாறு, மார்பில் சிலுவைக் குறியிட்டு, கைத்தடியை நழுவ விட்டதால், கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டார்.
மார்ட்டினுக்கு முகம் பேயறைந்தாற்போல் ஆகிவிட்டது. இனிமேல் முயன்றால் பேராபத்தாய் முடியும் என்று எண்ணியவாறு, நேரே தன் மனைவியை விட்டு வந்திருந்த ஓட்டலுக்குப் போனார். அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. மனைவிக்கு பிரெஞ்சு மொழி தெரியும். உயிரையே தன் மேல் வைத்திருக்கும் மனைவி, தவறாக ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டாள் என்று முடிவு செய்தவராய், நடந்ததையெல்லாம் விளக்கிக் கூறி, காகிதத் துண்டை அவளிடம் கொடுத்து, ‘அப்படி அதில் என்ன தான் எழுதியிருக்கிறது?’ என்று கேட்டார்.
அவளும் அதைப் படித்துப் பார்த்தாள். அவ்வளவுதான்! முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது! ஒன்றுமே பேசாத அவள், நேரே வக்கிலைத் தேடிச் சென்று, தன் கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கோரி, கோர்ட்டில் வழக்கு தொடுத்துவிட்டாள்.
பயணம் வந்த இடத்தில் இப்படி ஒரு பயங்கரம் நேர்ந்ததே என்று தலையைப் பிய்த்துக் கொண்டார் மார்ட்டின். ‘உயிருக்குயிரான மனைவியே விவாகரத்துக் கோரி வழக்குத் தொடுத்துவிட்ட பிறகு இனி வாழ்வில் என்ன இருக்கிறது. உயிரை விட வேண்டியதுதான்’ என்று முடிவுக்கு வந்தவராய், பாதுகாப்புக்காகப் பெட்டியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து, நெற்றிப் பொட்டில் வைத்து, விசையை அழுத்தப் போனார். பளிச் என்று ஓர் எண்ணம். ‘சாவது தான் சாகப் போகிறோம். இவ்வளவுக்கும் காரணமான அந்த காகிதத் துண்டில் என்னதான் எழுதியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் நிம்மதியுடன் சாகலாம்’ என்ற நினைப்பில், அதை எடுத்துக் கொண்டு ஓர் இராணுவ அதிகாரியின் வீட்டுக்குப் போனார்.
“என்ன விஷயம்?” என்று அந்த இராணுவ அதிகாரி கேட்க, அதற்கு மார்ட்டின், நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறி, “முதலில் இந்தத் துப்பாக்கியைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று தான் கொண்டு போன கைத்துப்பாக்கியை அவரிடம் கொடுத்துவிட்டு, “நான் தரப் போகும் காகிதத் துண்டில் ஏதோ மர்மச் செய்தி அடங்கி இருக்கிறது. அதை நீங்கள் எனக்குத் தயவு செய்து படித்துக் காட்ட வேண்டும். மற்றவர்களுக்கு வந்தது போல் உங்களுக்கும் கோபம் வந்தால், அந்தத் துப்பாக்கியால் என்னைச் சுட்டுவிடுங்கள். ஆனால் அதற்கு முன்பு, காகிதத் துண்டில் எழுதியுள்ள விஷயம் என்ன என்பதை மட்டும் எனக்குச் சொல்லிவிட வேண்டும்” என்றார்.
இதைக் கேட்ட இராணுவ அதிகாரி, “முதலில் அந்தக் காகிதத் துண்டை எடுங்கள்” என்றார்.
மார்ட்டின் அதை எடுக்கக் கோட்டுப் பாக்கெட்டில் கையை விட்டார். திகீரென்றது. காரணம். அந்தக் காகிதத் துண்டைக் காணவில்லை.
இந்தக் கட்டத்தில் ஹிச்காக்கின் உதவியாளர் அவரிடம் வந்து காதில் ஏதோ மெதுவாகச் சொல்லவே, “அப்படியா?” என்றவாறு சோபாவைவிட்டு எழுந்தார்.
ஆனால், கதை கேட்டுக் கொண்டிருந்த செல்வந்தர், “முடிவைச் சொல்லிவிட்டுப் போங்கள்! அந்தக் காகிதத் துண்டில் அப்படி என்னதான் எழுதியிருந்தது?” என்று ஆவல் மிகுந்தவராய்க் கேட்டார்.
“மாலை ஐந்து மணிக்கு என் வீட்டுக்கு வாருங்கள். சொல்கிறேன்” என்றவாறு ஹிச்காக் போயே போய்விட்டார்.
மாலை வரை செல்வந்தர் தலையைப் பியத்துக் கொண்டார். ஆவலை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சரியாக ஐந்து மணிக்கு ஹிச்காக்கின் வீட்டிற்குச் சென்று “இனியும் என்னால் தாங்க முடியாது. சொல்லுங்கள் அந்த மர்மச் செய்தியை!” என்றார்.
