Sunday 25 September 2011

சன்மானம்

அரபு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டைச் சேர்ந்தவர் கலீல் கிப்ரான். இவர் ஒரு சிறந்த மேதை. சிந்தனையாளர். துத்துவ ஞானி. புரட்சிக் கவிஞர். அத்துடன் நகைச்சுவை வேந்தர். இவருடைய நகைச்சுவைகள் கேட்கக் கேட்கத் தெவிட்டாதவை. நினைத்து நினைத்துச் சுவைக்கலாம். அது மட்டுமல்ல. நடைமுறை வாழ்க்கையிலும் மிகவும் சுவைபட நடந்து கொள்வார். அவருக்கு ஒரு நாள் குளியல் துறைக்குப் போய் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வர வேண்டும் என்று ஆசை வந்தது.

அந்த நகரத்துக் குளியல் துறை உலகப் பிரசித்தமானது. கட்டடமே பார்ப்பதற்குப் பெரிய மாளிகை போன்று கண்ணுக்கு ரம்மியமாக இருக்கும். உள்ளே குளியலறைகள் பளிங்குக் கல் பதிக்கப்பட்டு பளபளப்புடனும் தூய்மையுடனும் விளங்கும்.  குளிப்பதற்குக் குளிர்ந்த நீர் வேண்டுமா? கிடைக்கும்! வெந்நீர் வேண்டுமா, இளஞ்சூடு, மத்திமச் சூடு, கடுஞ்சூடு என்று எந்த வகையில் வேண்டுமானாலும் கிடைக்கும்! சந்தனத் தூள் தூவிச் சாதாரணமாக வேண்டுமானாலும் குளிக்கலாம்! அல்லது தலைக்கு எண்ணெய் தேய்த்துச் சிறப்புக் குளியல் வேண்டுமானாலும் குளிக்கலாம்!

எண்ணெய் தேய்த்து விடுவதற்கென்றே அங்கே தனியாகப் பணியாளர்கள் இருந்தார்கள்.  தலையில் எண்ணெய் தேய்த்து அவர்கள் தாளக் கட்டோடு தட்டுவதும், உடம்பெல்லாம் பிடித்து விடுவதும்.. அடடா.. அந்தச் சுகமே சுகந்தான்! வெளி நாடுகளிலிருந்து வரும் வணிகர்களும் யாத்திரிகர்களும் அங்கு வந்து ஒரு குளியல் போடாமல்; போக மாட்டார்கள்.

குளியலுக்கு வருவோர் தங்கள் தகுதிக்கு ஏற்பப் பணியாளர்களுக்குச் சன்மானம் கொடுத்துவிட்டுப் போவார்கள்.  இதனால் அங்குள்ள பணியாளர்கள் அனைவருமே சிட்டுக்குருவிப் போல் பறந்து பறந்து வேலை செய்வார்கள்.

இங்கு வந்து குளியல் போட வேண்டும் என்று தான் கலீல் கிப்ரானுக்கு ஆசை.  அவரிடத்தில் ஒரு நல்ல பழக்கம். ஆசை வந்துவிட்டால் அதை அப்போதே நிறைவேற்றி விடுவார். ஆமாம்! உடனே குளியல் துறைக்கு வந்துவிட்டார்.

பணியாள் எண்ணெய்க் கிண்ணத்துடன் வந்தான். ஆனால், வரும்போதே ஒரு மாதிரியாக இருந்தான். முகத்தில் ஒரு விதக் கடுகடுப்பு. உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றிக் கொண்டு, வேலையை ஆரம்பித்தான். கலீல் கிப்ரானின் தலையில் அவன் ‘தட்தட்’ என்று போடுகிற தாளம் எந்த ஓசை நயமும் இல்லாமல் அபசுரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.  அவன் ஏதோ வேண்டா வெறுப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்.

பொறுமையெல்லாம் இழக்கும் கட்டத்தை அடைந்து விட்ட போதிலும், கலீல் கிப்ரான் அதை அடக்கிக் கொண்டு, “ஏனப்பா முனங்குகிறாய்?” என்று கேட்டார். அதற்குப் பணியாள், “அந்தக் காலம் போலவா இப்போது இருக்கிறது! வரவர யாரும் சன்மானமே சரியாகக் கொடுப்பதில்லை! கஞ்சத்தனத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்! கொஞ்சம் தாராளமாகக் கொடுத்தால் குடியா முழுகிப் போய்விடும்?” என்று கூறியவாறே வெந்நீர் விளாவினான்.

பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி, வாசனைப் பொடிகள் போட்டு நுரை கிளம்பத் தேய்த்து விட்டான். பிறகு முதுகு தேய்க்க ஆரம்பித்தான். அவனுக்கிருந்த ஆத்திரத்தில் தோலையே உரித்துவிடுவான் போல் இருந்தது. கடைசியில் தேங்காய்ப் பூத்துவாலையால் உடம்பை உலர்த்தி விட்டான். எல்லாம் சலிப்போடு தான்!
கலீல் கிப்ரானுக்குப் பெரும் பாடாய்ப் போய்விட்டது. சந்தோஷமாகக் குளியல் போடலாம் என்று வந்தால் இங்கு சரியான சலிப்பன் வந்து சேர்ந்திருக்கிறானே! உம்.. என்ன செய்வது? புறப்பட்ட நேரம் சரியில்லை போலும்!

குளியல் முடிந்து திரும்பும் போது பணியாளின் கையில் சன்மானத்தை வைத்தார் கலீல் கிப்ரான்.  அவன் அப்படியே திகைத்துப் போனான். சாதாரணமாக அவனுக்கு ஒரு தினார் கிடைத்தாலே பெரிய அதிர்ஷ்டம். ஆனால் இப்போது அவர் கொடுத்ததோ ஐந்து தினார்கள்!

நாயின் வாலாகக் குழைந்து சலாம் போட்டான் பணியாள். வீதிமுனை வரையும் வந்து வழி அனுப்பினான்.  “மறுபடியும் குளியலுக்கு வரும்போது ஐயா என்னிடமே வர வேண்டும்” என்பதையும் மறக்காமல் சொல்லி அனுப்பினான்.

ஒரு வாரம் கழித்து கலீல் கிப்ரானுக்கு மறுபடியும் குளியல் ஆசை வந்தது. உடனே புறப்பட்டுக் குளியல் துறைக்கு வந்து சேர்ந்தார். தற்செயலாய் அதே பணியாள்தான் எண்ணெய்க் கிண்ணத்தோடு வந்து நின்றான். “ஐயாவுக்கு சலாம்!” என்றவாறு நெளிந்து வளைந்தான்.

உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றித் தலையில் வைக்கும்போதே என்ன நளினம்! ‘தட்தட்’ என்று தலையில் தாளம் போட்டுத் தட்டுவது, கானாபஜானா நாட்டியம் நடக்குமிடமித்தில் தபேலா வாத்தியத்தை வாசிப்பது போல் அவ்வளவு இனிமையாக இருந்தது.  தலையிலிருந்து சொட்டுச் சொட்டாய் வடியும் எண்ணெயை வழிக்கும் பக்குவமே பக்குவம்! உடம்பு முழுதும் எண்ணெயைத் தேய்க்கும்போது அவன் கைகள் எத்தனைத் துடிப்போடு வேலை செய்கின்றன! முதுகுப் பிடிப்பு, இடுப்புவலி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்து விட்டன. எலும்புகளில் மூட்டுக்கு மூட்டு விவரிக்க முடியாத ஒரு வகை இன்ப வேதனை!
எண்ணெய்த் தேய்க்கும் படலம் முடிந்ததும் வெந்நீர் விளாவும் போது கொஞ்சம் பன்னீரும் தெளித்தான். வெந்நீரிலிருந்து வெளிக்கிளம்பிய ஆவியும் ‘கம்’ என்று அறை முழுவதும் பரவிய பன்னீர் மணமும் ஒன்று சேர்ந்து கனவுலகில் சஞ்சரிப்பது போன்ற ஓர் உணர்வை எழுப்பியது. பிறகு குளியல் ஆரம்பித்தது.
கேசாதி பாதம் வரை விரல் நகம் படாமல் பணியாள் எவ்வளவு லாவகமாய்த் தேய்க்கிறான்! என்ன பேரானந்தம்! கட்டிய மனைவிகூட இப்படிச் செய்வாளா என்பது சந்தேகந்தான்! கடைசியில் தேங்காய்ப் பூத்துவாலையால் உடம்பை உலர்த்தும்போது சதையை ‘சக் சக்’ என்று பிடித்து விடுகிறானே – அடடா.. இந்தச் சுகத்துக்கு ஈடான சுகம் உலகத்தில் ஏது?

