Wednesday 5 October 2011

பூவும் மீனும் / வாசம் தேடும் தூக்கம்

அவளுக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது! இருக்காதா பின்னே? காலையிருந்து அவளுக்கு எத்தனை உளைச்சல்!

இரண்டு நாளைக்கு முன் இரவோடு இரவாக, கட்டுமரம் ஏறிக் கடலுக்குள் போன கணவன் உதயாதி நாழிகைக்குத் திரும்பிவிடுவான் என்று, கட்டான இடைப்பகுதியில், வலது கையின் செங்காந்தள் மலர் போல் தொங்கும் விரல்கள் ஒய்யாரமாய்ப் பதிந்திருக்க, இடது கையின் ஆலிங்கனத்தைப் பெற்றிருந்த வெற்றுப் பிரம்புக் கூடை. இடையில் இன்னொரு பகுதியைத் தொற்றிக் கொண்டிருக்க, கடற்கரை மணலில் எவ்வளவு நேரந்தான் காத்துக் கொண்டிருப்பது!

கடல்நீரில் குளித்தெழுந்த செங்கதிர்ச் சூரியன், உச்சிக்கு வந்து வெள்ளிப் பாளமாய் உரு மாறிவிட்ட பிறகும் கணவன் திரும்பாமல் போகவே, தெம்போடு நின்றவள் துவண்டு போய் ஒரு மணல் திட்டில் அமர, சூரியன் மேலைத் திசையில் சுழலுகின்ற பொன் தாம்பாளமாய் மாறியிருந்த நேரத்தில், கட்டுமரத்தில் கணவன் வந்து இறங்க, கொண்டு வந்த மீனையெல்லாம் அவள் கூடையில் அள்ளிக் கொட்டிக் கொள்கிறாள்

அங்கிருந்து மூன்று மைல் தூரத்தில் சந்தை! அங்கே போனால் தான் மீனை விற்றுக் காசாக்கி, அரிசி வாங்கிக் கொண்டு வர முடியும்!

சந்தைக்குச் சென்றவள் மீனையெல்லாம் நல்ல விலைக்கு விற்றாகிவிட்டது! அரிசியும் வாங்கியாகிவிட்டது! விரைவில் வீட்டுக்குத் திரும்பி, காத்துக் கொண்டிருக்கும் கணவனுக்குப் பொங்கிப் போட வேண்டும் என்ற எண்ணத்தில் வேக நடை போட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாள்.

அப்போதுதான் அவளுக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. கண்ணை மூடிக் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் போலிருந்தது. சரிதான்! அப்படித் தூங்கிவிட்டால்... கடலுக்குள் சென்று இரண்டு நாளைக்குப் பின் திரும்பியிருக்கும் கணவன் குடிசையில் ஆசையாகக் காத்துக் கொண்டிருப்பானே!

தூக்கக் கிறக்கத்திலும் அவள் கால்கள் நடையைக் கொஞ்சம் எட்டிப் போட்டன! அவளுக்கும் ஆசை இருக்காதா?

அந்த நேரம் பார்த்துத்தானா பாழாய்ப் போன மழை ‘சடசட’வெனக் கொட்ட வேண்டும்? அதற்கென்ன நேரமா காலமா? இடமா தேசமா? மீன்காரியின் அவசரம் அதற்கெங்கே தெரியப் போகிறது?

பாதைக்குப் பக்கத்திலிருந்த குடிசைக்குள் மழைக்காக ஒதுங்கினாள் மீன்காரி. உள்ளே மினுக்கு மினுக்கென்று ஒரு சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ‘கம்’மென்ற மலர் மணம் குடிசை முழுதும் நிரம்பியிருந்தது. ஒரு பக்கத்தில் இரண்டு மூன்று கூடைகள் இருந்தன. எல்லாவற்றிலும் மல்லிகை மலர்கள்.