அதைத் தெரிந்து கொள்ள உங்களைவிட எனக்கும் ஆவல் தான். ஆனால், மார்ட்டின் என்ன தேடியும் அந்தக் காகிதத் துண்டு கிடைக்கவேயில்லையே!” என்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் ஹிச்காக்.

Wednesday 23 November 2011

முள் எடுக்கும் முள்

கோதையாறு நீர்த் தேக்கத்துக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கிராமம். இது குமரி மாவட்டத்தில் கேரள நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ளது. அங்கு, சின்னச்சாமி ஒரு பெரிய புள்ளி! நிறைய ரப்பர் எஸ்டேட்! வயது அறுபதுக்கு மேல் ஆனாலும் உடம்பில் ஒரு மினுமினுப்பு! சம்சாரம் தவறிப்போய் நாலைந்து வருஷமிருக்கும்! ஒரே மகன். டாக்டருக்குப் படித்துவிட்டு உள்ளுரிலேயே வேலை பார்க்கிறான்.
சின்னச்சாமியின் ரப்பர் எஸ்டேட்டுக்குப் பக்கத்தில் ஒரு காணி நிலம். அதில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள்! அத்துடன் சின்ன வாழைத் தோட்டம்! இது பெரியசாமி என்ற கிழவனுக்குச் சொந்தமாக இருந்தது. சின்னசாமி கூட அடிக்கடி, “ஐநூறு ஏக்கர் ரப்பர் எஸ்டேட் இருந்து என்ன பிரயோஜனம்! எனக்குப் பெயர் சின்னசாமிதான்! ஆனால், நீதான் பெரியசாமியாக இருக்கிறாய்!” என்று பெயர்ப்பொருத்தத்தைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லுவார்.
பெரியசாமி குடிசை வீட்டில் திடீரென்று ஒரு நாள் அதிசயம். நீலவானத்துப் பூரண சந்திரன் ‘கலகல’வென்று சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது.
ஆம்! பதினாறு வயது பருவ மங்கை! மணிக்கட்டு எலும்பு எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கமுடியாத அளவு மொழுமொழுவென்ற சதைப்பிடிப்பு! பளபளக்கும் பொன்மேனியில் மலையாளத்து மினுமினுப்பு! பார்த்துவிட்டால் போதும், பார்வையை வேறு பக்கம் திருப்பவே மனம் வராது! அப்படி ஒரு கவர்ச்சி!
அவளுக்குப் பெயர் கோதையம்மை. பெரியசாமியின் மகள் வயிற்றுப் பேத்தி. தக்கலைக்குப் பக்கத்து கிராமத்தில் தாயிழந்த பெண்ணாக, தந்தையின் ஓடுகாலிதனத்தைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த இவளைப் பெரியசாமிக் கிழவன் தன்னுடைனேயே இருக்கும்படி அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.
சின்னசாமியின் கண் ஒரு நாள் கோதையம்மையின் மேல் விழுந்துவிட்டது. அவ்வளவுதான்! தேகம் முழுவதும் ஒரு சிலிர்ப்பு உணர்ச்சி! உடம்பின் அத்தனை நரம்புகளிலும் முறுக்கேறிய மதமதப்பு!
அடுத்த நாள் பெரியசாமியின் குடிசை வீட்டுக்கு வெற்றிலைப் பாக்குப் பழத் தட்டுடன் சின்னசாமி விஜயம் செய்தார்.
“என்ன விஷயம்” என்று கேட்டான் பெரியசாமிக்கிழவன். பரிசம் போட வந்திருப்பதாக, சின்னசாமியிடமிருந்து பதில் வந்தது.
பெரியசாமிக் கிழவனுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. சின்னசாமியின் மகனோ டாக்டர். அவன் பேத்திக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா?
“உங்க மகனைக் கட்டிக்க என் பேத்தி கொடுத்து வச்சிருக்கணும்!” என்றான் பெரியசாமிக் கிழவன் தழுதழுத்தக் குரலில்.
சின்னசாமி சிடுசிடுத்தார். “மகனுக்குப் பெண் பார்க்கல்லே கிழவா! எனக்குத்தான் பார்க்கிறேன்! உன் பேத்தியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றார் ஓங்காரக் குரலில்.
முதலில் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் தவித்த பெரியசாமிக் கிழவனுக்கு இப்போது வாயும் ஓடவில்லை. சிலையாக நின்றான். ஆனால், கதவுப் பக்கத்தில் மறைந்து நின்ற கோதையம்மை ‘களுக்’ என்று சிரித்தாள்.
“பாத்தியா! பெண்ணுக்குச் சம்மதம்!” என்றார் சின்னசாமி.
“ஆமா! உங்களுக்கு மாலை போட காத்திருப்பேன்!” என்று கோதையம்மையின் குரல் கதவுக்குப் பக்கமிருந்து வந்த போது, “ஆஹா! ஆஹா!” என்று பரமானந்தமாகச் சின்னச்சாமி வாயைத் திறக்க, பல் செட்டு பளபளத்தது.