குளியல் முடிந்தபோது கலீல் கிப்ரானுக்கு ஏதோ சொர்க்கத்திற்குப் போய்விட்டுத் திரும்புவதுபோல் இருந்தது.

கடைசியில் பணியாள் முகமெல்லாம் பல்லாகக் குழைந்து நின்றான். கிடைத்த சன்மானத்தைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்துப் போனான். அரை தினார்!
“அன்று ஐந்து தினார் தந்தீர்கள்! இன்று எவ்வளவு வேலை செய்தேன்! அரைத் தினார் தானா?” என்று பணியாள் அழாக்குறையாகக் கேட்க, “இன்று செய்த வேலைக்குத் தான் அன்று கொடுத்த ஐந்து தினார்கள்! அன்று செய்த வேலைக்குத் தான் இந்த அரை தினார்!” என்றவாறே நடந்துகொண்டிருந்தார் கலீல் கிப்ரான்.


Thursday 15 September 2011

சீட்டுக் கிழிப்பு

“உன் பேரென்ன?”

நடு விரலையும் ஆள்காட்டி விரலையும், கொஞ்சம் இடைவெளி விட்டு இணைத்து, உதடுகளின் குறுக்காக நீட்டுவாக்கில் இணைத்து, வாயில் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலை பாக்குத் தாம்பூலத்தை ‘புளிச்’ என்று முற்றத்தில் துப்பியவாறே, எதிரில் நின்ற இளைஞனைப் பார்த்து, மேற்கண்ட கேள்வியைக் கேட்டார் ஊஞ்சலில் அமர்ந்து மெதுவாக ஆடிக் கொண்டிருந்த தங்கசாமி.

“புத்தி சிகாமணி” எனப் “பளிச்” என்று பதில் வந்தது எதிரில் நின்ற இளைஞனிடமிருந்து.

“பேரைக் கேட்டாலே பயமாக இருக்கு” என்று தமக்குள்ளாக முனகிக் கொண்டே தங்கசாமி, “ஆமா.. என்ன படிச்சிருக்கே?” என்றார்.

“பி.ஏ. பர்ஸ்ட் கிளாசிலே பாஸ் பண்ணியிருக்கேன் சார்.. இதோ பாருங்க சர்ட்டிபிகேட்!” என்றவாறு இளைஞன் சான்றிதழ்களை எடுத்து நீட்டினான்.

பக்கத்தில் வைத்திருந்த வெள்ளிக் கூஜாவிலிருந்து ஒரு மடக்குத் தண்ணிரை வாயில் ஊற்றிக் கொண்டு, “சளாபுளா” என்று கொப்பளித்து, அதை முற்றத்தில் துப்பிவிட்டு, “நீ என்ன பொய்யா சொல்லப் போறே! சர்ட்டிபிகேட் எதுக்கு?.. இதப் பாரு தம்பி.. இப்ப எனக்கு வேண்டியது, படிச்சவனுமில்லே, புத்திசாலியுமில்லே! ஒரு சாதாரண ஆளுதான் வேணும்!” என்றார் தங்கசாமி.

“சாதாரண வேலையையும் நான் நல்லபடியாச் செய்து முடிப்பேன் சார்!” இளைஞன் நம்பிக்கையை விடாமல் பேசினான்.

“வீணா ஏன் வளத்துக்கிட்டு.. நிச்சயமாச் சொல்றேன், தம்பி.. உன்னைப் போல ஆளு எனக்குத் தேவையில்லை” என்று ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலிலிருந்து எழுந்தவாறு இன்டர்வியூவிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் தங்கசாமி. இளைஞன் ஏமாற்றத்துடன் வெளியேறினான்.

தங்கசாமிக்குப் பெயர்தான் அப்படி! தங்கம் வெள்ளி வியாபாரம் ஒன்றுமில்லை. எண்ணெய் மண்டி வைத்திருந்தார். அங்கே எடுபிடி வேலைகளைக் கவனித்துக் கொள்ள ஆள் தேவையாய் இருந்தது. அவன் அசமந்தமாக இருந்தால் ரொம்பத் தேவலை. சொன்னதைச் சொன்னது போல் செய்து முடித்தால் போதும். வேறு எதைப்பற்றியும் புரிந்து கொள்ள முடியாதவனாக இருக்க வேண்டும்.