குடிசைக்குள் தடுத்திருந்த ஒரு சின்ன அறைக்குள்ளிருந்து பூக்காரி வந்தாள். மழைக்காக ஒதுங்கியது பற்றி மீன்காரி சொல்ல, பூக்காரியும் சரியென்று அவளை உட்காரச் சொன்னாள்.

துணியில் முடிந்த அரிசிப் பொட்டலத்துடன் பிரம்புக் கூடையை ஒரு புறத்தில் வைத்த மீன்காரிக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. இருந்தாலும் கணவனின் நினைப்பில் சமாளித்தவாறு உட்கார்ந்திருந்தாள்.

மழையோ ‘சோ’வெனப் கொட்டிக்கொண்டிருந்தது. கடற் கணவனைப் பிரிந்த மேகத்திற்கு எத்தனை நாள் ஏக்கமோ? ஆசை தீரப் பொழிந்து கொண்டிருந்தது. நடுநிசியும் ஆகிவிட்டது! இன்னும் நின்றபாடில்லை.

மீன்காரி நினைத்துக் கொண்டாள்: சரி..! கணவன் இதற்குள்ளாக டீக்கடையில் ஏதாவது பொரை பிஸ்கட் வாங்கித் தின்றுவிட்டு, நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பான்! இனிமேல் மழை விட்டாலும் கூட ஒண்டிக் கட்டையாய் ஊருக்குத் திரும்ப முடியாது! அங்கேயே தூங்கிவிட்டுக் காலையில் போகவேண்டியது தான்’- பூக்காரியும் அதை ஆமோதித்தாள்.

பூக்கூடைகளுக்குப் பக்கத்திலேயே இரண்டு பெண்களும் தலை வைத்துப் படுத்துக் கொண்டார்கள். அம்மாடி! மீன்காரிக்கு நிம்மதி! நன்றாகத் தூங்கலாம்! கண்ணை நன்றாக மூடிக்கொண்டாள். முதலில் ஒருக்களித்துப் படுத்தவள் பிறகு புரண்டு படுத்தாள்.

இது என்ன ஆச்சரியம்! கண்கள் தாம் மூடிக்கொண்டிருக்கின்றனவே தவிர, தூக்கம் மட்டும் வரவில்லையே! முனகிக் கொண்டே புரண்டு படுத்தாள்.

“என்ன, புருஷன் நினைப்பு வந்திடுச்சா?” பூக்காரி கேட்டாள்.

“புருஷன் நினைப்புமில்லை ஒண்ணுமில்லே! அதை அப்பவே விட்டுட்டேன்!” மீன்காரி பதில் சொன்னாள்.

“பின்னே ஏன் தூக்கம் வரவில்லை?” பூக்காரி மீண்டும் கேட்டாள்.

“அது தான் எனக்குத் தெரியல்லே” மீன்காரி மறுபடியும் புரண்டாள்.

எவ்வளவு நேரந்தான் இப்படியே நகர்வது! மீன்காரியின் முனகல் பூக்காரிக்கும் இடைஞ்சலாயிருந்தது. மீன்காரியின் எள்ளுப் பூ நாசி ‘சர்’ரென்று சொடுக்குப் போட்டு ஏதோ அடைப்பை அடிக்கடி போக்கிக் கொண்டிருந்தது.

. “சனியன், ஏன் தான் தூக்கம் வரல்லியோ?” என்று வாய்விட்டு வேறு பிதற்ற ஆரம்பித்தாள் மீன்காரி.

திடீரென்று பூக்காரிக்கு ஞானோதயம் ஆனது போலிருந்தது!

எழுந்தாள்! தலைமாட்டிலிருந்த பூக்கூடைகளை, தடுத்திருந்த உள் அறைக்குள் கொண்டு போய் வைத்தாள். பிறகு மீன் கூடையை எடுத்துத் தலை மாட்டுக்குப் பக்கத்தில் வைத்தாள்.

கூடைக்குள்ளிருந்து ‘குப்’பென்று மீன் வாசைன வீசியது. அடுத்த கணம்… மீன்காரி குறட்டைவிட ஆரம்பித்தாள்!




No comments:

Post a Comment