ஆனால், அடுத்து வந்த வார்த்தைகள் சின்னசாமியை அதிர வைத்தன.
“சின்னசாமித் தாத்தா! பச்சை மூங்கியிலே, நாலு பேருக்கு மத்தியிலே நீங்க கடைசி ஊர்வலம் வரபோது, உங்களுக்கு மரியாதை செலுத்தி மாலை போட நான் காத்திருப்பேன்!”
காணி நிலத்தில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரத்தோடிருக்கும் பத்தினிப் பெண்ணைத் தேடி வந்த சின்னச்சாமி அவமானம் தாங்க முடியாமல் கருவிக் கொண்டே வெளியேறினார். சும்மா இருப்பாரா? அடுத்த நாளே ஊர்ப்பஞ்சாயத்தார் முன்னிலையில் வழக்குப் போட்டார். கிழவன் அவமானப்படுத்திவிட்டான் என்றா? அது தான் இல்லை!
ஆறு மாதத்திற்கு முன்பு சின்னச்சாமியிடம் பெரியசாமிக் கிழவன் ஐயாயிரம் ரூபாய் கைமாற்று வாங்கியதை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை! அதைப் பஞ்சாயத்தார் வாங்கிக் கொடுக்க வேண்டும்! இது தான் வழக்கு.
பெரியசாமிக் கிழவன் வெலவெலத்துப் போனான். “பணம் கொடுக்காமலே அபாண்டமாய் இப்படிப் பழி சுமத்தலாமா?” என்று சின்னச்சாமியிடம் பேசிப் பார்த்தான். “நீயும் உன் பேத்தியுமாக என்னை அவமானப்படுத்தியதற்கு பழி வாங்காமல் விட மாட்டேன்! பஞ்சாயத்துக்கு வா! சாட்சியோடு நிரூப்பிக்கிறேன்!” என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டார் சின்னச்சாமி.
சாட்சியோடு நிரூபித்துவிட்டால் பெரியசாமிக் கிழவனின் பாடு அதோகதி தான். வாங்காத பணத்தை அவன் கட்டியாக வேண்டும். இருக்கும் ஒரு காணி நிலத்துக்கும் ஆபத்து வந்துவிடும்.
பஞ்சாயத்தும் கூடியது. சின்னச்சாமியின் சார்பில் இரண்டு பேர் சாட்சி சொன்னார்கள். அதன் சாராம்சம்: “நாங்கள் ஆடி அமாவாசையன்று சின்னச்சாமியின் வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போது பெரியசாமிக் கிழவன் இவரிடத்தில் ஐயாயிரம் ரூபாய் கைமாற்று வாங்கிக் கொண்டு ஐப்பசி மாதத்தில் திருப்பிக் கொடுப்பதாகச் சொல்லிப் போனான்!”
இந்தச் சாட்சிக்குப் பிறகு பஞ்சாயத்தார் பெரியசாமிக் கிழவனை விசாரித்தார்கள். நான் சொல்ல ஒன்றுமில்லையென்று தன் சாட்சியை விசாரிக்கலாமென்றும் அவன் சொன்னான்! அந்தச் சாட்சி சொன்னதாவது: “நானும் ஆடி அமாவாசையன்று சின்னசாமியின் வீட்டுக்குப் போயிருந்தேன். முன் சாட்சிகள் சொன்னது போல் ஐயாயிரம் ரூபாய் கைமாற்றுக் கொடுத்தது உண்மைதான்!”
இதைக் கேட்டதும் சின்னச்சாமிக்கு படுகுஷி! “பார்த்தீர்களா?” என்று தாவிக் குதித்தார். ஆனால், அந்தச் சாட்சி தொடர்ந்து சொன்னான்:
“அதன் பிறகு மூன்று மாதம் கழித்து ஐப்பசி மாத அமாவாசையன்று சின்னச்சாமியின் வீட்டுக்கு நான் போக நேர்ந்தது. அப்போது இந்தப் பெரியசாமிக் கிழவன் அங்கே வந்து கைமாற்று வாங்கிய ஐயாயிரத்தையும் திருப்பிக் கொடுத்ததை நான் பார்த்தேன்!”
இதைக் கேட்ட பஞ்சாயத்தார், “சின்னச்சாமி பொய் வழக்குப் போட்டதற்காக, பெரியசாமிக் கிழவனுக்கு நஷ்ட ஈடு கட்ட வேண்டும்” என்று தீர்ப்புச் சொன்னார்கள்.
வாங்காத கடனைக் கொடுக்காமலேயே அடைத்துவிட்டான் பெரியசாமிக் கிழவன்! முள்ளை முள்ளால் எடுத்துவிட்டான்! இந்த முள்ளெடுக்கும் முள்ளை அவனுக்கு யார் கொடுத்தது?
அவனுடைய துடுக்குப் பேத்தி கோதையம்மைதான்!