தங்கசாமிக்கு அவர் மூளையின் சக்தியில் அபார நம்பிக்கை உண்டு. “ஒரு புத்திசாலி இருக்கும் இடத்தில் இன்னொரு புத்திசாலிக்கு வேலை இல்லை!” என்று அவர் அடிக்கடிச் சொல்லுவார். அவர் புத்திசாலியானதால் வேறொரு புத்திசாலியை வேலைக்கு வைத்துக் கொண்டால், அவருக்குத் தான் தொந்தரவு. “அது என்ன? இது என்ன?” என்று அடிக்கடி துருவித் துருவிக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் பிஸினஸ் என்ன ஆவது? எண்ணெய் மண்டி பிஸினசில் அப்படி என்ன தொந்தரவு? அதில் தான் விஷயம் இருக்கிறது. எண்ணெய் விற்ற லாபத்திலா தங்கசாமி மூன்றடுக்கு மாளிகைக் கட்டடத்திற்குச் சொந்தக்காரராக முடியும்? கள்ள மார்க்கெட் என்றால் அவருக்குக் கரும்பு தின்ற மாதிரி. இப்படி வாங்கி அப்படி மாற்றினால் போதும்! கொள்ளை லாபம் வரும்! இந்த விஷயம் இரண்டாமவனுக்குத் தெரியாதவரைதான் நல்ல பாதுகாப்பு. அதனால் தான் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளையாக ஓர் எடுபிடியாள் கிடைத்தால் தேவலை என்று தங்கசாமி தேடிக் கொண்டிருந்தார். பலரிடம் சொல்லியும் வைத்திருந்தார். அதற்குத் தான் ஆரம்பத்தில் சொன்னது போல், பலரும் வேலைக்காக வந்து போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஆள் அகப்படவில்லை.

அடுத்த நாள் காலை தங்கசாமியைத் தேடி ஓர் ஆள் வந்து சேர்ந்தான். “வணக்கம்” போட்டுவிட்டுக் கைகட்டி நின்றான்.

“யாரப்பா..! என்ன விஷயம்?” என்றார் தங்கசாமி.

“எஜமானுக்கு ஆள் வேண்டுமாமே?” பவ்யமாகக் கேட்டான் வந்தவன்.

“ஆமாம்.. உன் பெயர் என்ன?” தங்கசாமி கேட்டார்.

“மட்டி!” என்றான் வந்தவன்.

“பேஷ்.. பெயரே பொருத்தமாயிருக்கு!” என்று தமக்குள் நினைத்துக் கொண்ட தங்கசாமி, “இதுக்கு முன் எங்கே வேலை பார்த்தே?” என்று கேட்க, “நாயர் கடையிலே வேலை பார்த்தேன், எஜமான்” என்றான் மட்டி.

“ஏன் அந்த வேலையை விட்டுட்டே?” என்றார் தங்கசாமி.

“ஒரு நாள் தேயிலைக்குப் பதிலாக புகையிலையைப் போட்டு டீ கொடுத்தேன். உடனே நாயர் என்னை வெளியே அனுப்பிட்டார்” என்று மட்டி மரியாதையாகப் பதில் சொன்னான்.

பலே! இப்படிப்பட்ட ஆள்தான் தங்கசாமிக்கு வேண்டும். மட்டிக்கு உடனே வேலை கிடைத்து விட்டது.

கள்ள மார்க்கெட்டில் கைமாறும் எண்ணெய் டின்களை தங்கசாமியின் சொல்படி, இப்படியும் அப்படியும் கடத்தும் அந்தரங்கமான வேலை மட்டிக்கு! சரியான நேரத்தில்தான் அவன் வேலைக்கு வந்து சேர்ந்தான்.

அப்போது கிருஷ்ணாயிலுக்கு ஒரே கிராக்கி! ஜனங்கள் ஒரு லிட்டர் கிருஷ்ணாயிலுக்கே வீதிவீதியாக அலைய வேண்டிய நிலை. மணிக்கணக்கில் க்யூ! அப்படி நின்றாலும் கூட கடைசியில் “ஸ்டாக் இல்லை” என்ற கைவிரிப்பு. இன்னும் ஒரு வாரம் கழிந்தால் கிருஷ்ணாயில் ஒரு சொட்டுக் கூடக் கிடைக்காது.

