Thursday 15 September 2011

சீட்டுக் கிழிப்பு

“உன் பேரென்ன?”

நடு விரலையும் ஆள்காட்டி விரலையும், கொஞ்சம் இடைவெளி விட்டு இணைத்து, உதடுகளின் குறுக்காக நீட்டுவாக்கில் இணைத்து, வாயில் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலை பாக்குத் தாம்பூலத்தை ‘புளிச்’ என்று முற்றத்தில் துப்பியவாறே, எதிரில் நின்ற இளைஞனைப் பார்த்து, மேற்கண்ட கேள்வியைக் கேட்டார் ஊஞ்சலில் அமர்ந்து மெதுவாக ஆடிக் கொண்டிருந்த தங்கசாமி.

“புத்தி சிகாமணி” எனப் “பளிச்” என்று பதில் வந்தது எதிரில் நின்ற இளைஞனிடமிருந்து.

“பேரைக் கேட்டாலே பயமாக இருக்கு” என்று தமக்குள்ளாக முனகிக் கொண்டே தங்கசாமி, “ஆமா.. என்ன படிச்சிருக்கே?” என்றார்.

“பி.ஏ. பர்ஸ்ட் கிளாசிலே பாஸ் பண்ணியிருக்கேன் சார்.. இதோ பாருங்க சர்ட்டிபிகேட்!” என்றவாறு இளைஞன் சான்றிதழ்களை எடுத்து நீட்டினான்.

பக்கத்தில் வைத்திருந்த வெள்ளிக் கூஜாவிலிருந்து ஒரு மடக்குத் தண்ணிரை வாயில் ஊற்றிக் கொண்டு, “சளாபுளா” என்று கொப்பளித்து, அதை முற்றத்தில் துப்பிவிட்டு, “நீ என்ன பொய்யா சொல்லப் போறே! சர்ட்டிபிகேட் எதுக்கு?.. இதப் பாரு தம்பி.. இப்ப எனக்கு வேண்டியது, படிச்சவனுமில்லே, புத்திசாலியுமில்லே! ஒரு சாதாரண ஆளுதான் வேணும்!” என்றார் தங்கசாமி.

“சாதாரண வேலையையும் நான் நல்லபடியாச் செய்து முடிப்பேன் சார்!” இளைஞன் நம்பிக்கையை விடாமல் பேசினான்.

“வீணா ஏன் வளத்துக்கிட்டு.. நிச்சயமாச் சொல்றேன், தம்பி.. உன்னைப் போல ஆளு எனக்குத் தேவையில்லை” என்று ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலிலிருந்து எழுந்தவாறு இன்டர்வியூவிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் தங்கசாமி. இளைஞன் ஏமாற்றத்துடன் வெளியேறினான்.

தங்கசாமிக்குப் பெயர்தான் அப்படி! தங்கம் வெள்ளி வியாபாரம் ஒன்றுமில்லை. எண்ணெய் மண்டி வைத்திருந்தார். அங்கே எடுபிடி வேலைகளைக் கவனித்துக் கொள்ள ஆள் தேவையாய் இருந்தது. அவன் அசமந்தமாக இருந்தால் ரொம்பத் தேவலை. சொன்னதைச் சொன்னது போல் செய்து முடித்தால் போதும். வேறு எதைப்பற்றியும் புரிந்து கொள்ள முடியாதவனாக இருக்க வேண்டும்.

தங்கசாமிக்கு அவர் மூளையின் சக்தியில் அபார நம்பிக்கை உண்டு. “ஒரு புத்திசாலி இருக்கும் இடத்தில் இன்னொரு புத்திசாலிக்கு வேலை இல்லை!” என்று அவர் அடிக்கடிச் சொல்லுவார். அவர் புத்திசாலியானதால் வேறொரு புத்திசாலியை வேலைக்கு வைத்துக் கொண்டால், அவருக்குத் தான் தொந்தரவு. “அது என்ன? இது என்ன?” என்று அடிக்கடி துருவித் துருவிக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் பிஸினஸ் என்ன ஆவது? எண்ணெய் மண்டி பிஸினசில் அப்படி என்ன தொந்தரவு? அதில் தான் விஷயம் இருக்கிறது. எண்ணெய் விற்ற லாபத்திலா தங்கசாமி மூன்றடுக்கு மாளிகைக் கட்டடத்திற்குச் சொந்தக்காரராக முடியும்? கள்ள மார்க்கெட் என்றால் அவருக்குக் கரும்பு தின்ற மாதிரி. இப்படி வாங்கி அப்படி மாற்றினால் போதும்! கொள்ளை லாபம் வரும்! இந்த விஷயம் இரண்டாமவனுக்குத் தெரியாதவரைதான் நல்ல பாதுகாப்பு. அதனால் தான் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளையாக ஓர் எடுபிடியாள் கிடைத்தால் தேவலை என்று தங்கசாமி தேடிக் கொண்டிருந்தார். பலரிடம் சொல்லியும் வைத்திருந்தார். அதற்குத் தான் ஆரம்பத்தில் சொன்னது போல், பலரும் வேலைக்காக வந்து போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஆள் அகப்படவில்லை.