இப்படிப்பட்ட பஞ்சநிலை இருக்கும் போது தங்கசாமி சும்மா இருப்பாரா? ஐந்நூறு டின் கிருஷ்ணாயிலை எப்படியோ மடக்கிப் போட்டு விட்டார். ஒரு வாரத்திற்கு அதைப் பதுக்கி வைத்தால் போதும்…! இரட்டிப்பு விலை கிடைக்கும்.

“டேய் மட்டி!” என்றார் தங்கசாமி.

“எஜமான்!” என்றவாறு மட்டி ஓடி வந்து நின்றான்.

“லாரியிலே ஐந்நூறு டின் கிருஷ்ணாயில் வந்திருக்கு! வீட்டுத் தோட்டத்திலே குழி தோண்டிப் புதைச்சி வை!” என்று இரகசிய உத்தரவு போட்டார் தங்கசாமி.



அதை நிறைவேற்ற உடனே அவ்விடம் விட்டு அகன்ற மட்டி, ஒரு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தான்.



“அதுக்குள்ளே முடிஞ்சிதா?” என்றார் தங்கசாமி.

“ஆமா, எஜமான்! எல்லாத்தையும் குழி தோண்டிப் புதைச்சிட்டேன்!.. அதிலே ஒரு சின்ன சந்தேகம்” என்றான் மட்டி.

“சந்தேகமா? வரக் கூடாதே.. சரி.. சரி.. கேளு!” என்றார் தங்கசாமி.  

“ஒண்ணுமில்லே எஜமான். காலி டின்களையெல்லாம் எங்கே அடுக்குறது?” என்றான் மட்டி.

அவ்வளவு தான். டீக்கடை நாயர் முன்பு கிழித்த அதே சீட்டை, இப்போது எண்ணெய் மண்டி தங்கசாமி மறுபடியும் கிழித்தார்.

Monday 12 September 2011

பூரணச் சந்திர சாமியார்

பூரணச் சந்திர சாமியார் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது! தலை ‘வழவழ’ வென்று பூரண வழுக்கை! சடா முடியோடு துறவறத்தை ஆரம்பித்தவர் தாம் இப்படியாகி விட்டார்! கன்னியாகுமரி முதல் பத்திரிநாத் வரை அவர் ஏறாத கோயிலில்லை! பார்க்காத மதாச்சாரியார்களில்லை! செய்யாத் தத்துவ விசாரணையில்லை! எதற்காக? சொர்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக!

‘சொர்க்கம், சொர்க்கம்’ என்று எல்லோரும் சொல்லுகிறார்களே, அது எப்படி இருக்கும்? எங்கே இருக்கிறது? அதற்குப் போகும் வழி தான் என்ன? யாராவது போய்விட்டு வந்தவர்கள் இருக்கிறார்களா?

பல இடங்களில் ஜனங்கள் பேசிக் கொள்வதைப் பற்றிச் சாமியார் கேள்விப்பட்டிருக்கிறார்.

சொர்க்கத்தில் சொர்ணமயமான மாளிகை இருக்குமாம்! வண்ண வண்ண ஒளியலங்காரங்கள் கண்ணைப் பறிக்குமாம்! வாசனைத் திரவியங்களின் சுகந்தம் எந்நேரமும் நிறைந்திருக்குமாம்! வைர வைடூரியங்கள் ஜொலிக்கும் அம்சதூளிகா மஞ்சம் இருக்குமாம்! ரதி, ரம்பை போன்ற தேவகன்னியர் அதை இன்பமாக அசைத்துக் கொண்டே இருப்பார்களாம்! பன்னீர் தெளித்திடப் பாவையர் இருப்பராம்! நன்னீராட்டிட நாரியர் வருவராம்! கானம் பொழிந்திடக் குவிலியர் ஒரு புறம்! களி நடம் புரிந்திட மயிலியர் மறுபுறம்! கால் பிடித்திடக் காரிகையர் உண்டாம்! கனிச்சாறு பிழிந்து கற்கண்டைக் கலந்து குங்குமப் பூவினைக் கணக்குடன் சேர்த்து, கொஞ்சிக் கொடுத்திடக் கன்னியர் உண்டாம்! வரையாது வழங்கிடும் காமதேனு உண்டாம்! வேண்டியது கொடுத்திடும் தேவதாரு உண்டாம்!

அடடா! சொர்க்கமென்பது இப்படி இருந்தால் அங்கே இருப்பதற்கு எவ்வளவு சுகமாக இருக்கும்! ஒரு கணம் இந்தக் கற்பனைச் சுகத்தில் மிதக்க சாமியார் மறுகணம் விழித்துக் கொள்வார்!

சே! இந்தச் சுகங்களைச் சொர்க்கத்தில் அனுபவிக்கவா இந்த ஜன்மத்தில் துறவு பூண்டிருக்கிறார்? இல்லவே இல்லை! நிச்சயம் இல்லை! இந்தச் சுகங்கள் தாம் மண்ணுலகிலேயே இருக்கின்றனவே! இவற்றை நித்த நித்தம் அனுபவிக்கும் எத்தனையோ செல்வந்தர்கள் நம்மிடையில்   இருக்கிறார்களே! இது தான் சொர்க்கமென்றால் அந்தச் செல்வந்தர்கள் சொர்க்கத்திற்குப் போய் என்னத்தை அனுபவிக்கப் போகிறார்கள்?

இத்தனை விசாரங்களோடும் ஊர் ஊராய்ச் சுற்றிக் கொண்டிருந்த பூரணச் சந்திர சாமியார் கடைசியில் விதேக நாட்டின் தலைநகரான மிதிலாபுரிக்கு வந்து சேர்ந்தார்.

அங்கே பெரிய மாளிகைக்கு முன் சிறு கூட்டமொன்று காத்துக் கொண்டிருந்தது.  அழகான பெண் ஒருத்தி உப்பரிகையிலிருந்து இறங்கி வந்து, கூடியிருந்தவர்களுக்குத் தான தருமங்கள் செய்தாள். பெற்றுக் கொண்டவர்கள் வாயார வாழ்த்திவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

விசாரித்துப் பார்த்தபோது அந்தப் பெண் கனகவல்லி என்ற பெயரினள் என்றும் ஊரறிந்த நாட்டியக்காரி என்றும் சாமியாருக்குத் தெரிய வந்தது.  அவர் தொலை தூரம் நடந்து வந்திருந்ததால் பசி வயிற்றைக் கிள்ளிவே பிச்சைக்காகக் கனகவல்லியின் முன்பு போய் நின்றார்.

அப்போது தூரத்தில் கொட்டு முழக்க சத்தத்தோடு பெருங்கூட்டம் வந்து கொண்டிருந்தது.  கனகவல்லி தன் வேலைக்காரியை அழைத்து, “அது என்ன?” என்று கேட்டாள்.  நகரின் அங்காடித் தெருவில் ஒரு வணிகர் இறந்துவிட்டாரென்றும், அது தொடர்பான சவ அடக்க ஊர்வலம் என்றும் வேலைக்காரி பதில் சொன்னாள்.

இதைக் கேட்ட கனகவல்லி, “அப்படியா?  உடனே நீ போய் அந்த வணிகர் சொர்க்கத்திற்குப் போகிறாரா அல்லது நரகத்திற்குப் போகிறாரா என்று தெரிந்து கொண்டு வா” என்று சொல்லி வேலைக்காரியை அனுப்பி வைத்தாள்.

சாமியாருக்கு ரோமாஞ்சனம் ஏற்பட்டது! இதற்காக அவர் எங்கெங்கே அலைந்து விட்டு வந்திருக்கிறார்! இந்தப் பெண் சர்வ சாதாரணமாகச் சொல்லி அனுப்புகிறாளே! பிச்சைக்காக வந்த இடத்தில் பிரச்சினை தீர்ந்துவிடும் போலிருக்கிறதே! ‘சரி பார்ப்போம்’ என்று சாமியாரும் பொறுமையாக நின்றார்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த வேலைக்காரி, “அந்த வணிகர் சொர்க்கத்திற்குத்தான் போகிறார்!” என்று திட்டவட்டமான பதிலைச் சொன்னாள்.

“தாயே!” என்றவாறு சாமியார் திடீரென்று சாஷ்டாங்கமாகக் கனகவல்லியின் கால்களில் விழுந்தார். திடுக்கிட்டுப் போன கனகவல்லி, தான் ஒரு சாதாரண நாட்டியக்காரி என்றும், அடிகளார் அப்படிச் செய்வது அபசாரம் என்றும் சொல்லி ஒதுங்கி நின்றாள்.