அடுத்த நாள் காலை தங்கசாமியைத் தேடி ஓர் ஆள் வந்து சேர்ந்தான். “வணக்கம்” போட்டுவிட்டுக் கைகட்டி நின்றான்.

“யாரப்பா..! என்ன விஷயம்?” என்றார் தங்கசாமி.

“எஜமானுக்கு ஆள் வேண்டுமாமே?” பவ்யமாகக் கேட்டான் வந்தவன்.

“ஆமாம்.. உன் பெயர் என்ன?” தங்கசாமி கேட்டார்.

“மட்டி!” என்றான் வந்தவன்.

“பேஷ்.. பெயரே பொருத்தமாயிருக்கு!” என்று தமக்குள் நினைத்துக் கொண்ட தங்கசாமி, “இதுக்கு முன் எங்கே வேலை பார்த்தே?” என்று கேட்க, “நாயர் கடையிலே வேலை பார்த்தேன், எஜமான்” என்றான் மட்டி.

“ஏன் அந்த வேலையை விட்டுட்டே?” என்றார் தங்கசாமி.

“ஒரு நாள் தேயிலைக்குப் பதிலாக புகையிலையைப் போட்டு டீ கொடுத்தேன். உடனே நாயர் என்னை வெளியே அனுப்பிட்டார்” என்று மட்டி மரியாதையாகப் பதில் சொன்னான்.

பலே! இப்படிப்பட்ட ஆள்தான் தங்கசாமிக்கு வேண்டும். மட்டிக்கு உடனே வேலை கிடைத்து விட்டது.

கள்ள மார்க்கெட்டில் கைமாறும் எண்ணெய் டின்களை தங்கசாமியின் சொல்படி, இப்படியும் அப்படியும் கடத்தும் அந்தரங்கமான வேலை மட்டிக்கு! சரியான நேரத்தில்தான் அவன் வேலைக்கு வந்து சேர்ந்தான்.

அப்போது கிருஷ்ணாயிலுக்கு ஒரே கிராக்கி! ஜனங்கள் ஒரு லிட்டர் கிருஷ்ணாயிலுக்கே வீதிவீதியாக அலைய வேண்டிய நிலை. மணிக்கணக்கில் க்யூ! அப்படி நின்றாலும் கூட கடைசியில் “ஸ்டாக் இல்லை” என்ற கைவிரிப்பு. இன்னும் ஒரு வாரம் கழிந்தால் கிருஷ்ணாயில் ஒரு சொட்டுக் கூடக் கிடைக்காது.

இப்படிப்பட்ட பஞ்சநிலை இருக்கும் போது தங்கசாமி சும்மா இருப்பாரா? ஐந்நூறு டின் கிருஷ்ணாயிலை எப்படியோ மடக்கிப் போட்டு விட்டார். ஒரு வாரத்திற்கு அதைப் பதுக்கி வைத்தால் போதும்…! இரட்டிப்பு விலை கிடைக்கும்.

“டேய் மட்டி!” என்றார் தங்கசாமி.

“எஜமான்!” என்றவாறு மட்டி ஓடி வந்து நின்றான்.

“லாரியிலே ஐந்நூறு டின் கிருஷ்ணாயில் வந்திருக்கு! வீட்டுத் தோட்டத்திலே குழி தோண்டிப் புதைச்சி வை!” என்று இரகசிய உத்தரவு போட்டார் தங்கசாமி.



அதை நிறைவேற்ற உடனே அவ்விடம் விட்டு அகன்ற மட்டி, ஒரு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தான்.



“அதுக்குள்ளே முடிஞ்சிதா?” என்றார் தங்கசாமி.

“ஆமா, எஜமான்! எல்லாத்தையும் குழி தோண்டிப் புதைச்சிட்டேன்!.. அதிலே ஒரு சின்ன சந்தேகம்” என்றான் மட்டி.

“சந்தேகமா? வரக் கூடாதே.. சரி.. சரி.. கேளு!” என்றார் தங்கசாமி.  

“ஒண்ணுமில்லே எஜமான். காலி டின்களையெல்லாம் எங்கே அடுக்குறது?” என்றான் மட்டி.

அவ்வளவு தான். டீக்கடை நாயர் முன்பு கிழித்த அதே சீட்டை, இப்போது எண்ணெய் மண்டி தங்கசாமி மறுபடியும் கிழித்தார்.

No comments:

Post a Comment