“அப்படியில்லை தாயே! சொர்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் சுற்றாத இடமில்லை.  ஆனால் நீ அதைத் தெரிந்து வைத்திருக்கிறாய்.  வேலைக்காரி வந்து அந்த வணிகர் சொர்க்கத்திற்குத்தான் போகிறார் என்று அவ்வளவு திட்டவட்டமாகச் சொன்னாளே, அது எப்படி?” என்று விநயமாகக் கேட்டார் சாமியார்.

“அதைக் கேட்டீர்களா, சாமி!” என்று தொடங்கிய கனகவல்லி, “ஊரிலே உள்ள நாலு பேர் ‘மகராசன் போய்விட்டானே’ என்று வருந்திப் பேசினால் போவது சொர்க்கம் என்று அர்த்தம்! ‘சனியன் தொலைந்தது’ என்று வெறுப்பைக் கக்கினால் போவது நரகம் என்று அர்த்தம்!” என்று விளக்கம் தந்தாள்.

கனகவல்லியின் பதிலைக் கேட்ட சாமியாருக்கு சொர்க்கத்தைப் பற்றி எல்லாம் புரிந்துவிட்டது! அது வேறு எங்கேயும் இல்லை! இதே உலகத்தில் மக்கள் மத்தியில் தான் இருக்கிறது!



Monday 5 September 2011

காயகல்பம்

அவன் ஒரு இளம் விஞ்ஞானி.  இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான்.  அவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஓர் இலட்சியம்.  குறிப்பிட்ட ஒரு மருந்தைக் கண்டுபிடித்து விட வேண்டும்!
அப்படிப்பட்ட அந்த மருந்துதான் என்ன?

பழங்காலத்தில் நம் முன்னோர்களிடம் காயகல்பம் என்ற மருந்து இருந்ததாம்! அதைச் சாப்பிட்டால் வயோதிகர்கள் இளைஞர்களாக மாறிவிடுவார்கள்! இத்தகைய அரிய மருந்தைச் செய்யும் முறை இரகசியமாகவே வைக்கப்பட்டு, முன்னோர்கள் மறைந்த போது அதுவும் மறைந்துவிட்டதாம்! அவர்கள் மட்டும் கொஞ்சம் பரந்த மனப்பான்மை உள்ளவர்களாயிருந்து, காயகல்பம் செய்யும் முறைகளை ஓலைக் குருத்துக்களில் குறித்து வைத்து, பின் சந்ததியாருக்கு விட்டுச் சென்றிருந்தால், இப்போது நாம் அதை அதியற்புதமாக முறைபடுத்தி, காயகல்பத்தைப் பெரும் அளவில் உற்பத்திச் செய்து ‘பாட்டில்’களிலடைத்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்! கிழவனைக் குமரனாக்கும் மருந்தென்றால் கிராக்கிக் கேட்கவா வேண்டும்! அதிகமான அளவுக்கு அந்நியச் செலாவணி சம்பாதித்திருக்க முடியும்!

துரதுஷ்டவசமாக அந்தக் காயகல்பம் செய்யும் முறை நமக்குக் கிடைக்காமலே போய்விட்டது! கிடைக்காமல் போனாலென்ன? நமது மூளை எங்கே போய்விட்டது? ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தால் போகிறது! இந்த ஆராய்ச்சியில் தான் இளம் விஞ்ஞானி தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான்!
ஐந்தாண்டுக் காலம் அவன் அயராமல் பாடுபட்டான்! புடம் போடுதல் என்ற தமிழ் நாட்டுச் சித்த வைத்திய முறையையும் நவீன இரசாயன முறைகளையும் ஒருங்கிணைத்து ஆராய்ச்சிகைளத் தொடர்ந்தான்! அவன் பட்ட பாடு வீண் போகவில்லை! கடைசியாக காயகல்பத்தைக் கண்டுபிடித்து விட்டான்! இதைக் கிழக் குரங்குகளுக்குக் கொடுத்தால் இளங் குரங்குகளாக மாறிவிட்டன! கிழக் குதிரைகளோ குட்டிக் குதிரைகளாய் மாறின! பட்ட மரங்களில் அதை ஊசி மூலம் செலுத்தினால் அவை துளிர்விட்டுப் பச்சைப் பசேலென்று வளர ஆரம்பித்தன!

இளம் விஞ்ஞானிக்கு ஓர் ஆசை! வயோதிகம் அடைந்து விட்;ட தன் தாய் தந்தையருக்கு இந்த மருந்தைக் கொடுத்து அவர்களை இளமையோடு பார்த்து மகிழ வேண்டும்! மருந்தும் கையுமாக நேரே இந்தியாவிற்கு வரவேண்டுமென்று தான் முதலில் நினைத்தான்! ஆனால் வயோதிக நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தாய் தந்தையரைப் பார்ப்பது மனத்திற்கு மிக்க வேதனையாக இருக்கும் என்று கருதி, காயகல்பம் அடங்கிய இரண்டு ‘பாட்டில்’களை இந்தியாவிற்குப் பார்சல் செய்தான்! அதில் ஒரு ‘டோஸ்’ எவ்வளவு, அதை எப்படி உட்கொள்வது என்பது பற்றி விவரங்களையெல்லாம், தனியாகக் கடிதத்தில் எமுதி, ‘ஏர் மெயில்’ தபாலில் போட்டான்.

ஒரு மாதம் கழித்துத் திடீரென்று இந்தியாவிற்குத் திரும்பினால் இளமைக் கோலத்தில் தாய் தந்தையரைத் தரிசிக்க முடியும்! இதை நினைக்கும்போதே இளம் விஞ்ஞானிக்கு உள்ளமெல்லாம் இனித்தது! இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஒரு மாதம் கழித்து விமானத்தில் பயணமானான்.

இப்போது அவன் இந்தியாவிற்கு வந்து விட்டான்! தன் சொந்த ஊருக்கும் வந்துவிட்டான்! டாக்ஸியில் வந்து வீட்டுக்கு முன்பு இறங்கினான்.
எதிர்பார்த்தது போலவே வயதான அவன் தாயார், வீட்டு வாயிற்படியில் காத்துக் கொண்டிருக்கவில்லை! ஆனால்.. தாயாரின் முகச்சாயையுடன் கூடிய பதினெட்டு வயது இளம் பெண் நின்று கொண்டிருந்தாள்! அவள் இடுப்பை அழகான ஒரு கைக் குழந்தை கவ்விக் கொண்டிருந்தது!

இளம் விஞ்ஞானிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை! “அம்மா” என்று கூவியவாறே ஓடிப் போய்த் தாயின் காலில் விழுந்து வணங்கினான்!
இளந்தாய் அவனை அன்பாக உச்சி மோந்து, “மகனே!” என்று கன்னங்களை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தாள்!

அவன் கனவு பலித்துவிட்டது! காயகல்பம் சரியாகத் தான் வேலை செய்கிறது என்பது நிருபணமாகிவிட்டது! தாயைப் பார்த்தாயிற்று! தந்தையையும் பார்த்து விட்டால்..! ஆவல் தாங்க முடியாதவனாக, “அப்பா எங்கே, அம்மா?” என்றான் இளம் விஞ்ஞானி.

“அதை ஏனப்பா கேட்கிறாய்?” என்றவாறு தாயார் கண்ணைக் கசக்கிக் கொண்டதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனவனாய், “என்னம்மா, அப்பா இறந்துவிட்டாரா?” என்று திகிலுடன் கேட்டான்.

அதற்கு அவன் தாய், “பார்சலில் மருந்து வந்ததும் உன் அப்பாவுக்கு அளவுக்கு மீறிய மகிழ்ச்சியாய் போய்விட்டது! அதில் ஒரு ‘டோஸ்’ எடுத்து முதலில் எனக்குக் கொடுத்தார்! முறைப்படி நான் சாப்பிட்டதும் இப்படி இளமையாக மாறிவிட்டேன்! இதைப் பார்த்ததும் அவருக்குத் தலைகால் புரியவில்லை! அந்த வேகத்தில் ஒரு ‘டோஸ்’ மருந்துக்குப் பதில் இரண்டு ‘டோஸ்’ சாப்பிட்டார்! அதன் பலன்..! இதோ இப்படி மாறிவிட்டார்!” என்று இடுப்பிலே கவ்விக் கொண்டிருந்த குழந்தையைக் காட்டினார்!